TNPSC Thervupettagam

இன்று புத்த ஞாயிற்றின் பெருநாள்!

May 18 , 2019 2049 days 1423 0
  • "புத்தர்பிரான்' என்று உலகம் போற்றும் புத்த ஞாயிற்றின் பொன்னொளி பரப்பும் நன்னாளாக வைகாசி முழுநிலவுத் திருநாள் கடந்த 2581 ஆண்டு களாக மே மாதம் (இந்த ஆண்டு மே 18) புத்த பூர்ணிமா  கொண்டாடப்படுகிறது. அறிவுப் பெருங்கடல், அறவாழி அந்தணன்,  ஞானப் பேரொளி, கெளதம புத்தர் என்றெல்லாம் அவர் புகழ் பேசப்படுகிறது.
காலக் கணிப்பீடு
  • சித்தார்த்தர், கெளதமன், புத்தன், போதி சத்துவர், சாக்கியமுனி என்றெல்லாம் குறிப்பிடப்படும் புத்த ஞாயிறு கி.மு.563-இல் தோன்றியதாகக் காலக் கணிப்பீட்டு முறை அமைக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. சமய  வேறுபாடின்றி அறிவு, அன்பு, அருள் ஆகிய மூன்று அறங்களை பெளத்தம் வலியுறுத்துகிறது.
  • புத்தரின் பிறப்பு, விழிப்பு, முடிவு ஆகிய மூன்று நிகழ்வுகளும் முழு நிலவு நாளன்று லும்பினி, புத்த கயா, சாரநாத் ஆகிய இடங்களில் நிகழ்ந்தன. புத்தர் ஞானம் பெற்ற போதி மரம்-அரச மரமென்றே அழைக்கப்படுகிறது.  சித்தார்த்தர் என்றால் "சித்தம் வென்றவர்' என்று பொருள். புத்தர் என்றால் "நிறையறிவாளன்'  என்று பொருள். கோதமர் என்னும் கெளதமர் பெயர் குடும்பப் பெயராகும். இன்றும்  இந்தப் பெயரிலேயே அந்த ஊர் மக்கள் அழைக்கப்படுகின்றனர்.
நினைவுத் தூண்
  • லும்பினி என்னும் அந்த அழகிய சோலையின் அருகில் கி.மு.329-இல் நினைவுத் தூண்  ஒன்றை நிறுவிய பெருமை, மகத நாட்டு மாமன்னர் அசோகரைச் சாரும்.  இந்த இடத்தில்தான் புத்தர் பிறந்தார் என்று பொறித்திருக்கிறார்.  இந்த நினைவுத்தூண் மத்திய அரசின்  முத்திரைகளிலும், பணத் தாள்களிலும் இடம்பெற்றுள்ளது.
  • புத்தரின் திருவுருவச் சிலையின் கண்கள் மூடியிருந்தாலும், அதிலிருந்து ஓர் ஆன்மிகச் சக்தி வெளிவந்து, அவரது மெல்லிய குரல் காதில் விழுகிறது. 'வாழ்க்கையின் போராட்டங்களிலிருந்து விலகாதே; அமைதியாய் அவற்றைச் சிந்திப்பாயாக; மேற்கொண்டு வளர்வதற்கான வாய்ப்புகளைத் தேடி முன்னேறுவாயாக' என்று கூறுவது தெரிகிறது.
கட்டுப்பாடு
  • "போர்க்களத்தில் ஆயிரம் பேரை ஒருவன் வெல்வதுகூட எளிது. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வது மிகக் கடினம். பிறவியினால் ஒருவன் உயர்ந்தவனாவதில்லை. தனது நடத்தையினாலேயே உயர்வு, தாழ்வினைப் பெறுகிறான். பாவம் செய்தவனிடம்கூடக் கடுமையாய் நடந்து கொள்ளாதீர்கள். அது வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போலத்தான். வெற்றியினால் மகிழ்ச்சி நிலையாகத்  தங்கி விடுவதில்லை. தோற்றவன் மனம் கொதிப்பதால், வெற்றி பெற்றவன் மற்றொரு பகைவனைப் பெறுகிறான்' -இதுபோன்ற அறிவுரைகளைப் புத்தர் எந்நாளும் வழங்கினார்.
  • கடவுள், மறு உலகு பற்றியெல்லாம் அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. கடவுள் எனும் கோட்பாட்டில் ஏற்பு-மறுப்பு எனும் இரு நிலைகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது புத்தர் நிலை எனலாம். பகுத்தறிவையும், அனுபவத்தையுமே அவர் நம்பினார். அனைவரும் எதையும் நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பதையே புத்தர் அதிகம் வலியுறுத்தி வந்தார்.
காஞ்சி மாநகரம்
  • தமிழகத்தில் காஞ்சி  மாநகரம் பெளத்தக் கலை வளரும் தலைநகராக இருந்தது. புத்தமங்கலம், புத்தனேரி போன்ற ஊர்கள் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை எங்கும் உள்ளன. முனியன், முனிசாமி, மாடசாமி, முனியப்பன், முனிரத்தினம் என்ற பெயர்களெல்லாம் புத்த மாமுனியைக் குறிப்பதாகும்.  பெளத்தச் சமயக் குறியீடுகள் எல்லாம் மணிமேகலை காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.
  • தான் எதைக் கற்றுத் தந்தாலும் பிறர் சந்தேகங்களைப் போக்குவதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார் புத்தர். அவர் மறைவதற்குச் சில நொடிகளுக்கு முன்னர்கூடப் பிறர் சந்தேகங்களைத் தீர்க்காமல் விட்டு விட்டோமோ என்று தவித்தார். "ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் இப்பொழுதாவது தீர்த்துக் கொள்ளுங்கள்' என்று சீடர்களை வேண்டினார்.
  • வாழும் பெளத்தத் தலைநகரமாக இன்றும் பூடான் திகழ்கிறது.  அந்த நாட்டில் பொருளாதாரப் பெருக்கத்தைக் காட்டிலும் மக்கள் மகிழ்ச்சி நிறைவுதான் பெரிதாகப் போற்றப்படுகிறது.
  • இந்த நாடு முற்றிலும் கரியமில வாயு மாசற்ற நாடாகவும், 60%-க்கு மேல் வனச் செல்வத்தைப் பெற்றுள்ள நாடாகவும் மிளிர்கிறது. பூடான் தலைநகரமான திம்புவில் சாலையில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை எங்கும் காண இயலாது.  மேலும், புகையிலை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இவ்வாறு பெளத்தக் கோட்பாடுகளை முழுவதும் பின்பற்றும் நாடாகப் பூடான் திகழ்கிறது. புத்தரின் ஞானம் உலகை தொடர்ந்து வாழ்விக்கட்டும்!

நன்றி: தினமணி(18-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories