TNPSC Thervupettagam

இந்திய பொருளாதார நிலை

January 24 , 2020 1831 days 956 0
  • அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அச்சடிக்கும் பணி தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு முடிந்து அச்சுக்கு அனுப்பும்போது நிதியமைச்சரும், நிதியமைச்சக அதிகாரிகளும் தங்களது பணியை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட "கேக்' வெட்டி மகிழ்வார்கள். அதைப் பின்பற்றி இந்தியாவில் நிதியமைச்சகம் அமைந்துள்ள தில்லி நார்த் பிளாக் அலுவலகத்தில், அல்வா தயாரித்து மகிழும் சடங்குடன் நிதிநிலை அறிக்கை அச்சடிப்புப் பணிகள் தொடங்குகின்றன. 

அடுத்த நிதியாண்டுக்கான அறிக்கை

  • மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் அடுத்த நிதியாண்டுக்கான அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் காணப்படும் பொருளாதாரத் தேக்கமும், வளர்ச்சியின்மையும் இந்தியாவையும் பாதிக்கிறது என்பது என்னவோ உண்மை. 
  • ஆனால் அதையும் மீறி, பொருளாதாரம் தடுமாறாமல் பாதுகாப்பதில்தான் எந்தவோர் அரசின் வெற்றியும் அடங்கியிருக்கிறது. 
    இதற்கு முன்னால் இதைவிடக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை இந்தியா பலமுறை சந்தித்திருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் இல்லாத அளவில் இப்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், எதிர்பார்ப்பும் காணப்படுவதால் அரசின் பொறுப்பு அதிகரிக்கிறது. 
  • கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் பல்வேறு செயல்பாடுகள் வெற்றியடைந்திருக்கின்றன. அதிக மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டது, ஜிஎஸ்டி அறிமுகம் உள்ளிட்ட சில முனைப்புகள் மிகப் பெரிய பாதிப்பையும், பொருளாதாரத் தளர்வையும் ஏற்படுத்தின. ஏழைகளுக்கு வீடு, கழிப்பறைகள், சமையல் எரிவாயு இணைப்புகள், அனைவருக்கும் மின்சாரம், நெடுஞ்சாலை கட்டுமானங்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ள அரசுக்குச் சாதனைகள் பல இருந்தாலும், வளர்ச்சியில் காணப்படும் தேக்கத்தையும், அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையையும் இவையெல்லாம் ஈடுகட்டி விடாது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
  • வேலைவாய்ப்பு என்பது பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தது. பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடாமல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கை என்னதான் மக்கள் நல்வாழ்வுத் திட்ட சாதனைகளைப் பட்டியலிட்டாலும், மக்கள் மன்றத்தில் அவை எடுபடாமல் போகும் என்பதை அரசு உணர்ந்திருக்கும் என்று எதிர்பார்ப்போம்.
    நிதியமைச்சரின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்திலும், அவரை உற்சாகப்படுத்தும் விதத்திலும் பொருளாதாரம் இல்லை என்கிற உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டும். 

விலைவாசி உயர்வு

  • நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் மிக முக்கியமான கட்டத்தில் விலைவாசி என்கிற பூதம் மீண்டும் உயர்ந்திருப்பது துரதிருஷ்டவசமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் டிசம்பர் மாதம் சில்லறைப் பொருள்களின் விலைவாசி 7.35% அதிகரித்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் தேக்கமும், வேலைவாய்ப்பின்மையின் அதிகரிப்பும் காணப்படும் பின்னணியில், விலைவாசி அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.
  • சில்லறைப் பொருள்களின் விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம், உணவுப் பொருள்களின் விலைகள். உணவுப் பொருள்களின் விலைகளை உயர்த்தியிருப்பதில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சராசரி குடும்பத்தின் அன்றாடத் தேவைகளில் உணவுப் பொருள்கள் சுமார் பாதியளவு காணப்படுகின்றன. 
    உணவுப் பொருள்களின் விலை உயர்வு என்பது நிரந்தரமானது அல்ல என்பதும், உற்பத்திக்கும் தேவைக்கும் ஏற்ப அவ்வப்போது அதிகரித்தும் குறைந்தும் காணப்படும் என்பதும் எதார்த்தங்கள். 
  • அரசின் கட்டுப்பாட்டுக்குள் இவை இல்லை. 
    உணவுப் பொருள்களின் விலைவாசியை மிகத் திறமையாகக் கட்டுக்குள் வைத்திருந்ததுதான் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் ஐந்தாண்டு சாதனை. நுகர்வோர் விலையை அரசு அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொண்டதும், உணவு உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவித்ததாலும்தான் விவசாயிகளுக்குப் போதிய விலை கிடைக்காமல், வேளாண் இடர் ஏற்படக் காரணமாயிற்று. 
  • கடந்த நவம்பர் மாதம் 10.01%-ஆக இருந்த உணவுப் பொருள்களின் விலைவாசி, டிசம்பர் மாதம் 14.12%-ஆக அதிகரித்தது. இதற்கு வெங்காயத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாடும் விலை உயர்வும் மிக முக்கியமான காரணம். 2018 டிசம்பருடன் ஒப்பிடும்போது, ஏனைய உணவுப் பொருள்களின் விலைவாசியும், வழக்கத்தைவிட அதிகரித்திருக்கிறது. மீன் (9.5%), பால் (4.22%), முட்டை (8.79%) ஆகியவற்றின் விலை அதிகரித்தது போலவே, பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்திருக்கிறது.

புள்ளிவிவரங்கள்

  • நிதிக் கொள்கையை வகுப்பவர்கள் ஜனவரி மாத விலைவாசிப் புள்ளிவிவரங்கள் கிடைப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காய்கறி (60.5%), பருப்பு வகைகள் (15.44%), முட்டை (8.79%), மீன் - இறைச்சி (9.57%) என்று காணப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வுதான் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த விலை உயர்வு தற்காலிகமானவைதான் என்றாலும்கூட, பொதுமக்களின் மத்தியில் அரசின் பொருளாதார நிர்வாகம் குறித்த மதிப்பீட்டை இவைதான் நிர்ணயிக்கின்றன. நிதிநிலை அறிக்கையால் இந்த விலை உயர்வுக்குத் தீர்வுகாண முடியாது.
  • ஆனாலும், உணவுப் பொருள்கள் விலைவாசி உயர்வை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல, வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சிக்கு வழிகோலுவதாலும் எந்தவிதப் பயனும் இருக்காது. 
  • பொருளாதாரம் மிகவும் மந்த கதியில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியாவில் காணப்படும் குழப்பம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்துக்கு வழிகோலுமேயானால், இந்தியாவின் நிதிநிலைக் கணக்குகள் தடம்புரளக் கூடும்.

நன்றி: தினமணி (24-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories