TNPSC Thervupettagam

இடஒதுக்கீட்டின் வரலாறு

February 1 , 2019 2156 days 2158 0
  • மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர சட்டம் இயற்றியுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு, உயர் ஜாதி மக்களுக்கு பலனளிக்கும் என்ற வாதம் பெரிய அளவில் உருவாகியுள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு, இடஒதுக்கீட்டின் அடிப்படை தத்துவங்களைப் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது.
இடஒதுக்கீடு
  • சரித்திர, சமூக அடிப்படைகளைப் புரிந்து கொண்டால்தான் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு சரியானதா என்பதை நாம் எல்லோரும் உணர முடியும். சுதந்திரம் அடைவதற்கு முன்பே, அன்றைய ஆங்கில அரசு 1853-ஆம் ஆண்டில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் ஒடிஸாவின் ஒரு பகுதியை உள்ளடக்கிய சென்னை ராஜதானியில் ஏற்பட்ட ஜாதியப் பிரச்னை காரணமாக, இடஒதுக்கீட்டுக்கு முதன்முதலில் வழிகோலியது.
  • அன்றைய நெல்லூர் மாவட்ட ஆங்கிலேய ஆட்சியர், தனது அலுவலகத்தில் வேலை செய்த 49 பேரும் பிராமணர்கள் எனவும், அவர்கள் எல்லோரும் உறவினர்களான மூன்று குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டுபிடித்தார்.
போர்ட் ஆஃப் ரெவின்யு
  • அவர்களைத் தட்டிக்கேட்க முடியாத நிலைமை காணப்பட்டது. அது குறித்து ஓர் அறிக்கையை அன்றைய "போர்ட் ஆஃப் ரெவின்யு'விற்கு ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
  • அப்போதுதான் இந்த நிர்வாகச் சீர்கேடுகள் உயர்நிலை நிர்வாக அதிகாரிகளின் மத்தியில் ஒரு விவாதப் பொருளாக உருவாகியிருந்தது.
  • ஒரு நிர்வாகக் கட்டமைப்பில் அடங்கிய மக்களில் பெருவாரியானவர்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இல்லாமல் நல்ல நிர்வாகம் நடைபெற முடியாது என்பதுதான் அந்த விவாதத்தின் மையக் கருத்து. அதற்கு, அரசு அதிகாரிகள் அனைத்து மக்களின் குறிப்பாக பெருவாரியான ஜாதிகளைச் சார்ந்தவர்களாக இருப்பது அவசியம் எனத் தீர்மானித்தனர்.
  • இந்த அடிப்படையில்தான், "போர்ட் ஆஃப் ரெவின்யு' எனப்படும் வருவாய் நிர்வாக ஆணையம், "போர்ட் ஸ்டேன்டிங் ஆர்டர்ஸ் (பி.எஸ்.ஓ) 125 (எண்), 1854' என்ற உத்தரவை அளித்தது. அதன்படி, "அரசு ஊழியர்களை மாவட்ட ஆட்சியர்கள்  தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தும்போது, உயர் ஜாதியினரை அதிக அளவில்  தேர்ந்தெடுக்கக் கூடாது.  தாசில்தார்களில் ஒரு பகுதி, பிராமணர்கள் அல்லாதவர்களாக இருக்கும்படி பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டு பிரிவினர்களில் ஒன்று, அந்த மாவட்டத்தின் பெருவாரியான ஜாதியினராக இருக்க வேண்டும்.'
  • அன்றைய "மதராஸ் பிரசிடென்சி'யின் கணக்கீட்டுத் தலைவரான டபிள்யூ.ஆர்.கார்னிஷ் என்னும் அதிகாரி, "பிராமண ஜாதியின் உறுப்பினர்கள் கீழ்நிலை நிர்வாகத்தில் பெருவாரியான எண்ணிக்கையில் உள்ளனர் என்பதால், அதை குறைக்கும் நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்' என்ற அறிக்கை அளித்தார்.
அரசியல் ரீதியாக
  • அரசியல் ரீதியாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு நன்மை கிடைக்காது என்பதால் இந்த நடவடிக்கையைத் தள்ளிப் போடக்கூடாதுஎன்றும் அவர் கூறினார்.
  • நிர்வாகத்தில் பிராமணர்கள் அல்லாத இந்துக்களும், முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் உருவாக வேண்டும். ஒரு ஜாதியினர் மிக அதிக அளவில் நிர்வாக உறுப்பினர்களாக இருப்பது, ஆட்சிக்குப் பல சிக்கல்களை உருவாக்கும் என்றும் வருவாய் ஆணையத்துக்கு அவர் அறிக்கை அளித்தார். இது, "மதராஸ் பிரசிடென்ஸியின்” கணக்கீட்டு அறிக்கை, 1871' எனப் பெயரிடப்பட்டது.
  • அன்றைய வருவாய் ஆணையம் வழங்கிய 1854-ஆம் ஆண்டு ஆணைக்கு பின்னரும், 1881-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, "மதராஸ் பிரசிடென்ஸி'யில், பிராமணர்களே தொடர்ந்து பல அரசு பதவிகளில் இருந்து வந்தனர்.
  • 6 சதவீத ஜனத்தொகையில் இருந்த பிராமணர்கள் 19.2 சதவீத பணிகளில் இருந்தனர். 87.9 சதவீத மற்ற இந்து ஜாதியினர் 55.4 சதவீத பணிகளிலும், 6.2 சதவீத இஸ்லாமியர்கள், 16.8 சதவீத பணிகளிலும் இருந்தனர். ஜனத்தொகையில், 2.2 சதவீத  கிறிஸ்தவர்கள் 41.1 சதவீத பணிகளிலும், 0.1 சதவீத ஜனத்தொகையில் இருந்த ஐரோப்பியர்கள், 4.5 சதவீத பணிகளிலும் இருந்தனர்.
  • இதைக் கண்டு அதிர்ந்து போன வருவாய் ஆணையம், 1904-ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர்நிலை பதவியிலிருந்த வருவாய் அதிகாரிகள் ஜாதிய பிரிவுகளை ஆட்சியர்களிடமிருந்து பெற்றது. அந்த கணக்குப்படி பிராமணர்கள் 70 சதவீதமும், மற்ற சாதியினர் 30 சதவீதமும் பதவியில் இருந்தனர். பிராமணர் அல்லாதவர்களை பணிகளுக்கு அதிகம் நியமிக்க வேண்டும் அனைத்து ஆட்சியர்களுக்கும் ஆணையிடப்பட்டது. சில குறிப்பிட்ட மாவட்டங்களில், படித்த தகுதி வாய்ந்த பிராமணர் அல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து உடனடியாக துணை தாசில்தார் பதவி வழங்க உத்தரவிடப்பட்டது.
தென்னிந்திய முஸ்லிம் கல்வி இயக்கம்
  • 1907-ஆம் ஆண்டில், அஞ்சுமன்-முஃபித்-இஸ்லாம் எனப்படும் தென்னிந்திய முஸ்லிம் கல்வி இயக்கம், எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினரும் நிர்வாகத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடாது என்ற விண்ணப்பத்தை வைஸ்ராயிடம் கொடுத்தது.
  • வருவாய் ஆணையத்தின் விதிகளின்படி ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் தோன்றிய அரசியல் கட்சிகள் பலவும் இந்த பிரச்னையை கையிலெடுத்து பிரசாரம் செய்தன. அந்தப் பிரசாரங்களின் மையக் கருத்து பொதுத் துறையின் பணியில் எல்லா ஜாதியினரின் பங்களிப்பும் இருந்தால்தான் சமூகநீதி நிலைநாட்டப்படும் என்பதே.
  • 1912-ஆம் ஆண்டில், அரசின் பொதுத்துறையின் வேலை பற்றிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது பற்றிய விவாதங்களில் பங்கேற்ற இஸ்லாமிய சங்கங்கள் மற்றும் இந்திய கத்தோலிக்க சங்கங்கள் குறிப்பிட்ட ஓர் உயர் ஜாதியின் ஆதிக்கம் அரசுப் பணிகளில் கையோங்கி உள்ளது என்றும் அது உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.
  • இது போன்ற விவாதம் ஒன்றில் பேசிய அலெக்ஸாண்டர் கேட்ரூ எனும் ஆங்கில அதிகாரி பிராமணர் அல்லாத ஜாதியினரின் கோரிக்கைகளை வரவேற்றுப் பேசினார். அவர்தான் முதன்முறையாக இந்தியாவில் குறிப்பிட்ட ஜாதியினருக்கு குறிப்பிட்ட சதவீத வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.
  • இதுவே, "கம்யூனல் ரிசர்வேஷன்'”என்ற விகிதாச்சார வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கியது. ஆனால், இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியில் அமர்த்தப்பட வேண்டிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் படித்தவர்களாக இல்லை என்பது தெரியவந்தது. பிராமணர்கள் அளவில் மற்ற சாதியினர் படித்தவர்களாய் உருவாகவில்லை. இதனால் உருவானதுதான் கல்வி நிலையங்களிலும் ஜாதிய அளவிலான இடஒதுக்கீடு. 1920-ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில், "ஜஸ்டிஸ் பார்ட்டி'”என்று அழைக்கப்பட்ட  நீதிக்கட்சி வெற்றி பெற்ற பின், அனைத்துப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பொதுக் கோரிக்கை ஆனது.
ஜாதிய அரசு உத்தரவு
  • 1921-ஆம் ஆண்டில், ஒவ்வொரு அரை ஆண்டிலும் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்ட ஜாதியினரின் பட்டியலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தை அன்றைய "லெஜிஸ்லேடிவ் கவுன்சில்' நிறைவேற்றியது. அரசு இதை ஒரு ஜாதிய அரசு உத்தரவாக வழங்கியது.  இதுதான் இந்தியாவின் முதல் ஜாதிய அரசு உத்தரவு என அழைக்கப்பட்டது.  அதன்படி பிராமணர்கள்; பிராமணர் அல்லாத இந்துக்கள்; இந்திய கிறிஸ்தவர்கள்; இஸ்லாமியர்கள்; ஐரோப்பியர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்கள்; மற்றவர்கள் எவ்வளவு பேர் பணியில் உள்ளனர்; பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை அரசுக்கு மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும்.
  • இதே வேளையில், அரசியல் கட்சிகளின் கடுமையான கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.  "ஜி.ஓ. எம்.எஸ் 1071, பொதுத் துறை 11.1927' என்னும் அந்த அரசாணையில் கீழ்க்கண்ட இட ஒதுக்கீடு உத்தரவிடப்பட்டு அது 1947-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது.
  • 1947-ஆம் ஆண்டில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் பெருமளவில் உருவாகியதை எதிர்த்தும், உயர் கல்வி நிலையங்களிலும், தொழில் படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பொறியியல் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கில், இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இது 1951-ஆம் ஆண்டில் நடந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத்தான் இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்கும் விதத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதலாவது சட்டத்திருத்தம், நாடாளுமன்றம் மூலம் கொண்டுவரப்பட்டது. இட ஓதுக்கீட்டுக்கு அச்சாரம் இட்டது ஓர் ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரி என்றால், இடஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்கியது, பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு. இவைதான் இடஒதுக்கீட்டின் வரலாற்று உண்மைகள்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories