இனிச் சும்மா கிடைக்குமாம் சம்பளம்!!
--------
மு. முருகானந்தம்
இனி எல்லோருக்கும் மாதாமாதம் அரசாங்கம் இலவசமாக ஊதியம் தரப்போகிறதாம்! நாம் வேலையின்றி வெட்டியாக இருந்தாலும் வங்கிக் கணக்கில் மாதத்தின் முதல்நாள் ஊதியம் வரவாகப் போகிறதாம்! இதை முதன்முதலாகக் காதில் கேட்டவுடன் என்ன ஆனந்தம் தெரியுமா? உங்களுக்கும் அந்த ஆர்வம் இருக்குமல்லவா?. அது சரி ... எத்தனை ரூபாய் நமக்குச் சம்பளமாக வரும்? எந்த மாதத்திலிருந்து...?
அனைவருக்குமான அடிப்படை வருமானம் - (Universal Basic Income -UBI)
- UBI என்பது இந்திய நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும், காலமுறைப்படி, எவ்வித தகுதி/கட்டுப்பாடுகளும் இன்றி அரசாங்கம் வழங்கும் வருமானமாகும்.
- இதற்குத் தனியொருவரின் சமூகப் பொருளாதார நிலைமைகள் தகுதிகளோ-தடைகளோ அல்ல.
- அனைவருக்குமான அடிப்படை வருமானம் மூன்று முக்கியக் கூறுகளை உடையது.
- அனைவருக்கும் பொதுவானது. இது இலக்கு மக்களுக்கான திட்டம் (Targeted Peoples Scheme) அல்ல.
- இத்திட்டப்படி நேரடியாக, ரொக்கமாகப் பயனாளியின் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும் (DBT)
- இது நிபந்தனையற்றது. ஒருவர் தனது சமூக-பொருளாதார நிலையையோ, தான் வேலையற்றிருப்பதையோ, இந்த வருமானம் பெறுவதற்கான தகுதியாக சமர்ப்பிக்கத் தேவையில்லை.
- ஆக ஒரே ஒரு தகுதிதான் நீங்கள் இந்தியக் குடிமகனாக இருந்தால் போதும்; ஆமாம் நீங்கள் இந்தியக்குடி- Citizen of India என்பதற்கு என்ன அடையாளம் வைத்திருக்கிறீர்கள்?!! உங்கள் நண்பருடன் விவாதியுங்களேன்.
ஐரோப்பாவின் அடிப்படை வருமானம்
ஐரோப்பாவில் சில நாடுகளில் அடிப்படை வருமானத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. பின்லாந்து சோதனை முயற்சியாக €560/மாதம் என்றவாறு மாதிரித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நெதர்லாந்து, கனடாவின் சில மாநிலங்களும் அடிப்படை வருமானத்தை அறிவித்துள்ளன. இந்தியாவில் கருத்தாக்கத்தில் உள்ள அனைவருக்குமான அடிப்படை வருமானம் பின்வரும் மூன்று விதங்களில் ஐரோப்பிய நடைமுறையிலிருந்து வேறுபடுகின்றது.
- இது குடும்பவாரியாக இல்லாமல் ஒவ்வொரு தனிநபருக்குமான அரசு தரும் உதவித் தொகையாகும்.
- பிற வருமானங்களைக் கணக்கில் கொள்ளாமல் பொதுவில் வழங்கப்படுகின்றது.
- இது இலவசமாகத் தரப்படுகிறது. இதற்காக எவ்வித வேலையும் தரப்படுவதில்லை. இத்திட்டம் "பொதுமை (Universality) மற்றும் நிபந்தனையின்மை (Unconditionality)" என்ற இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
எதற்கு அடிப்படை வருமானம்?
இந்த அடிப்படை வருமானம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வினைக் குறைத்து - ஏழ்மையை ஒழிக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இது தனியொருவரின் கண்ணியத்தைக் காத்து வாழ்க்கைக்கான பாதுகாப்புச் சூழலை உறுதி செய்கிறது.
“தனியொருவனுக்கு உணவில்லை
எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்”
- பாரதியார்
மேலே நம் பாரதி சொன்னதுபோல் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் உலகத்தை அழிக்கப் போனால் எத்தனை முறை இந்த உலகை அழித்திருக்க வேண்டும்?இது போன்று தனியொருவனும் வாழ உரிமையுடைவன் என்பதை நிலைநாட்டி, அவனுக்கும் வாழ வழிகோலுவதே இந்த அடிப்படை வருமானமாகும்.
வாங்குதிறன் சமநிலை
நாம் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கடைக்குப் போகிறோம். கடைக்காரர் எல்லோருக்கும் ஒரே விலையிலேயே பொருளை விற்கிறார். விசைத்தறி நிறுவன உரிமையாளருக்கும் அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவருக்கும் வெங்காய விலை ஒன்றுதானே?! அதே சமயம் விசைத்தறிகள் வருவதற்கு முன்னர் கைத்தறிகள் எத்தனை ஆயிரம் பேருக்கு சோறு போட்டிருக்கும்? இப்போது கைத்தறி ஓட்டியவர்களின் மனித உழைப்பை தானியங்கி இயந்திரங்கள் செய்வதனால், அதற்கான கூலி உரிமையாளருக்குத் தானே கிடைக்கிறது.
இந்நிலையில் விசைத்தறியின் உரிமையாளரும் வேலையிழந்து வீட்டில் தவிக்கும் ஒரு கைத்தறி நெசவாளரும் வெங்காயம் வாங்கத்தானே வேண்டும். இவ்வாறு ஒரு பொருளை வாங்குவதற்கு இருநபர்களுக்கு இடைப்பட்ட சமநிலையை "வாங்குதிறன் சமநிலை” (Purchasing Power Parity-PPP) என்று வரையறுப்பர்.மேற்சொன்னது போல தொழில்நுட்ப வரவால் ஏற்பட்டுள்ள வாங்குதிறன் சமநிலை வேறுபாட்டினைச் சரிக்கட்டிட அடிப்படை வருமானம் பயனுள்ளதாக இருக்கும் எனலாம்.
வருமானமும் வரியும்
அடிப்படை வருமானம் அனைவருக்கும் வழங்கப்படும். பின்னர் ஒருவரது மொத்த வருமானத்தின் அடிப்படையில் வருமான வரி வசூலிக்கப்படும். எந்தவொரு வருமானத்திற்கும் வழியற்ற ஒருவருக்கு அடிப்படை வருமானம் மட்டுமே கிடைக்கும்போது அவரது வருமானவரி மிகச் சொற்பமாக இருக்கும் அல்லது வருமானவரியே இருக்காது. அதேசமயம் பல வருமான மூலங்களையுடைவர் அதிகமாக வரிசெலுத்த வேண்டியிருக்கும்.
முடிவாக பலவகை வருமானமுடையவருக்கு அரசு கேட்காமல் கொடுக்கும் அடிப்படை வருமானத்தை வரியாகக் கேட்டு வாங்கிக்கொள்ளும். அதே சமயம் பிறவருமானமே இல்லாத பரம ஏழை இத்திட்டத்தின் முழுப்பலனை அடைவார்.
அரசாங்கத்தின் இலக்கணம்
தற்போது அரசாங்கம் குடிமக்களுக்குத் தேவையான அடிப்படைச் சேவைகளை வழங்குகின்ற பொது முகமையாக உள்ளது; தேவைக்கேற்ப மானியங்கள் வழங்கி வருகின்றது.
அரசிற்குக் கிடைக்கும் வருவாயை சேவைக்கும்- மானியத்திற்கு பயன்படுத்துகின்றது. இனி அரசு தனது உருவத்தை-வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். " அரசு மருத்துமனை - அரசுப் பள்ளி - அரசுப் போக்குவரத்து - அரிசி மானியம் - இலவசங்கள்” போன்ற சேவைகளை அரசு நிறுத்திக் கொள்ளும்; நமக்கு அடிப்படை வருமானத்தைத் தந்துவிடுவதால் அரசால் இவற்றை இலவசமாக வழங்க முடியாது; நாம் எல்லாவற்றையும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.
அனைவருக்குமான அடிப்படை வருமானத் திட்ட நன்மைகள்
- ஒருவர் தனது விருப்பப்படி செலவிட இத்திட்டம் உதவுகிறது. அதாவது பொருளாதாரச் சுதந்திரம் (Economic Liberty).
- வாழ்வதற்கான அடிப்படை நிதியாதாரம் உள்ளநிலையில், ஒவ்வொருவரும் உற்பத்தியற்ற - மோசமான வேலைகளை விட்டுவிட்டு தனக்குப் பிடித்த நல்ல வேலைகளை நோக்கி நகர்வர்;
- இது வேலையின்மைக்கெதிரான குறைந்த பட்சக் காப்பீடு (Insurance against unemployment) ஆகும். எனவே வறுமையின் கோரப்பிடி தளர்வடையும்.
- இது நாட்டு வளத்தைச் சமமாகப் பங்கிடுவதற்கான முறையாகும். இதனால் ஏழைகள் மட்டுமே முழுப் பலனடைவார்கள்; வசதியானவர்க்குப் பணம் சென்றாலும் வரிவலையில் திரும்பிவிடும்.
- மக்கள் தரமான பணிச்சூழலைக் கோரும் சக்தியுடையவர்களாக மாறுவர்; இது மோசமான பணிச்சூழலில் பேச இயலாத பேதைகளாக பணியாற்றும் மக்களின் நிலையை மாற்றும் .
- இதைச் செயற்படுத்துவது எளிமையானது; இது நாட்டு மக்கள் அனைவருக்குமானதால், பயனாளிகளைத் தேடித் தேர்வு செய்ய வேண்டியதில்லை. தற்போதைய நலத்திட்டங்களில் உள்ள உரிய பயனாளிகளைத் தேர்வு செய்வதில் ஏற்படும் தவறுகளுக்கு, இத்திட்டத்தில் வாய்ப்பில்லை. அதாவது சேர்ப்பு பிழை (Including error) & விலக்கல் பிழை (Excluding error) ஏற்படாது. அதாவது ஆட்டை பட்டியில் பசியாடு தேட வேண்டியதில்லை.
- எல்லோருக்கும் இத்தொகை கொடுக்கப்படுவதால் இதில் ஊழல் வெகுவாகக் குறையும் அதனால் பணம் வீணாகாது. வெட்டியான நிர்வாகச் செலவுகள் ஏற்படாது.
- தேவையற்ற பல நலத்திட்டங்கள் முடிவுக்கு வரும்; இதனால் அரசு நிர்வாகம் எளிதாகி, சிறப்பான முறையில் அரசு செயல்படும்.
- எல்லோருக்கும் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், வங்கி வசதிகள் விரிவடையும். இதனால் நிதி உள்ளடக்கம் (Financial Inclusion) சாத்தியமாகும்.
இத்திட்டத்தின் நன்மைகளைப் படிக்கும்பேரது அருமையான திட்டமாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இதற்கும் எதிரிகள் உண்டு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? நீங்கள் ஆமோதிக்கும் கட்சியா? ஆட்சேபிக்கும் கட்சியா...?
இத்திட்டத்திற்கெதிரான கருத்துகள்
- இந்த திட்டத்திற்கெதிரான முதற்கருத்து: "கோயில் பொங்கலைச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போகாமல் வீட்டில் கிடந்துறங்கும் நாட்டிலே....." இது சரிப்படுமா? அதாவது மக்கள் சோம்பேறியாகிவிடுவர்; தொழிலாளர் சந்தையிலிருந்து (Labour market) வெளியேறி வேலை செய்யாமல் மக்கள் வாழ முற்படுவர். இதனால் நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படும்.
- இந்தக் கூடுதலான வருமானம் கல்வி-சுகாதாரத்துக்குப் பயன்பட வாய்ப்புகள் குறைவு; இவ்வாறு கிடைக்கும் வருமானம் "போதைப் பொருளுக்கே" செலவிடப்படும் என்பதும் இன்றைய சூழலில்- தமிழக நிலைமையில் மறுக்கவோ மறைக்கவோ முடியாத கருத்தாகும்.
- 2 பில்லியன் (பில்லியனுக்கு எத்தனை சுழியங்கள்?) மக்கள் வாழும் நாட்டில், அனைவருக்கும் அடிப்படை வருமானம் தர நேர்ந்தால், அரசாங்கத்தால் நிதிச்சுமையைச் சமாளிக்க முடியாது. ஒருமுறை இதைச் செயல்படுத்தி விட்டால் தோல்வியடையும் நிலையில் நிறுத்துவது மிகக் கடினமாகும்.
- வரிவசூலின் மூலமே அரசுக்கு இதற்கான வருமானம் கிடைக்கிறது. குறிப்பாக அதிக மறைமுகவரியால் (Indirect tax) இத்தொகை வசூலிக்கப்படும்போது பணவீக்கத்தை (Inflation) இது மேலும் அதிகரிக்கும். மேலும் மக்களின் வாங்குதிறன் சமநிலையை (PPP) குறைத்து இத்திட்டப் பயனையே கேள்விக்குள்ளாக்கும்!
- இந்த வருமானம் சில துறைகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். தொழிலாளர்களைக் கவராத ஆனால் அதிக ஆட்கள் தேவைப்படக் கூடிய தொழில்கள் நசிவடையும். மக்கள் இதுவரை வாழ்வதற்காகச் செய்த கடுமையான - கடினமான வேலைகளை விட்டுவிட்டு எளிமையான பணிகளை நோக்கித் திரும்புவர் விவசாயத்தொழில் வெகுவாக பாதிக்கப்படும்; நாட்டின் 65% மக்கள் கூலியில்லையாயினும் விவசாய வேலை செய்பவர்கள்; இவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறினால் என்ன வேலை கொடுப்பது? விவசாயம் யார் செய்வது?
நடைமுறைச் சவால்கள் என்னென்ன?
உலக வங்கியின் கணக்குப்படி இந்தியாவில் வயது வந்த ஒரு இலட்சம் பேருக்கு 20 ஏ.டி.எம் (ATM) மட்டுமே உள்ளது. இந்தியாவின் வயதுவந்த மக்களுள் மூன்றில் ஒரு பங்கினர் (1/3) வங்கிக் கணக்கற்றவர்கள்; இத்தகைய நிதிக்கட்டமைப்பு & நிதி உள்ளடக்கப் பற்றாக்குறையுடன் அனைவருக்கும் வருமானம் என்ற திட்டத்தைச் செயற்படுத்துவது மிகக் கடினமாகும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள மானியங்களுடன் "கூடுதல் மானியமாக" இந்தத் திட்டத் தொகையும் உருமாறிவிடும் என்றஞ்சப்படுகிறது.
2016-17 பொருளாதார ஆய்வறிக்கையின் கருத்து முன்னோட்டங்கள் என்ன?
பொருளாதார ஆய்வறிக்கை 2016-17, " எந்தத் திட்டமும் 100 விழுக்காடு பொதுமை (Universality) உடையதாக இருக்க முடியாது" என்கிறது. மேலும் பின்வரும் கருத்துக்களையும் முன்வைக்கிறது.
- முதலாவதாக:- 75% மக்களை இலக்கு வைத்து இத்திட்டத்தை முன்னெடுக்கச் சொல்லுகிறது ஆய்வறிக்கை; இது "பகுதி -பொதுமை (Quasi-Universality)" எனப்படுகிறது. இந்தப் பகுதிப் பொதுமைக்கான செலவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP)9% ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- இரண்டாவது:- "பெண்களுக்கு மட்டும்" இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்கிறது ஆய்வறிக்கை; வேலைவாய்ப்பு -கல்வி- சுகாதாரம்-நிதி உள்ளடக்கத்தில் நலிந்து கிடக்கும் பெண்களை மட்டும் குறிவைத்தால் நல்ல விளைவுகள் கிடைக்கலாம். இந்தியப் பண்பாட்டின்படி, பெண்களுக்குக் கொடுக்கப்படும் இலவசத் தொகை போதைப் பொருள்களுக்குச் செலவாக வாய்ப்பில்லை எனலாம். "மேலும் குடும்பத்தையும் - குழந்தைகளையும் காப்பாற்றும் பெண்கள் தமைத்தலைமைத் தாங்கும் குடும்பங்களுக்கு மட்டும் இதைச் செயல்படுத்தினால் அரசாங்கச் செலவும் பாதியாகக் குறையும் நல்ல மாற்றங்களும் விளையும்" என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
- மூன்றாவதாக:- சமூகத்தின் மிக நலிந்த பிரிவினரான, எளிதில் பாதிப்படையும் விதவைகள்- ஆதரவற்றோர்-முதியோர்-மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வருமானத் திட்டத்தை முதற்கட்டமாகச் செயற்படுத்தலாம்.
JAM மும்மையும் அடிப்படை வருமானம்
அடிப்படை வருமானக் கருத்துரையில் JAM பற்றிக் கூறுவது பொருத்தமானதாக இருக்கும். தற்சமயத்தில் நாட்டில் 26.5 கோடி ஜன்தன் கணக்குகள் உள்ளன. இது நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 21% ஆகும். இவற்றில் 57% கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.நாட்டில் 1 பில்லியன் பேருக்கு ஆதார் (ஆதார் வாக்காளர் அட்டை போல அடையாள அட்டை அல்ல!!!) வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டிலுள்ள எல்லோருக்கும் ஜன்தன் (J) - ஆதார் (A)- மொபைல் (M) (JAM)இணைப்பு நிறைவு செய்யப்பட்டால் நாம் பேசிக்கொண்டிருக்கும் அடிப்படை வருமானத் திட்டத்தை எளிதில் செயற்படுத்த முடியும்.
எனினும் இந்த மும்மையில் ஆதார் எண் குளறுபடிகள், ஜன்தன் வங்கி எண் முடக்கநிலை போன்றவை இடர்பாடுகளாக உள்ளன. நீங்கள் JAM-ஐ முடித்து விட்டீர்களா?..... அதாவது இந்த மூன்றையும் இணைத்து விட்டீர்களா ...?
இனி மாதாமாதம் இலவசம்!!
அனைவருக்குமான அடிப்படை வருமானம், அதைச் செயல்படுத்துவதற்கான ஆதரவுகள் - ஆட்சேபனைகள், JAM மும்மை ஆகியவற்றைப் பற்றி கருத்துரையில் கண்டோம்.இது தற்போதைக்கு நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லையெனினும் மற்ற குறைபாடுகளை உரசிப் பார்க்க ஒரு உருப்படியான உரைகல்லாக உருவாகியுள்ளது. தற்போதுள்ள முழு அரசுக் கட்டமைப்பை மாற்றி, இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவது சிரமமானது, சிக்கலானதும் கூட; ஆனால் அரசுச் சேவை வழங்குமுறையில் இது ஒரு புதிய மாற்றமாக முகிழ்த்துள்ளது.
சரி இப்போது பரிசீலிக்கப்படும் சம்பளம் எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா.....?
RS.12,000/ஆண்டுக்கு!!!
-------------