இருக்கும் நாட்டுக்கு தமிழர்கள் விசுவாசமாக இருங்கள்
- 1966-ல் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அண்ணா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சாலான் பஜார் மைதானத்தில் நடந்த வரவேற்புக் கூட்டத்துக்கு சுமார் இரண்டு லட்சம் பேர் வந்திருந்தார்கள். தலைமை தாங்கிப் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ, “மலேசியாவில் நேருவுக்குக் குவிந்த கூட்டத்துக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார். ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் பேசினார் அண்ணா. “மலாக்கா, சீன மொழிகளைப் போலவே தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இந்த இரு நாடுகளிலும் உரிய மரியாதை தரப்படுவது வரவேற்கக்கூடியது.
- சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் தாங்கள் வாழும் நாட்டின் குடிமக்களாகவே நாட்டுப்பற்றுடன் வாழ வேண்டும்” என்று பேசிய அண்ணா, கூட்டம் முடித்துத் திரும்புகையில் நண்பர்களிடம் சொல்லிவந்தார். “தமிழினம் இன்று உலகளாவிய சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. தாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாடுகளின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் தமிழர்கள் தம்மைக் கரைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், அந்தந்த நாட்டிலிருந்து பெறும் கலாச்சார வளங்களையும் அறிவையும் நம் தமிழ்நாட்டோடும் இணைத்துப் பொருத்த வேண்டும். ஒருவகையில், இரு தரப்புக்கும் இடையிலான கலாச்சாரத் தூதுவர்களாக அவர்கள் பணியாற்ற வேண்டும்.” கூட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்ட நிதியை சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆய்வுக்குக் கொடையாகத் தந்துவிட்டார் அண்ணா.
தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எப்படி எதிர்கொண்டார் அண்ணா?
- அண்ணா முதல்வராகப் பதவி வகித்தது 680 நாட்களே என்றாலும், அதற்குள்ளாக ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தது காங்கிரஸ். தீர்மானத்தை முன்மொழிந்த எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி.ஜி.கருத்திருமன், குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டேபோனார். தவறான புகார்களுக்குக் குறுக்கிட்டு விளக்கம் அளித்துவந்த அண்ணா, “அடிக்கடி குறுக்கிடுவதற்கான நிலையில் என்னுடைய உடல்நிலை இல்லை. அவர்கள் எங்களிடத்திலே நம்பிக்கையில்லை என்று சொல்லிவிட்ட பிறகு, நாங்கள் எடுத்துச்சொல்கிற விஷயத்தில் மட்டும் நம்பிக்கை வந்துவிடும் என்று எதிர்பார்ப்பது விந்தையாகும். அவர்களுக்கு வேண்டுமானால் எங்கள் மீது நம்பிக்கை இல்லாதிருக்கலாம், எங்களுக்கு அவர்களிடத்தில் அன்றும் இன்றும் நம்பிக்கை இருக்கிறது” என்றார். அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்களில் சிலரே வாக்களிக்கவில்லை. 49-ல் 37 பேர் மட்டுமே அண்ணா ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார்கள்! தீர்மானம் தோல்வியடைந்தது. இன்னொரு நாள், “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று உடல்நலமில்லாத அண்ணாவைப் பார்த்து விநாயகம் சொல்ல, கொஞ்சமும் ஆத்திரப்படாமல், “ஆம், அதனால்தான் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன். என்னால் காலெடுத்து வைக்க முடியவில்லை என்றால், வலிமை உள்ளவரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன்” என்றார்.
நன்றி: இந்து தமிழ் திசை (26-06-2019)