TNPSC Thervupettagam

இந்தியாவின் உடனடித் தேவை... தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை!

May 10 , 2019 2076 days 1266 0
  • வேறு எந்தப் பொருளாதார ஆய்வறிக்கையும் சமீபத்தில் இந்த அளவுக்கு விவாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்புக்கான மையம், ‘இந்தியப் பணியாளர் நிலை-2018’ என்ற அறிக்கையை வெளியிட்டது. 2019-க்கான ஆய்வறிக்கை ஏப்ரலிலேயே வெளிவந்துவிட்டது. தேர்தல் நேரம். ‘ஆண்டுதோறும் இரண்டு கோடி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகச் சொன்ன பிரதமர் ஏமாற்றிவிட்டார்’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே அது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக அமைந்துவிட்டது இந்த அறிக்கை.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி
  • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் சேர்ந்துள்ள புதிய உறுப்பினர்களைக் கணக்கில் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார் மோடி. வருங்கால வைப்புநிதி அமைப்பில் உறுப்பினர் சேர்க்கையை அடிப்படையாக வைத்து வேலைவாய்ப்பைக் கணக்கிடும் நிலையில்தான் இந்தியா இருக்கிறது.
  • 2011-12-ல் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தால் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்தக் கணக்கெடுப்பு தொடரவே இல்லை.
  • அவ்வப்போது காலவாரியாகத் தொழிலாளர் நிலவரங்களைப் பற்றிய அறிக்கைகள் வெளியிடுவதற்கான திட்டம் 2017-ல் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தால் தொடங்கப்பட்டாலும், இன்னும் அதன் முதல் அறிக்கையே வெளிவரவில்லை. அந்த அறிக்கையின் சில பகுதிகள் கசிந்திருக்கும் நிலையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18-ல் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
பணியாளர் நிலை 2019
  • அமித் பசோல் தலைமையில் பொருளியல் ஆய்வாளர்கள் அளித்திருக்கும் 2019-க்கான பணியாளர் நிலை பற்றிய அறிக்கையானது அனைவருக்கும் கல்வி, மருத்துவம் மற்றும் வீட்டுவசதி வழங்குவதன் வாயிலாக நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று பரிந்துரைக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்டத்தைப் போல நகர்ப்புற வேலையுறுதித் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தக் கோருகிறது. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது. அதற்கேற்ற வகையில் நிதிக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவருமாறு வலியுறுத்துகிறது.
  • வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நிதிக் கொள்கையின் பங்கை விவரித்து பேராசிரியர் ஸ்ரீநிவாஸ் திருவடந்தை எழுதியிருக்கும் இறுதி அத்தியாயம் இந்த அறிக்கையில் மிக முக்கியமானது. நிதிக் கொள்கையை விரிவுபடுத்துவதன் மூலமாக வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைக் குறைக்கலாம் என்று ஆலோசனை தருகிறார் அவர். “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்பது என்னவோ உண்மைதான். ஆனால், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதல பாதாளத்தில் கிடக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதால் வறுமை நிலை குறைந்திருக்கலாம்; ஆனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கவேயில்லை. கிடைக்கிற வேலைவாய்ப்புகளும் தரமானவையாக இல்லை” என்கிறார் ஸ்ரீநிவாஸ்.
வேலைவாய்ப்புக் கொள்கை
  • ஒருங்கிணைந்த தேசிய வேலைவாய்ப்புக் கொள்கையே இந்தியாவின் உடனடித் தேவை. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகத் திட்டங்களைத் தொடங்குவதால் மட்டும் நோக்கத்தை அடைந்துவிட முடியாது. அதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அதற்குத் தேவையான நிதியாதாரங்களுக்கும் வழிவகுக்க வேண்டும்.
  • நிதிப் பற்றாக்குறை என்று வந்தாலே பொருளாதார நிபுணர்கள் சிலிர்த்துக்கொண்டு வந்துவிடுவார்கள். நிதிச் சமநிலை குலைந்துவிடும், பணவீக்கம் ஏற்படும், வெளிவர்த்தகப் பற்றுவரவு நிலை சிக்கலாகும் என்று காரணங்களை அடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். நிதிப் பற்றாக்குறை என்பது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது என்ற கோணத்தில் மட்டுமே அதைப் பொருளாதார நிபுணர்கள் பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு அதைப் பொருத்திப்பார்க்கத் தேவையில்லை. நிதிப் பற்றாக்குறை நிலவிய காலத்திலும்கூடப் பொருளாதார வளர்ச்சி இருந்திருக்கிறது என்பது ஸ்ரீநிவாஸின் முடிவு.
  • பிரிட்டிஷ் பொருளியல் அறிஞர் வைன் காட்லீயின் துறைவாரியான நிதிச் சமநிலைக் கோட்பாட்டின் துணையோடு இதற்குத் தீர்வு காண முயல்கிறார் ஸ்ரீநிவாஸ். தனியார் நிறுவனங்கள், குடும்பங்கள், அரசு, வெளிவர்த்தகம் ஆகிய நான்கு துறைகளின் மொத்த வளர்ச்சி அல்லது வளர்ச்சிக் குறைவின் அடிப்படையிலேயே சேமிப்பு மற்றும் முதலீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்கிறது இந்தக் கோட்பாடு. நான்கு துறைகளையும் ஒப்புநோக்கி முதலீடோ அல்லது சேமிப்போ அதிகமாக இருந்தால் மட்டுமே, பற்றுவரவு நேர்மறையாக இருக்கிறது என்று பொருள்கொள்ள வேண்டும்.
நடப்புக் கணக்கு
  • அரசு, தனியார், குடும்பங்கள் என்று மூன்று துறைகளின் தொகுப்புதான் நடப்புக் கணக்கு. நிதிப் பற்றாக்குறையில் ஏற்படும் மாற்றங்கள், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால், அதுவொரு நம்பிக்கை மட்டுமே. இந்தியாவில் 1991-ல் வெளிவர்த்தகப் பற்றுவரவு நிலையில் ஏற்பட்ட சிக்கலுக்கு நிதிப் பற்றாக்குறையே காரணம் என்ற அடிப்படையில் உருவான நம்பிக்கை இது. ஆனால், 2018-ல் வெளிவந்த ‘இந்தியாவுக்குப் பொருளாதாரத் திட்டமிடல் அறிக்கை’யானது இந்த நம்பிக்கை தவறானது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
  • நிதிக் கொள்கையும் இணைந்துதான் வேலைவாய்ப்புக் கொள்கைக்கு வலுசேர்க்க முடியும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்போது வரிவருவாயும் அதிகரிக்கும். காலப்போக்கில், நிதிப் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டுவிடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories