TNPSC Thervupettagam

இந்தியாவை அறிவோம்: ஜம்மு & காஷ்மீர்

May 17 , 2019 2050 days 2414 0
மாநில வரலாறு
  • ஜம்மு & காஷ்மீர் ‘பூலோக சொர்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது. டோக்ரா மன்னர் ராஜா மால்தேவ் பெரும்பாலான காஷ்மீர் பகுதிகளை ஒருங்கிணைத்தார். டோக்ரா வம்சத்தின் ராஜா ரஞ்சித் தேவ் 1733-82 வரை ஜம்முவை ஆண்டார். அதன் பிறகு, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் காஷ்மீரைக் கைப்பற்றினார். டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த குலாப் சிங், ரஞ்சித் சிங்கிடம் காட்டிய விசுவாசத்துக்குப் பரிசாக ஜம்மு பகுதியைப் பெற்றார். ஆங்கிலேயர்-சீக்கியர் இடையிலான போரில் ரஞ்சித் சிங் கொல்லப்பட்டார்.
  • பிரிட்டிஷார், ரூ.75 லட்சம் பெற்றுக்கொண்டு காஷ்மீரை குலாப் சிங்கிடம் தந்தனர். இந்தியப் பிரிவினையின்போது டோக்ரா மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் இணைய மறுத்து, காஷ்மீரைத் தனி சமஸ்தானமாக அறிவித்தார். 1947 அக்டோபர் 26-ல் ஹரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்துக்கொண்டார்.
  • அப்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டது. 1956-ல் ‘ஜம்மு & காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டு, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்டது.
புவியியல் அமைப்பு
  • இந்தியா, பாகிஸ்தான், சீனா எனத் தனது நிலப்பரப்புப் பகிர்வில் சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கும் ஜம்மு & காஷ்மீர், நாட்டின் 5-வது பெரிய மாநிலம். பரப்பளவு 2,22,236 சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 30 லட்சம் சதுர கிமீ). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஜம்மு & காஷ்மீரின் மக்கள்தொகை 1.25 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 124. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555).
சமூகங்கள்
  • முஸ்லிம்கள் 31%, இந்துக்கள் 28.43%, சீக்கியர்கள் 1.87%, பௌத்தர்கள் 0.89%, கிறிஸ்தவர்கள் 0.28%. காஷ்மீரில் முஸ்லிம்கள் 96.4%, இந்துக்கள் 2.45%. ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர். மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இவர்கள் 14%. ஜம்முவில் இந்துக்கள் 62.55%, முஸ்லிம்கள் 33.45%, சீக்கியர்கள் 3.3%. ஜம்முவின் தென் பகுதியில் ஹரியாணா, பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர்.
ஆறுகள்
  • இமாலயத்திலிருந்து தோன்றும் ஜேலம், சினாப், சத்லஜ், ராவி, சிந்து நதிகள் ஓடும் மாநிலம் ஜம்மு & காஷ்மீர். மனஸ்பால், தால், உலார், நகீன், பாங்கோங், த்ஸோ கர் முதலான பெரிய ஏரிகளும் அமைந்துள்ளன. ஜம்மு பகுதியில் சினாப், ராவி, தாவி, உஜ், பஸ்தர், பூஞ்ச், தோஹி, பந்தர், நெரு மற்றும் அதன் துணையாறுகள் ஓடுகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜேலம் நதியும் அதன் துணையாறுகளும் ஓடுகின்றன.
காடுகள்
  • பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்புப் பகுதிகளைத் தவிர்த்து, காடுகளின் மொத்தப் பரப்பளவு 20,230 சதுர கிமீ. ஜம்மு பகுதியில் 89%, காஷ்மீர் பகுதியில் 50.97%. லடாக் பகுதி, குளிர் பாலைவனம் என்பதால் அங்கு காடுகளே இல்லை. எனவே, மொத்தப் பரப்பளவில் காடுகளின் பரப்பளவு 19.95%. மிதவெப்ப மண்டல பசுமைமாறாக் காடுகள், இமாலய ஈரக் காடுகள், இமாலய உலர் காடுகள், மிதவெப்ப மண்டல தேவதாரு காடுகள், அல்பைன் காடுகள் என்று ஐந்து வகையான காடுகள் காணப்படுகின்றன.
நீராதாரம்
  • பெரும்பாலும் கால்வாய்ப் பாசனம். ஐம்மு பகுதியில் ரண்வீர், பிரதீப் கால்வாய்கள் முக்கியமானவை. ராவி-தாவி நதிகளை இணைக்கும் பாசனத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனால், மழையை மட்டுமே நம்பியிருக்கும் 1,50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும். காஷ்மீர் பகுதியில் ஜேலம் மற்றும் அதன் துணையாறுகளிலிருந்து கால்வாய்ப் பாசனம் நடைபெறுகிறது. குல் என்று அழைக்கப்படும் 2,287 தனியார்க் கால்வாய்களும் பயன்பாட்டில் உள்ளன. மார்த்தாண்ட், ஸைனாஹிர் கால்வாய்கள் முக்கியமானவை. லடாக் பகுதியில் மயூர் என்று அழைக்கப்படும் சிறு வாய்க்கால் பாசனம் அதிகளவில் நடைபெற்றுவருகிறது.
கனிமவளம்
  • மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுண்ணாம்புக் கல் வெட்டியெடுக்கப்படுகிறது. குப்வாரா, கார்கில், லே பகுதிகளில் மார்பிள் கிடைக்கிறது. பாராமுல்லா, கதுவா பகுதிகளில் ஜிப்சம் வெட்டியெடுக்கப்படுகிறது. உத்தம்பூர் பகுதியில் பாக்ஸைட், மேக்னசைட் தாதுக்களும் புகா பள்ளத்தாக்கில் போரக்ஸும் கிடைக்கின்றன.
பொருளாதாரம்
  • மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மை, தோட்டக்கலையைப் பெருமளவு சார்ந்திருக்கிறது. ஆண்டுக்கு முன்னூறு கோடி ரூபாய்க்குத் தோட்டக்கலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பட்டு வளர்ப்பு, குளிர் நீரில் மீன் வளர்ப்பு முக்கியத் தொழில்கள். காஷ்மீரில் வளரும் மரங்களில் தயாரிக்கப்படும் கிரிக்கெட் பேட்டுகளைத்தான் உலகின் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்துகின்றன. குங்குமப்பூ சாகுபடிக்கும் காஷ்மீர் புகழ்பெற்றது. ஆப்பிள், செர்ரி, ஆரஞ்சு, பார்லி, சோளம், கம்பு, காய்கறிகள், கோதுமை சாகுபடியும் நடக்கிறது. கைவினைப் பொருள்கள், கம்பளங்கள், சால்வைகள் ஏற்றுமதியாகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் பூங்காக்களை அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்துவருகின்றன. மத்திய அரசின் மானியங்களை அதிகம் பெறும் மாநிலம் இதுதான்.
முக்கியப் பிரச்சினைகள்
  • ஜம்மு & காஷ்மீரில் பிற இந்திய மாநிலத்தவர் நிலங்களை வாங்க சட்டபூர்வத் தடை நிலவுவதாலும், அடிக்கடி பாகிஸ்தானால் தாக்கப்படுவதாலும் தொழில் வளர்ச்சிக்கான அமைதியான சூழல் இல்லை. மாநிலக் கட்சிகள் இரண்டும் தனித்தும் கூட்டாகவும் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தாலும் முக்கியப் பிரச்சினையைத் தீர்க்கும் செல்வாக்கைப் பெறாமல் இருக்கின்றன. இதனால், அவ்வப்போது பாகிஸ்தானிலிருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதிகள், ஊடுருவல்காரர்களின் வேட்டைக்காடாகிவிட்டது காஷ்மீர். துப்பாக்கி, பீரங்கிகளின் வேட்டுச் சத்தத்தால் உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலம் அமைதியிழந்து இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (17-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories