TNPSC Thervupettagam

இந்திய அரசியலில் பெண்கள்

April 26 , 2019 2087 days 1763 0
  • இந்திய அரசியல் அமைப்பு, ஆண்-பெண் பாகுபாடற்ற சமத்துவத்தை உறுதி செய்கிறது. என்றாலும், நடைமுறையில் அத்தகைய சமத்துவம் உறுதிப்படவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரங்களில் பெண்களின் அரசியல் பங்களிப்பு பற்றிய விவாதங்களும் அதுகுறித்த கேள்விகளும் எழுகின்றன. ஆனால், அதன் பின்னர் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அவர்களின் நிலை பற்றி எவரும் சிந்திப்பதில்லை.
அரசியலில் பெண்கள்
  • அரசியலில் பெண்களின் பங்கு என்பதைப் பொருத்தவரை மூன்று வகையாக இதனை எடுத்துக் கொள்ளலாம். தேர்தலில் வாக்களித்து அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்களின் பங்கு, மற்றொன்று தேர்தலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவது, மூன்றாவது நிர்வாகத்தில் அதிகாரத்தில் பங்கு கொள்வது.
  • இந்த மூன்று நிலைகளில் பெண்களின் நிலை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று சிந்திப்போமேயானால் மூன்று நிலைகளிலும் அரசமைப்புச் சட்டம் தரும் சமத்துவத்துக்கும் நடைமுறைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பதை நன்கு உணர முடியும்.
  • தேர்தலில் வாக்களித்து தாங்கள் விரும்பும் ஆட்சியை ஏற்படுத்துவது என்ற வகையில் பெண்களின் வாக்களிப்பு சதவீதம் சென்ற காலங்களைக் காட்டிலும் தற்போது சற்று அதிகரித்திருக்கிறது.
  • வாக்களிக்கும் தங்கள் ஜனநாயகக் கடமையை உணர்ந்து வாக்களிக்க பெண்கள்  முன் வருகிறார்கள். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களின் வாக்களிப்பு சதவீதமும் உயர்ந்திருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஏறத்தாழ 22 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களைவிட, பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற உண்மை சற்றே ஆரோக்கியமானதாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, 2014-ஆம் ஆண்டு தேர்தலில் ஏறத்தாழ 40 கோடி பெண்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். 2019-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43 கோடியைத் தாண்டியிருக்கிறது.
தேர்தல் அறிக்கை
  • இதை மனதில் கொண்டு அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் தங்களது வாக்குறுதிகளில் பெண்களைக் கவரும் பல வியூகங்களை அமைக்கின்றன. தங்களது வாக்குறுதிகளில் அல்லது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றித் தவறாமல் பேசுகின்றன. வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக நமது பெண்களின் நிலைப்பாடு உலகையே திரும்பிப் பார்க்கச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.
  • அதே நேரத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதியாக அளிக்கப்படும் 33 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு இதுவரை சாத்தியப்படவில்லை என்பது எதனால்? பெண்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆட்சி என்று தேர்ந்தெடுக்கும் எந்த ஓர் அரசிலும் இதுவரை அத்தகைய இடஒதுக்கீடு சாத்தியப்படாமல் இருப்பதற்கான பின்புலம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நிலையில் அரசமைப்புச் சட்டம் தரும் சமத்துவம் சாத்தியமாகலாம்.
பெண்கள் பங்களிப்பு
  • அடுத்து, தேர்தல் களத்தில் பெண்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது? தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் சதவீதம் குறைவாகவே இருக்கிறது என்பது நிதர்சனம். பெண் வாக்காளர்கள் அதிகரித்திருக்கும் நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் தற்போது முன் வந்திருக்கிறார்கள்.
  • 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அவரது கட்சியில் 35 சதவீத மகளிருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். தற்போது அவரது கட்சியில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து 49 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
  • ஒடிஸாவிலும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், இந்தத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது. இன்னும் இப்படிப் பல கட்சிகளைக் கூற முடியும். இவையெல்லாம் பெண் வாக்காளர்களைக் கவர்வதற்கான முயற்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  • அதே நேரத்தில் தேர்தல் களத்தில் அதிகமாகப் போட்டியிட இன்னும் பெண்கள் முன்வர வேண்டும். இந்திய மக்கள்தொகையில் பெண்களின் சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்த வேட்பாளர் சதவீதங்கள் மிகக் குறைவு. இந்த நிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அதற்குக் கட்சிகள் தெளிந்த சிந்தனையோடு பெண்களை வேட்பாளர்களாக முன்னிறுத்த வேண்டும்.
புள்ளிவிவரம்
  • 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்கள் 11 சதவீதம் மட்டுமே என்பதும் சிந்திக்க வைக்கிறது. தேர்தலில் வென்று பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த பெண்கள் 11 சதவீதம் என்றால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளது.
  • வளர்ந்து வரும் நாடுகளில் பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைப் பொருத்தவரை, உலகில் 193 நாடுகளில் இந்தியா 143-ஆவது இடத்தில்தான் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • இதிலிருந்தே பெண்களுக்கான இட ஒதுக்கீடு எத்தனை அத்தியாவசியமானது என்பதை உணரலாம்.
  • அரசியலில் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பெண்கள் மிகத் தெளிவாகவும் பொறுப்புடனும் கையாள்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இந்த நம்பிக்கையை நமக்கு ஏற்படுத்துகிறது. இந்தியா முழுவதும் ஏறத்தாழ 13 லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருக்கிறார்கள். திறம்படச் செயல்படுகிறார்கள்.
1990 ல்
  • 1990-இல் முதன்முறையாக இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் பிஜு  பட்நாயக் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் நடைமுறைப்படுத்தினார். 2012-இல் இந்த ஒதுக்கீடு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 1993-இல் 73-ஆவது மற்றும் 74-ஆவது திருத்தங்கள் ஊராட்சிகளிலும் நகராட்சிகளிலும் பெண்களுக்கு ஒதுக்கீடுகளைச் செய்ய வழிவகுத்தன.
  • 2008-இல் 108-ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 2010, 2014 எனக் காலம் ஓடியதே தவிர, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமாகவில்லை. மசோதா நிறைவேறாமல் பல முட்டுக்கட்டைகளைச் சந்தித்து வருகிறது.
  • கடந்த மூன்று முறையும் மக்களவைத் தேர்தலில் ஏறத்தாழ எல்லாக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெற்ற மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, இந்த முறையும் மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் முக்கிய இடம்பெற்றிருக்கிறது. நிறைவேறும் நாள் என்றைக்கோ அன்றைக்குப் பெண்களின் பாதுகாப்பும் பங்களிப்பும் இந்தியாவில் உறுதி செய்யப்படும்.
33 சதவிகித இடஒதுக்கீடு
  • 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற ஆசை வார்த்தையைப் பெண்களின் வாக்குகளை மனதில் கொண்டு முன் வைக்கும் அரசியல் கட்சிகள், தங்கள் வேட்பாளர்களில் அதிக அளவில் பெண்களைத் தங்கள் வேட்பாளர்களாக அறிவித்தால் சட்டம், மசோதா என்பதைத் தாண்டி நடைமுறையிலேயே பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அரசியலில் சாத்தியப்படும் என்னும் எளிய வழிமுறை இருக்க அதனை விடுத்து தேர்தல் அறிக்கையாக மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பது சிந்திக்க வைக்கிறது.
  • உலகெங்கும் ஆண்கள் அதிகாரங்களில் இருக்கும் அளவுக்குப் பெண்கள் பங்கு வகிக்கிறார்களா என்ற கேள்விக்கு,  "இல்லை' என்பதே பதில்.
  • இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டு பொறுப்பேற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை சொற்பமானது. மத்திய அமைச்சரவை, மாநில அரசுகள் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பு மாநில அரசுகளில் அதிகாரத்தில் உள்ள பெண்கள் என்று பார்த்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இருக்கிறார்களே தவிர, நாட்டின் மக்கள்தொகையில் பெண்களின் அளவை ஒப்பிடும்போது அதிகாரத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை வருத்தம் தரும் அளவிலேயேஉள்ளது.
  • இந்தியாவைப் பொருத்தவரை தங்கள் கடமைகளை, பொறுப்புகளை ஒருபோதும் பெண்கள் தட்டிக் கழிப்பது இல்லை. அரசியலில்  பெண்கள் பங்கேற்பதுஎன்பதும் நமக்குப் புதிதல்ல. காலம் காலமாக தேசம் ஆண்ட பெண்கள் வரலாறு நம்மிடம் உண்டு.
  • அதிகாரத்தைப் பெண்கள் பெறுவதற்கும் தங்கள் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இடஒதுக்கீடு என்ற சலுகையை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் எல்லாத் துறைகளிலும் முன்னேறுவதற்கான துடிப்போடு பெண்கள் முன்வந்ததைப் போல அரசியலிலும் பெருமளவில் முன்வந்து தங்கள் பங்களிப்பைச்செய்ய வேண்டும். அதன் மூலம் பெண்களின் தேவைகளை, பாதுகாப்பை உறுதி செய்யும் நிலைகளில் இடம்பெற வேண்டும்.
  • அப்படிப் பெண்கள் தாமே முன்வந்து அரசியல் களம் கண்டு ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு பெறும்போது மற்ற எல்லாத் துறைகளிலும்கூட பெண்களின் அபரிமிதமான வளர்ச்சியும் சாத்தியப்படும். நம் பங்கை நாமே முன்வந்து பெற்றுக் கொள்வதும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும் ஒட்டுமொத்த பெண் இனத்துக்கும் நாடு முழுமைக்கும் நலம் பயக்கும்.
  • அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு என அனைத்து நிலைகளிலும் தங்களுக்கு அரசியல் சாசனம் வகுத்துத் தந்திருக்கும் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள பெருமளவிலான பெண்களின் அரசியல் பிரவேசம் வழிவகுக்கும் என்பதில்சந்தேகம் இல்லை.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories