TNPSC Thervupettagam

இஸ்ரேலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

July 18 , 2019 2003 days 1138 0
  • இஸ்ரேலிய நாடாளுமன்றத்துக்கு ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக செப்டம்பர் 17-ல் மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த ஏப்ரல் 9-ல் நடந்த தேர்தலின் சாயலாகவே அது இருக்குமென்று தோன்றுகிறது. அந்தத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறுகிய வித்தியாசத்தில் வென்றார். ஆனால், கட்சிகளை இழுத்து கூட்டணி அமைக்க முடியாததால் அரசு அமைக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. கடந்த தேர்தலைப் போலவே மீண்டும் அமைந்துவிடாது. வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது இருக்கப்போகிறது. நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இஸ்ரேலியர்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். காரணம், இந்தத் தேர்தல் முடிவு அவர்களுடைய சமூகத்தையும் வழிபாட்டுத்தலத்தையும் இரண்டு கூறுகளாகப் பிரித்துப் போடக் கூடியதாயிருக்கிறது.
  • இஸ்ரேலிய அரசியலின் இரு பெரும் ஜாம்பவான்களின் எதிர்காலமும் இந்தத் தேர்தல் முடிவில் அடங்கியிருக்கிறது. ஒருவர் பிரதமர் நெதன்யாகு, ஊழலுக்காகச் சிறைக்குப் போக வேண்டியிருப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று அவர் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறார். இன்னொருவர், முன்னாள் பிரதமர் எஹுத் பராக். கடந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி நின்றார், இம்முறை களத்தில் இறங்கிவிட்டார். “இஸ்ரேலிய ஜனநாயகமே உடைந்து சிதறும் கட்டத்தில் இருக்கிறோம், இது ராணுவரீதியாக ஈரானால் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கு எள்ளளவும் குறையாத ஆபத்து” என்கிறார் பராக்.
எழுதப்படாத ஒப்பந்தம்
  • இதையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்குகிறேன். கடந்த ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது இஸ்ரேலின் ‘வலதுசாரி’ கட்சிகளுக்கும் ‘மையவாத-இடதுசாரி’ சார்புக் கட்சிகளுக்கும் இடையில் மறைமுகமான - எழுதப்படாத - ஒப்பந்தம் இருந்தது. ‘பாலஸ்தீனர்களின் பிரச்சினைகள் குறித்து இந்தத் தேர்தலில் நாம் பேசவே கூடாது’ என்பதுதான் அது. நெதன்யாகுவின் முக்கிய போட்டிக் கட்சி ‘மைய-இடதுசாரி’ சார்பு நீலம்-வெள்ளை கட்சியாகும். ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் பென்னி காண்ட்ஸ் அதன் தலைவர். ‘இடதுசாரி’ சிந்தனையுள்ள தொழிலாளர் (லேபர்) கட்சி, பாலஸ்தீனர்களிடமிருந்து இஸ்ரேலைப் பிரிப்பது குறித்துப் பேசுவதைவிட, நெதன்யாகுவின் ஊழலைப் பற்றிப் பேசினால் அதிக வாக்குகள் கிடைத்துவிடும் என்று கணக்குப் போட்டது. இதனால், இஸ்ரேல் என்ற நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமான ஒரு பிரச்சினை திரை போட்டு மறைக்கப்பட்டது.
  • எனவே, கடந்த ஏப்ரலில் நடந்த தேர்தலின்போது ‘மைய-இடதுசாரி’ கட்சிகள் நெதன்யாகுவைப் பதவியிலிருந்து இறக்க வேண்டும், அவருடன் அவருடைய குடும்பமும் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்துவிட்டது என்று மட்டுமே பிரச்சாரம் செய்தன. “இஸ்ரேலின் எதிர்காலம் வளமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நான் மீண்டும் பிரதமராவது முக்கியம்” என்று நெதன்யாகு பிரச்சாரம் செய்தார்.
  • நெதன்யாகு மீதான ஊழல் புகார்கள் சாதாரணமானவை அல்ல. அட்டர்னி ஜெனரலாக நெதன்யாகுவால் நியமிக்கப்பட்ட அவிச்சாய் மென்டெல்பிளிட், மூன்று ஊழல் வழக்குகளுக்காக அவரைக் கண்டிக்க நினைப்பதாகக் கடந்த பிப்ரவரியில் அறிவித்தார். இந்தக் கண்டனம் இன்னும் தொடங்காத நிலையில், இதற்கு எதிராக ஒரே ஒரு முறை நெதன்யாகு மேல்முறையீடு செய்யலாம்.  “பொதுச் சேவையின் பிம்பத்தையே நீங்கள் சிதைத்துவிட்டீர்கள்; பொதுமக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் உருக்குலைய வைத்துவிட்டீர்கள். ஏற்ற பதவிக்கேற்ப நடந்துகொள்ளாமல், சுயநலன் கருதிச் செயல்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய, உங்கள் குடும்பத்தாருடைய நலனுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். நீங்கள் கெட்டதுமல்லாமல் உங்களின் கீழ் பணிபுரியும் அரசு அதிகாரிகளையும் ஊழலில் ஈடுபடுத்திவிட்டீர்கள்” என்று நெதன்யாகுவுக்கு எழுதியுள்ள அரசுமுறைக் கடிதத்தில் குற்றஞ்சாட்டியிருக்கிறார் மென்டெல்பிளிட்.
நீதித் துறையின் சவுக்கடி
  • இதனால், நெதன்யாகு பதற்றம் அடைந்திருக்கிறார். இந்த ஊழல்களுக்காக அவர் சிறைக்குச் செல்ல வேண்டி நேரும். நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால், நாட்டின் சட்டங்களைத் திருத்தி கண்டனங்களிலிருந்தும் வழக்கு விசாரணைகளிலிருந்தும் தப்பிக்கவே பார்ப்பார் என்ற குற்றச்சாட்டைப் பிரச்சாரத்தின்போது வன்மையாக மறுத்தார் நெதன்யாகு. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய ஆட்சியை அமைக்கத் தோழமைக் கட்சிகளுடன் பேசியபோதே, ஊழல் வழக்குகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள சட்டங்களைத் திருத்துவது அல்லது புதிய சட்டத்தை இயற்றுவது குறித்துத்தான் பேசியிருக்கிறார். அவருடைய இந்த முடிவை அவர் சார்ந்துள்ள லிகுட் கட்சியைத் தவிர, தீவிர வலதுசாரிக் கட்சிகளும், தீவிரப் பழமைவாதக் கட்சியும்தான் ஆதரிக்கத் தயாராக இருந்திருக்கின்றன. அதுவும் சும்மா இல்லை, பாலஸ்தீனர்களுக்குச் சிறிதளவும் உரிமைகளைத் தராமல், மேற்குக் கரைப் பகுதியை இஸ்ரேலின் ஆளுகைப் பிரதேசமாகச் சேர்த்துக்கொண்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்!
  • ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கவும், சிறைக்குப் போகாமலிருக்கவும் எந்தவித சமரசத்துக்கும் தான் தயார் என்று நெதன்யாகு உணர்த்திவருவதை நியாயமுள்ள இஸ்ரேலியர்கள் கவனிக்க வேண்டும். பதவியில் இருக்கும் பிரதமர் மீது யாரும் எந்தவித ஊழல் வழக்கும் தொடுக்கக் கூடாது என்று சட்டம் இயற்ற ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் அத்தகைய சட்டங்களை ரத்து செய்துவிடாமல் தடுக்க, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கட்டுப்படுத்தும் சட்டங்களும் இயற்றப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இது உண்மையானால், இஸ்ரேல் என்ற நாடும் ‘வாழைத்தோட்டக் குடியரசு’ நாடாகிவிடும். இதுவரை பாலஸ்தீனர்களின் பிரச்சினையைத் தோழமைக் கட்சியாக வரக்கூடியவர்களிடம் நெதன்யாகு பேசவேயில்லை என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
  • அரசியலிலிருந்து ஓய்வுபெற்றிருந்தாலும் எஹுத் பராக், ட்விட்டரில் நெதன்யாகுவைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவந்தார். இஸ்ரேலியர்களுக்கு உரிமையல்லாத பகுதியான மேற்குக் கரையைத் தங்களுடன் சேர்த்துக்கொள்வதுடன் ‘ஒரு வாக்காளர் - ஒரு வாக்கு’ என்ற இஸ்ரேலிய ஜனநாயகத்தின் அடிநாதமான கொள்கையையே பாலஸ்தீனர்களுக்கு மறுக்கப்பார்க்கிறார் நெதன்யாகு என்பது அவருடைய குற்றச்சாட்டு.
எஹுத் பராக்கின் போராட்டம்
  • பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான இடங்களை இஸ்ரேலிய அரசு கைப்பற்றிவிடாமல் தடுத்துக்கொண்டிருப்பது இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம், துடிப்புள்ள மனித உரிமைக் குழுக்கள், செய்தி ஊடகங்கள் ஆகியவைதான். பாலஸ்தீனர்களுடைய பகுதிகளை மட்டும் இணைத்துக்கொண்டு, பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலியர்களுக்குச் சமமான அரசியல் உரிமைகளை மறுப்பதுதான் இஸ்ரேலிய வலதுசாரிக் கட்சிகளின் திட்டம்.
  • இஸ்ரேல் தொடர்பாக வெளிநாட்டவர்கள் இரண்டு விஷயங்களை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். முதலாவது, மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் தனித்தனியாக வசிப்பது, அல்லது சம உரிமைகள் அடிப்படையில் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் இணைந்து வாழ்வது. ஆனால், இஸ்ரேலிய வலதுசாரிகள் மூன்றாவது நிலையை விரும்புகிறார்கள். மேற்குக் கரையில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கு எந்த உரிமையையும் தராமல் அந்தப் பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பதுதான் அது. இதற்குப் பெரிய தடையாக இருப்பது உலகத் தரம்வாய்ந்த இஸ்ரேலிய நீதித் துறை, சுதந்திரமுள்ள செய்தி ஊடகங்கள், சிவில் உரிமைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் இஸ்ரேலியர்கள். இந்த மூன்று பிரிவினரையும் அதிகாரம் இல்லாதவர்களாக்கிவிட வலதுசாரிகள் சிந்தித்துவருகின்றனர். ஆனால், எஹுத் பராக் அனைத்து இஸ்ரேலியர்களையும் இணைக்கும் வழிகளை ஆராய்கிறார்.
  • பராக்கால் இந்தத் தேர்தலில் பெருவெற்றி பெற்றுவிட முடியாது. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் வலதுசாரிகளின் உள் திட்டங்களைத் தேர்தலில் விவாதிக்க முடியும். தொழிலாளர் கட்சியும் நீலம்-வெள்ளை கட்சியும் இதைப் பேச நேரும். எதிர்கால நிறவெறி அல்லது இனவெறி அரசு இஸ்ரேலில் உருவாகிவிடாமல் தடுக்க முடியும். பராக் தன்னுடைய கட்சிக்கு ‘ஜனநாயக இஸ்ரேல்’ (இஸ்ரேல் டெமாக்ரடிட்) என்று பெயர் சூட்டியிருக்கிறார். “நமக்கு இஸ்ரேல் என்ற நாடு வேண்டுமா, நெதன்யாகுவின் நாடு வேண்டுமா என்று தேர்வு செய்தாக வேண்டும். இஸ்ரேலிய ஜனநாயகம் சிதைக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். சட்டங்களை உள்நோக்கத்துடன் சேதப்படுத்தாமல் தடுக்க வேண்டும். நீதிமன்றங்களும் காவல் துறையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இஸ்ரேலுக்குத் தேவைப்படும் யூத, ஜனநாயக நாட்டை வலதுசாரிகள் சிதைத்துவிடாமல் காக்க வேண்டும். நாம் அறிந்தவரை இதுதான் மிகவும் துக்ககரமான நாட்கள்” என்று பேசியிருக்கிறார் எஹுத் பராக்.

நன்றி: இந்து தமிழ் திசை (18-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories