TNPSC Thervupettagam

இந்தியாவை அறிவோம்: வங்கம்

May 9 , 2019 2062 days 1872 0
  • கி.மு. ஏழாம் நூற்றாண்டில் பிஹாரையும் வங்கத்தையும் உள்ளடக்கி மகதப் பேரரசு உருவாக்கப்பட்டது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் வங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். வங்கத்தினருக்கு தாய்லாந்து, பர்மா, மலேயே, சுமத்ரா போன்றவற்றுடன் வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது. கி.பி. 3-ம் நூற்றாண்டு வாக்கில் குப்தர்கள் இங்கே ஆட்சிசெய்திருக்கிறார்கள். கி.பி.
  • 13-ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம் மன்னர்களின் ஆளுகை தொடங்குகிறது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகமாக கல்கத்தாதான் இருந்தது. வங்கம்தான் நமக்கு ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி, சத்யஜித் ரே உள்ளிட்டோரைத் தந்தது. சுதந்திரப் போராட்டக் காலத்திலும் தற்போதும் பெரும் அரசியல் மாற்றங்களுக்குக் காரணமான பிராந்தியம் வங்கம்.
புவியியல் அமைப்பு
  • கிழக்கு இந்தியாவில் உள்ள வங்கம், நாட்டின் 14-வது பெரிய மாநிலம். பரப்பளவு 88,752 சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 30 லட்சம் சதுர கிமீ). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வங்கத்தின் மக்கள்தொகை 9.13 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 1,029. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555). இந்துக்கள் 70.54%. பட்டியலின சமூகத்தினர் 23.51%. முஸ்லிம்கள் 27.01%. கிறிஸ்தவர்கள் 0.72%. பிற சமூகத்தினர் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.
சமூகங்கள்
  • இந்திய அளவில் சீர்திருத்தங்களின் தாயகமான வங்கத்தில் மற்ற மாநிலங்களைவிட சாதியத்தின் தாக்கம் குறைவு. எனினும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பிராமணர்கள், காயஸ்தா, பைத்யா ஆகிய சமூகத்தினரின் தாக்கம் அரசியல், கலாச்சாரம் போன்ற தளங்களில் அதிகமாகத்தான் இருக்கிறது. அதேவேளையில், கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கு தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை இங்கே தேர்தலில் சாதி சார்ந்த கணக்குகள் அதிகம் செல்வாக்கு செலுத்துவதில்லை.
ஆறுகள்
  • வங்கத்தின் முக்கியமான நதி கங்கை. இந்த நதியின் ஒரு கிளை பத்மா நதியாகப் பிரிந்து வங்கதேசத்தில் நுழைகிறது. இன்னொரு கிளையிலிருந்து ஹூப்ளி நதியும் பாகீரதி நதியும் பிரிந்து மாநிலத்தின் கணிசமான நிலப்பரப்புக்குப் பாசனம் தருகின்றன. தீஸ்தா, தோர்ஸா, ஜல்தகா, மகாநந்தா போன்ற ஆறுகள் வங்கத்தின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் பாய்கின்றன. மேற்கு பகுதியில் தாமோதர், அஜய், கங்சபதி ஆறுகள் பாய்கின்றன. தாமோதர் நதியின் குறுக்கேதான் தாமோதர் பள்ளத்தாக்கு அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
காடுகள்
  • இந்த மாநிலத்தில் காடுகளின் பரப்பளவு 16,847 சதுர கிமீ. இது மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 93%. காடுகளின் பரப்பளவில் காப்புக்காடுகள் 59.4%, பாதுகாக்கப்பட்ட காடுகள் 31.8%, வகைப்படுத்தப்படாத காடுகள் 8.9% பரப்பளவைக் கொண்டிருக்கின்றன. உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகளான சுந்தரவனக் காடுகளைக் கொண்டது வங்கம். இந்தக் காடுகள் வங்கத்தின் தெற்கில் இருக்கின்றன. சுந்தரவனக் காடுகள் 10,000 சதுர கிமீ பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இந்தக் காடுகளில் சுந்தரி மரங்கள், கீவா, கோரான் முதலான தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றன. சுந்தரவனக் காடுகள் என்றாலே பரவலாக அறியப்படுபவை வங்கப் புலிகள். மீன்பிடிப் பூனைகள், சிங்கவால் குரங்குகள், காட்டுப் பன்றிகள், புள்ளிமான்கள் போன்றவை இந்தக் காட்டில் அதிகமாகக் காணப்படும் பாலூட்டிகள்.
நீராதாரம்
  • கங்கை நதியைப் பகிர்ந்துகொள்வது குறித்து வங்கத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே தாவா நீடித்துவந்தது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த தாவா 1996-ல் அப்போதைய இந்தியப் பிரதமர் தேவே கவுடாவுக்கும் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. வங்கத்தில் பிந்து அணை, முருகுமா அணை, முகுத்மணிப்பூர் அணை உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆறுகள், அணைகள் என்று நிறைய இருந்தாலும் இன்னும் மாநிலத்தின் 60% விவசாய நிலங்கள் மழைநீரைத்தான் நம்பியிருக்கின்றன.
கனிம வளம்
  • கனிம உற்பத்தியில் வங்கத்துக்கு இந்தியாவிலேயே மூன்றாவது இடம். நிலக்கரிதான் இங்கே அதிக அளவில் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. இங்கு நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. இரும்பு, தாமிரம், சுடுகளிமண், சீனக் களிமண், சுண்ணாம்புக் கல், மாங்கனீஸ், டோலோமைட் போன்ற கனிமங்களும் சிறுசிறு அளவில் தோண்டியெடுக்கப்படுகின்றன.
பொருளாதாரம்
  • 2017-18-ல் வங்கத்தின் ஜிடிபி ரூ.21 லட்சம் கோடி. 2004–2010 காலகட்டத்தில் இந்த மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 13.9%. விவசாயமே பிரதானத் தொழில். நெல்தான் பிரதான உணவுப் பயிர். இந்தியாவிலேயே நெல் உற்பத்தியில் வங்கம்தான் முதலிடம் வகிக்கிறது. 2015-2016-ல் 1.61 கோடி டன்கள் நெல் உற்பத்தி செய்திருக்கிறது. உருளைக்கிழங்கு, சணல், கரும்பு, கோதுமை போன்றவை அதற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுகின்றன. குளிர்ப்பாங்கான வடக்குப் பகுதிகளில் தேயிலை உற்பத்தியும் பிரதான இடம் வகிக்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் வங்கத்துக்கு இரண்டாவது இடம். தொழில் துறையைப் பொறுத்தவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த மாநிலத்தில் உள்ளன. நாட்டில் தோல் பதனிடுதலில் இந்திய அளவில் வங்கம் சுமார் 25% பங்களிக்கிறது. மோட்டார் வாகன உற்பத்தித் துறை இங்கே சமீப காலமாக அடிவாங்கியிருக்கிறது.
முக்கியப் பிரச்சினைகள்
  • வங்கம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக மம்தா இல்லை என்பதே அவருடைய சிங்கூர் போராட்டம் தொழிலதிபர்களுக்குத் தெரிவித்த செய்தியாக இருந்தது. இப்போது அவர் செய்யும் முயற்சிகள் எந்த அளவுக்குத் தொழில் வளத்தைக் கொண்டுவரும் என்பது தெரியவில்லை. மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது. சேவைத் துறையும் வளர்ச்சி பெறவில்லை. குடியுரிமையின்றி அசாமிலிருந்து வெளியேற்றப்படுவர்கள் வங்கத்துக்கு வந்தால் மாநில அரசுக்கு நெருக்கடி அதிகமாகும். இதனாலேயே அசாமில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மம்தா.

நன்றி: இந்து தமிழ் திசை(09-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories