TNPSC Thervupettagam

இலக்குகள் இல்லாத பட்ஜெட்!

July 15 , 2019 1994 days 1162 0
  • நிதிநிலை அறிக்கை என்பது வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகள், துறை ரீதியான ஒதுக்கீடுகள் அடங்கிய உரையாகவே பெரும்பான்மையான மக்களால் அறியப்படுகிறது. நிதிநிலை அறிக்கை உரை என்பது எப்போதுமே மிக நீண்டதாகவே இருக்கிறது.
  • இந்த முறை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை 2 மணி நேரம் 10 நிமிஷங்கள் வரை நீடித்தது. 3,105 வரிகளில், 66 பக்கங்களுக்கு நிதிநிலை அறிக்கை உரை தயாரிக்கப்பட்டிருந்தது. 20,000-க்கும் மேற்பட்ட வார்த்தைகள் அதில் இடம்பெற்றிருந்தன. நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் உரையில் இடம்பெற்றிருந்தன என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. அதே நேரத்தில் இது ஒரு முழுமையான நிதிநிலை அறிக்கையாக அமையவில்லை.
நிதிநிலை அறிக்கை
  • நிதிநிலை அறிக்கைக்காக நிதி அமைச்சக அதிகாரிகள் பலர் ஓராண்டாக உழைத்திருப்பார்கள். மேலும் சில அதிகாரிகள் ஒரு சில நாள்களுக்கு முன்பு இரவு-பகல் பாராமல் பணியாற்றி இருப்பார்கள். ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை என்பது ஏராளமான ஆவணங்களை உள்ளடக்கியது. எனவே, நிதிநிலை அறிக்கையை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு விமர்சிப்பது என்பது நியாயமாக இருக்காது. வழக்கமாக நிதிநிலை அறிக்கை உரையில் விவசாயம், ராணுவம் என துறை ரீதியான ஒதுக்கீடுகளை அமைச்சர் அறிவிப்பது வழக்கம்.
  • ஆனால், இந்த முறை நிதியமைச்சர் அந்த வழக்கமான துறை ரீதியான ஒதுக்கீட்டை உரையில் குறிப்பிடவில்லை. இது உடனடியாகவே விமர்சனத்துக்குள்ளானது. நிதிநிலை அறிக்கை உரையில் மிகவும் முக்கியமான ஒரு தகவலை அமைச்சர் தெரிவித்தார். அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), நிதிப்பற்றாக்குறை 3 சதவீதமாக இருக்கும் என்பதே அது. மேலும், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை 3.4 சதவீதத்தில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
  • இப்போது, அது மேலும் குறையும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு தனது பொதுச் செலவுகளை குறைத்துக் கொள்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
நிதிப் பற்றாக்குறை
  • நிதிநிலை அறிக்கை ஆவணங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளும்போது, நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ரூ.7,03,760 கோடி நிதிப் பற்றாக்குறையாகும். இது ஜிடிபியில் 3 சதவீதம். ஆனால், இது எந்த ஜிடிபி-யில் 3.3 சதவீதம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. 2018-19-இல் ஜிடிபி ரூ.1, 88, 40, 731 கோடியாக-ஆக மதிப்பிடப்பட்டது. பின்னர் அது மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூ.2,11,00, 607 கோடியாக அறிவிக்கப்பட்டது. இது 12 சதவீத உயர்வாகும்.
  • (இதனுடன் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்ட ஜிடிபி-யான ரூ.1, 90,10,164 கோடியைச் சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம்). எனினும், இது தொடர்பாக நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் விளக்கமளித்தார். அடுத்ததாக துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விஷயத்துக்கு வருவோம்.
  • ஜிடிபி-யில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 6 சதவீதம் கல்விக்கும், 3 சதவீதம் சுகாதாரத் துறைக்கும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எட்டப்பட்டுள்ளதா? அரசு தனது செலவை அதிகரிக்க விரும்பாதது, ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை அளவையே குறைப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டும்போது, முக்கியத் துறைகளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி ஒதுக்குவது எட்டாக்கனிதான்.
புள்ளிவிவரம்
  • இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது ரூ.27, 86,00,349 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கை. இது ஜிடிபி-யில் 20 சதவீதமாகும். கடந்த 5 ஆண்டுகள் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டு அளவில் இது பெரிய நிதிநிலை அறிக்கைதான். இதற்கு முன்பு 2013-14-இல் ஜிடிபி-யில் 14.65 சதவீத மதிப்பிலான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2009-10-இல் ஜிடிபி-யில் 17.43 சதவீத மதிப்புள்ள நிதிநிலை அறிக்கை தாக்கலானது.
  • அடுத்ததாக நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த வகைகளில் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது. "ஒரு ரூபாயில் வரவு-செலவு', "பட்ஜெட் ஒரு பார்வை' ஆகிய தலைப்புகளில் வரும் தகவல்களில் இதனை நாம் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இதையும் நாம் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. ஏனெனில் மத்திய வரிகளில் இருந்து 23 காசு மாநில அரசுகளுக்குச் செல்கிறது. ஆனால், இது நிதிநிலை அறிக்கையில் காண்பிக்கப்படுவதில்லை.
  • மாநில அரசுகளுக்குச் செல்லும் இந்த 23 காசுகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஒரு ரூபாய் செலவில் வட்டிக்குச் செலுத்தப்படுவது 23 காசுகளாக உள்ளது.
  • பாதுகாப்புத் துறை, ஓய்வூதியத்துக்கு முறையே 12 காசு, 7 காசு செலவிடப்படுகிறது. இதன் கூட்டுத் தொகையான 42 காசுகளைக் கழித்தால் பிற துறைகளுக்கு 58 காசுகள் மட்டுமே உள்ளது. இது ஜிடிபி-யில் வெறும் 66 சதவீதம் மட்டும்தான். இப்படி இருக்கும்போது முக்கியத் துறைகளான வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு ஜிடிபி-யில் தனித்தனியாக 6 - 7 சதவீதம் அளவுக்கு எப்படி ஒதுக்க முடியும்? மேலும், அரசு தனது வரி வருவாயை உயர்த்தவும், கடன் வாங்கி கூடுதல் செலவுகளை மேற்கொள்ளவும் விரும்புவதில்லை.
கல்வித் துறை
  • கல்வித் துறைக்கு இந்த முறை ரூ.94,853.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஜிடிபி-யில் 45 சதவீதம்தான். சுகாதாரத் துறைக்கு ரூ.64,999 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஜிடிபி-யில் 0.30 சதவீதம் மட்டுமே. இதபோல வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைக்கு ரூ.1,51,518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஜிடிபி-யில் 0.72 சதவீதம் மட்டுமே.
  • மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து கல்வித் துறைக்குச் செலவிடுவது ஜிடிபி-யில் 3 சதவீதம் அளவுக்கே உள்ளது. அதே நேரத்தில் ஜிடிபி-யில் 6 சதவீத நிதியை கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோத்தாரி கமிஷன் 1966-இல் அளித்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சுகாதாரத் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலவிடும் தொகை ஜிடிபி-யில் 2 சதவீதமாக உள்ளது. இது உயர்நிலை நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரையில் பாதி அளவு கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
  • கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிகஅளவில் நிதியைச் செலவிடுவது மட்டுமே அந்தத் துறைகளில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்து விடாது என்பது உண்மைதான். நிதி எந்த அளவுக்கு முறையாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது, எவ்வளவு ஆக்கப்பூர்வமாக செலவிடப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியமானது. அதிகஅளவு நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, அதனை ஆக்கப்பூர்வமாக செலவிடும்போதுதான் உரிய பலன் கிடைக்கும்.
செயல்பாடுகள்
  • இந்தியாவில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. எனவே, நிதிநிலை அறிக்கையில் அந்தத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஒப்பீட்டளவில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடு சற்று அதிகமாக ரூ.1,51,518 கோடியாக உள்ளது. இது ஜிடிபி-யில் 72 சதவீதமாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.86,602 கோடியாக இருந்தது. இந்த முறை ரூ.64,916 கோடி அதிகரித்துள்ளது.
  • மொத்த நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கான வருவாய் உதவித் திட்டத்துக்கு ("கிஸான் சம்மான்') ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு இந்தத் திட்டம் எந்த வகையிலும் உதவாது என்றே விமர்சிக்கப்படுகிறது. ஏனெனில், ஒரு விவசாயியின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.6,000 என்பது மாதத்துக்கு ரூ.500 மட்டுமே. 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.100 மட்டுமே கிடைக்கிறது. இதுவே நாள் அடிப்படையில் பார்த்தால் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.33 மட்டுமே கிடைக்கும். இது விவசாயிகளுக்கு எந்த வகையில் உதவிகரமாக இருக்கும் என்பது பெரிய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.
  • அடுத்ததாக, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்காக ஏற்றுக் கொள்கின்றன. இதில் பொதுப் பணம் விவசாயிகளுக்கு உதவுவதைவிட காப்பீட்டு நிறுவனங்களுக்கே அதிக அளவில் உதவிகரமாக உள்ளது.
உதாரணம்
  • உதாரணமாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.47,407.98 கோடி பிரிமீயம் தொகையாகச் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடாக காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.31,612.72 கோடி மட்டுமே அளித்துள்ளன. விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.15,795.26 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு அளித்த பதில் மூலம் கிடைத்துள்ள விவரம்தான்.
  • 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு இப்போது இருப்பதைவிட சிறந்த திட்டங்கள் தேவை. உண்மையிலேயே இலக்கை எட்ட அரசு நினைத்தால், இதைவிட பல மடங்கு சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
  • விவசாயிகளின் வருமானம் குறைவாக இருப்பது மட்டுமின்றி, வருவாய் ஏற்றத்தாழ்வும் மிக அதிகமுள்ளது. நபார்டு வங்கி நடத்திய அகில இந்திய கிராமப்புற நிதி நிலை தொடர்பான ஆய்வில், விவசாயிகளின் சராசரி மாத வருவாய் ரூ.8,931-ஆக உள்ளது. இது வெறும் சராசரிதான். கடைநிலையில் உள்ள 10 சதவீத விவசாயிகளின் மாத வருமானம் ரூ.1,000-க்கும் குறைவாக உள்ளது. அடுத்த 10 சதவீத விவசாயிகளின் மாத வருவாய் ரூ.2500-ஆக உள்ளது.
விவசாயம்
  • அதிக வருவாய் பெரும் விவசாயிகளில் முதல் 20 சதவீதத்தினருக்கு ரூ.22,375 முதல் ரூ.48,333 வரை வருவாய் கிடைக்கிறது. எனவே, விவசாயிகளின் சராசரி வருவாயை இரட்டிப்பாக்குவது என்பது ஏழை விவசாயிகளின் வருமானத்தை பெரிய அளவில் அதிகரிக்காது. எனவே, விவசாயிகளின் வருவாய் ஏற்றத்தாழ்வுகளைக் போக்கும் வகையில் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும்.
  • நாட்டில் உள்ள அனைத்து சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கும் வேகமான வளர்ச்சி என்பது "சர்வரோக நிவாரணியாக' இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. இப்போது 7 டிரில்லியன் டாலராக உள்ள நமது நாட்டின் பொருளாதாரம், அடுத்த சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது.
  • இந்த வளர்ச்சி சாத்தியமாகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது வருவாய்ப் பகிர்வு என்பது சமமாக இருக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்துத் தரப்பினரும் சமமான வளர்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும்.
  • பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவதாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவதாகவும் இருக்கக் கூடாது. பொதுவாக பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும் என்பதை பேராசிரியர்கள் டி.என்.ரெட்டி, டி.ஹக் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். பின்னர் எப்படிதான் பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்குவது என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைந்த முறையில் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது மட்டுமே இதற்கு ஒரே வழி.
  • உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அனைத்துத் துறைகளிலும் அதிகரிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கை ஆவணங்களை நாம் கவனமாக ஆய்வு செய்யும்போது நடைமுறை சாத்தியமற்ற, முரண்பாடான விஷயங்கள் அதிகம் இருப்பதையும், அரசின் சமூக பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு போதுமான வருவாய் ஆதாரங்களை காட்டாமல் இருப்பதும் தெரியவருகிறது.

நன்றி: தினமணி (15-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories