இணையப் பாதுகாப்பு – பகுதி 2
மு.முருகானந்தம்
- - - - - - - - - - - - - - - -
- இக்கட்டுரைத் தொடரின் முதற்பகுதியை வாசித்திருப்பீர்கள். இணைய வெளிப் பாதுகாப்புப் பற்றிய புரிதலுடன் இந்தியாவின் இணைய வெளிப் பாதுகாப்புப் பற்றி இவ்விரண்டாம் பகுதியில் காண்போம்.
தேசிய இணையவெளிப் பாதுகாப்புக் கொள்கை – 2013
- இந்தியாவின் முதலாவது இணையப் பாதுகாப்புக் கொள்கை இதுவேயாகும்.
- இக்கொள்கை 2013-ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால் வடிவமைக்கப்பட்டது. 2016-ல் இத்துறையானது ‘மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமாக (MEITY-Ministry of Electronics and Information Technology) மேம்படுத்தப்பட்டது.
கொள்கையின் நோக்கம்
- குடிமக்கள் / வணிகச் சமூகம் / அரசாங்கச் செயல்பாட்டுக்கு பாதுகாப்பான இணையவெளியைக் கட்டமைத்தல்.
- இந்நோக்கத்தினை அடைய பின்வரும் இலக்குகள் உதவுகின்றன.
- பாதுகாப்பான இணையவெளிச் சூழலை உருவாக்குதல், இணையப் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு தொடர்புடையவற்றை வழிப்படுத்துதல்.
- பாதுகாப்புக் கொள்கை வடிவமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குதல், உலகத்தர பாதுகாப்பு முறைகளை ஊக்குவித்தல்.
- இணையவெளி ஒழுங்குமுறை அமைப்பை வலுப்படுத்துதல்,
- 24 ᳵ 7 மணி நேரமும் தகவல்தொழில்நுட்பக் கட்டமைப்பு சார்ந்த தகவல்களைச் சேகரிக்க அமைப்பை உருவாக்குதல், தாக்குதலின் போது எதிர்வினையற்ற உத்திகளை வகுத்தல், “முக்கிய தகவல் கட்டமைப்புப் பாதுகாப்புக்கான தேசிய மையம்” (NCIIPC – National Critical Information Infrastructure Protection Centre) ஆனது இதற்காகவே உருவாக்கப்பட்டது.
- நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான பாதுகாப்பு நுட்பங்களை உள் நாட்டிலேயே வடிவமைத்தல்.
- அடுத்த 5 ஆண்டுகளில் [2013-ன் படி] இணைய பாதுகாப்புத் திறனுடைய 5,00,000 வல்லுநர்களை உருவாக்குதல்.
- முறையான பாதுகாப்பு வழிமுறைகளை நிறுவும் வணிக நிறுவனங்களுக்கு பணபலன் அளித்தல்.
- உரிய சட்டங்களின் மூலம் இணையக் குற்றங்கள் தடுப்பு / புலனாய்வு / தண்டனைகளை முறைப்படுத்துதல்.
- திறன்மிகுந்த அரசு மற்றும் தனியார் கூட்டுறவுகளை ஏற்படுத்தி பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுவாக்குதல்.
- தனிநபர் விழிப்புணர்வினை வளர்த்தெடுத்தல்.
- இந்தக் கொள்கையைச் செயல்படுத்த நிறுவப்பட்டுள்ள பாதுகாப்புக் கட்டமைப்பைப் பற்றி அடுத்த பத்தியில் காண்போமா..?
இந்திய இணையவெளிப் பாதுகாப்பு அமைப்புகள்
- தேசிய இணைய ஒருங்கிணைப்பு மையம் [National Cyber Coordination Centre – NCCC]
- கணினி அவசரகால நடவடிக்கைக் குழு – இந்தியா [Computer Emergency Response Team India – CERT In]
- தேசிய முக்கிய தகவல் கட்டமைப்பு பாதுகாப்பு மையம் [National Critical Information Infrastructure Protection Centre– NCIIPC]
- இணையவெளி ஒழுங்குமுறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் [The Cyber Regulations Appellate Tribunal].
- தேசியத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் [National Technical Research Organisation - NTRO]
- நேத்ரா [NETRA – Network Traffic Analysis]
- மத்தியக் கண்காணிப்பு அமைப்பு [Central Monitoring System – CMS ]
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவு [Cyber and Information Security Division, Ministry of Home Affairs - CIS].
1. NCCC - “இணையத்தைக் கண்காணித்தல்”
- இது தகவல் தொழில்நுட்பச் சட்டம் – 2000 பிரிவு 69B-ன் படி செயல்படுகின்றது. இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் [MEITY - Ministry of Electronics and Information Technology] செயல்படுகின்றது.
- இது இணைய வெளிப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கான அமைப்பாகும்.
- இந்தியாவின் இணையத் தாக்குதலைக் கண்காணிக்கின்ற முதலாவது அடுக்கு இதுவாகும். இது அரசு மற்றும் தனியாரின் பாதுகாப்பு அம்சங்களையும் கண்காணிக்கின்றது.
- நம் நாட்டிற்குள் உள்ள அனைத்து ‘இணையச்சேவை வழங்குநர்களுடனும் [Internet Service Provider]’ இது தொடர்பிலுள்ளது. இணையத்தைச் சதா கண்காணித்து, ஏதேனும் தாக்குதலுக்கான அறிகுறியைக் கண்டால் ‘இணையச் சேவை வழங்குநரை’ எச்சரிக்கின்றது.
2. CERT-In
- இது மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றது.
- இணையவெளி தாக்குதல் குறித்த தகவல்களை சேகரித்து ஆராய்கின்றது.
- இணைய தாக்குதல் குறித்து முன்னறிவிப்பு & எச்சரிக்கைகளை செய்கின்றது.
- இணையத் தாக்குதல் நிகழ்வின் போது அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
- அவசரகால நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றது.
- இணையவெளியில் செயல்படுகின்ற எல்லோருக்கும், விதிமுறைகள் / அறிவுரைகள் / முன்தடுப்பு / பதில்வினை போன்றவற்றை CERT-In பரப்புகின்றது. அதாவது பாதுகாப்புக்கு “எதை, எங்கு, எப்போது, எப்படிச் செய்ய வேண்டுமென” முன்கூட்டியே தெரிவித்து உரிய சமயத்தில் செயல்படுகின்றது.
3. தேசிய முக்கிய தகவல் கட்டமைப்பு பாதுகாப்பு மையம் (NCIIPC)
- இவ்வமைப்பு தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் படி நிறுவப்பட்டது ஆகும். இது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் [Ministry of Communications] செயல்படுகின்றது.
- ஒரு காலத்தில் புறாவின் காலில் தகவல் அனுப்புவார்கள். பகை மன்னன் புறாவைச் சாப்பிட்டு விடுவான். இது புறாக்காலத்தின் தகவல் கட்டமைப்பு மற்றும் அக்கட்டமைப்பு மீதான தாக்குதலைக் குறிக்கின்றது.
- பின்னர் அஞ்சல் காலக் கட்டமைப்பில் அஞ்சல்காரர் தாக்கப்பட்டு தகவல் திருடப்பட்டது. இப்போது இணையவெளிக்காலம். மனிதனும் மனிதனுக்குத் தேவையான எல்லாமும் இணையவெளிக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப் படுகின்றது. இந்தக் கட்டமைப்பின் முக்கியத் தகவல்களை NCIIPC பாதுகாக்கின்றது.
- மேற்கண்ட முதன்மைக் கட்டமைப்பின் முக்கியத் தகவல்களைப் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கின்றது. திட்டமிடுதல், உத்திகளைக் கண்டறிதல், ஆராய்ச்சி மேம்பாடு, பயிற்சி, விதிகள் மற்றும் தகவல் பகிர்வு போன்றவற்றில் பணியாற்றுகின்றது.
4. இணையவெளித் தீர்ப்பாயம்
- இது தகவல் தொழில்நுட்பச் சட்டம் – 2000-ன் படி நிறுவப்பட்ட இணையவெளிச் சிக்கல்களுக்கான தீர்ப்பாயமாகும். இது உரிமை வழக்கு விதிகள் – 1908-ன்படி செயல்படுகின்றது. உரிமையியல் விதிகள் பொருந்தினாலும் ‘இயற்கை நீதி’யின் (Natural Justice) படியே இது செயல்படுகின்றது.
5. தேசியத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்
- இது பிரதமர் அலுவலகத்தின் ‘தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் ’ கீழ் செயல்படும் இணையவெளிப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி மையமாகும்.
- இது 2004-ல் நிறுவப்பட்டது. இணையவெளிப் பாதுகாப்பிற்கான மறைகுறியீட்டியல் [Cryptology] துறைக்கென ஆசியாவிலேயே முதன்முறையாக நிறுவப்பட்ட “தேசிய மறைகுறியீட்டியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வி நிலையம்” [NICRD- National Institute of Cryptology Research and Development] ஆனது இந்த மையத்தின் கீழ் செயல்படுகின்றது.
6. நேத்ரா
- நேத்ரா என்றால் ‘கண்’ என்று பொருள்படும். இணையத்தினூடாக நடைபெறுகின்ற தகவல் தொடர்புகளைக் கண்காணித்து ஊறு விளைவிக்கும் தகவல்களை தானாகவே இது சேமிக்கின்றது.
- இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் [DRDO- Defence Research and Development Organisation ] உருவாக்கப்பட்டுள்ளது.
- ஸ்கைப், டிவிட்டர், மின்னஞ்சல் போன்றவற்றை ஊடுருவி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தகவல்களைத் தொகுக்கிறது.
- மத்தியக் கண்காணிப்பு அமைப்பு
- இது மத்திய அரசின் மின்னணுப் புலனாய்வுக் கண்காணிப்பு அமைப்பாகும்.
- இது உரையாடல் மற்றும் சமூக ஊடக உரையாடல்கள் போன்றவற்றை உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்த உதவுமாறு வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
இணைய வெளிப்பாதுகாப்புத் திட்டங்கள்
- இணையவெளி என்ற சொல் நமக்குப் புதிது. அதுபோலத் தான் அரசுக்கும் புதிதேயாகும்! புதிதாக விரிவடையும் இவ்வெளியில் அரசு மெதுவாக / படிப்படியாக பாதுகாப்பினை உருவாக்கி வருகின்றது.
- 2014-ல் ‘தேசிய இணையவெளிப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்’ என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது. 2016-ல் லெஜியன் [Legion] என்ற ஊடுருவிகளின் [Hacker] தாக்குதலுக்குப் பின்னர் முதன் முறையாக ‘முதன்மை தகவல் பாதுகாப்பு அலுவலர் – Chief Information Security Officer - CISO’ நியமிக்கப்பட்டார். அண்மையில் “சைபர் ஸ்வச்தா கேந்திரா” என்ற மையம் உருவாக்கப்பட்டது.
- இம்மையம் CERT-In ஆல் தொடங்கப்பட்டிருக்கிறது. இது பாட்நெட் [Botnet] மற்றும் தீம்பொருள்களைக் கண்டறிந்து தூய்மையாக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் ஆவண செய்கின்றது. பாதுகாப்புக்கான நான்கு கருவிகளை இம்மையம் உருவாக்கியுள்ளது.
- “யு.எஸ்.பி. பிரதிரோத்” (USB Pratirodh):
- இது ஒருவரது கணினியில் அனுமதியின்றி மற்றொருவர் பென் டிரைவ் மற்றும் கழற்றத்தக்க வன்தட்டு (Hard disk) போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றது.
- சாம்வித் (Samvid):
- இது ஒரு விண்டோஸ் செயலி (APP) ஆகும். முன்னரே அனுமதிக்கப்பட்ட கோப்புகளை மட்டுமே திறந்து செயல்படுத்த அனுமதிக்கின்றது. இதனை நிறுவுவதன் மூலம் [Install] வைரஸ் போன்ற தவறான கோப்புகள் செயல்படுவது தடுக்கப்படக்கூடும்.
- எம்-கவச் (M-Kavach):
- இது ஆண்டிராய்டு மொபைல் பாதுகாப்புக்கானது ஆகும். தகவல் திருட்டு, புளூடூத் மற்றும் வைஃபையைத் திருட்டுத்தனமாகப் பயன்படுத்துதல், தேவையற்ற குறுஞ்செய்தி மற்றும் தேவையற்ற அழைப்புகளிலிருந்து பாதுகாக்கின்றது.
- தேடுபொறி ஜேஎஸ் கார்டு (Browser JS Guard):
- ஒருவர் தீங்கிழைக்கும் வலைதளத்தில் நுழைவதனைத் தடுக்கின்றது.
பன்னாட்டு ஒத்துழைப்பு அமைப்புகள்
- உலகளாவிய இணையவெளி பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இந்த அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- ஐ.நா. இணைய ஆளுகை மன்றம்
- ஆசியா பசுபிக் செர்ட் [AP CERT]
- ஐரோப்பிய மன்றம்: புத்தபெஸ்ட் வழக்காற்றின்படி (convention) செயல்படுகிறது.
- ஐ.நா.வின் பன்னாட்டு தொலைத் தொடர்புச் சங்கம்
- உலக இணையவெளி மாநாடு
தனிநபர் பாதுகாப்பு வழிகள்
- தேசத்தின் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைக் கண்டோம். தனிமனிதர்களாக நாம் எவ்வாறு இணையவெளியில் பாதுகாப்பாக உலவ வேண்டும் என்பதும் முக்கியமானதல்லவா ...? அவற்றைக் காண்போம்.
1) கடவுச் சொல்: யாரிடமும் பகிரக்கூடாது. யூகிக்க முடியாததாக இருக்க வேண்டும். அடிக்கடி மாற்ற வேண்டும்.
2) வி.பி.என் பாதுகாப்பு: திறன் பேசியில் (ஸ்மார்ட் போன்) விபின் (VPN) மென்பொருளை நிறுவினால் ஊடுருவிகளிடமிருந்து நமது தகவலையும் கருவியையும் பாதுகாக்கலாம்.
3) லாக் அவுட் (log out): நாம் கணினி வலைதளத்தினைப் பயன்படுத்தாத போது வெளியேறிவிட வேண்டும்.
4) மின்னஞ்சலில் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். தேவையற்றவர்க்கு முகவரியைத் தருவதோ அல்லது தேவையற்ற அஞ்சலைத் திறக்கவோ கூடாது.
5) தரவிறக்கம்: எதைத் தரவிறக்கினாலும் நம்பகத்தன்மையைச் சோதித்துவிட்டுத் தரவிறக்கி வைரஸ் ஸ்கேனரால் சோதித்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.
6) தரவுப் பாதுகாப்பு: இது உங்களது அனைத்துத் தரவுகளையும் நகலெடுத்துப் பாதுகாக்கவும் உதவுகிறது.
7) தொடர் மேம்பாடு (update): நமது செயலிகளை (APPS) உரிய இடைவெளியில் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
8) இணைய உறவு: இணையத்தில் முகநூல் போன்றவற்றில் அறியா நபருடன் உறவாடும் போது நமது இரகசியத் தகவலை கொட்டிவிடக் கூடாது. கவனத்தோடு உறவாட வேண்டும்.
9) குழந்தைகளைக் கண்காணித்தல்: வீட்டுக்கு வெளியே விளையாடப் போனால் ஆபத்து எனக்கூறி கணினி அறிதிறன் பேசியினைக் கையில் தந்து வீட்டினுள் குழந்தைகளை அமர வைக்கிறோம். ஆனால் அவர்கள் யாருமற்ற இணையவெளியில் தன்னந்தனியாக புளூவேலில் விளையாடலாம். ஆக பெற்றோர் குழந்தைகளை இணையவெளியிலும் கண்காணிக்க வேண்டும்.
முடிவாக..,
- இணைய வெளிப்பாதுகாப்பு குறித்த அடிப்படைகளையும் அதற்கான இந்தியாவின் நடவடிக்கைகளையும் தனிமனித முன்னெச்சரிக்கை வழிகளையும் இத்தொழில் நுட்பத் தொடரில் கண்டோம்.
- தேர்வுக்காக மட்டுமின்றி வாழ்வுக்காகவும் இணையவெளிப் பாதுகாப்பினைக் கற்றுத் தெளிய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
- - - - - - - - - - - - - - - -