TNPSC Thervupettagam

உடனடித் தேவை உயர் கல்வி மேம்பாடு...!

July 4 , 2019 2004 days 2051 0
  • இந்தியாவின் கல்விக் கட்டமைப்பை உடனடியாகச் சீர்திருத்தம் செய்தாக வேண்டும். 2030-ஆம் ஆண்டு வாக்கில் உலகிலேயே அதிக இளைஞர்களை உள்ளடக்கிய நாடாக இந்தியா உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  அதாவது, நம் நாட்டில்  2030-ஆம் ஆண்டில்  20 முதல்  30 வயது வரை உள்ள இளைஞர்கள் 14 கோடி பேர்இருப்பார்கள். உலகின் உயர் கல்விப் பட்டம் பெறும் நான்கு பட்டதாரிகளில் ஒருவர் இந்தியர் என்ற நிலைமை உருவாவது நிச்சயம். அதற்கான அடிப்படைக் கட்டமைப்புக்கும், உயர் கல்வித் தரத்துக்கும் நாம் நம்மைத் தயார்படுத்திக் கொண்டாக வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சியையும், அதைத் தக்கவைத்துக் கொள்ளும் நிலைமையையும் உயர் கல்வியால் மட்டுமே உருவாக்கித் தரமுடியும்.
  • உலகின் எல்லா நாடுகளுடனும் போட்டியிட்டு பொருளாதாரத்தை வளரச் செய்யும் நிலைமையை உருவாக்க, உயர் கல்வி பட்டம் பெற்ற வல்லுநர்கள் தேவை. அதற்கேற்ற பட்டதாரிகளை உருவாக்க, நமது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தயார் நிலையில் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் போட்டி நாடுகளாக சீனா,  சிங்கப்பூர், தைவான், தென்கொரியா ஆகியவை உள்ளன. அந்த நாடுகள் உயர் கல்வி நிறுவனங்களையும், பல்கலைக்கழகங்களையும் அண்மைக்காலங்களில் உருவாக்கி, நிறைய மாணவர்களை தயார் படுத்துகின்றன.
கல்வியின் தரம்
  • கல்வியின் தரத்தை  உயர்த்தும் வகையில் அந்த நாடுகளின் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிகளும், அகில உலகத் தரத்துக்கு வளர்ந்துள்ளன. லண்டன் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் பிரசுரித்த உயர் கல்வியின் தரவரிசைப் பட்டியலில், உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் சீனாவில் மூன்று, ஹாங்காங்கில் மூன்று, தென்கொரியாவில்  மூன்று, தைவானில் ஒன்று, இந்தியாவில் ஒன்று என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  இதில் 41-ஆவது  இடத்தில் இருப்பது இந்தியாவின் ஒரு ஐ.ஐ.டி. கல்லூரி.  இந்தியாவின் வேறு எந்தக் கல்லூரியும், பல்கலைக்கழகமும் இந்தத் தரவரிசைப் பட்டியலில் கிடையாது.  இது முற்கால இந்திய உயர் கல்வி தரத்தை உணர்ந்த பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும்.
  • அமெரிக்காவின் விண்வெளிப் பயணத்தைத் திட்டமிட்டு இயக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர்கள் நான்கு ராக்கெட் வல்லுநர்கள். அதில் இரண்டு பேர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு உயர் கல்விக்குச் சென்று பயிற்சி பெற்று, அந்த நாட்டின் குடிமக்களாகி விஞ்ஞானி ஆனவர்கள். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை தேடியும், உயர் கல்விக்காகவும் வருபவர்களுக்கு மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
  • அவ்வளவு தரமான புகழுடன் நம் இந்திய உயர் கல்வியின் தரம் இருந்தது. இன்றைய நிலைமையிலும், உயர் கல்வியின் தரத்தை உயர்த்த இந்தியாவிற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. காரணம், இங்கே உயர் கல்வியிலும், பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிகளிலும் ஆங்கிலம்  சர்வ சாதாரணமாக மாணவர்களால் உபயோகிக்கப்படுகிறது. அப்படி இருந்தும்கூட, நமது உயர் கல்வி வளர முடியாமல் போவது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும்.
  • நிறைய கல்லூரிகள், தனியார் வசப்பட்டு, வியாபார நோக்கில் லாபத்துக்காக நடத்தப்படுகின்றன. அரசியல் புகுந்து, பேராசிரியர்களும், துணைவேந்தர்களும் பதவியில் அமர்த்தப்படுகின்றனர். இந்த தனியார் கல்லூரிகளில் நூலகங்கள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. ஆய்வுக்கூடங்களுக்குத் தேவையான உபகரணங்களும், சோதனைக்கான பொருள்களும் வாங்கி வைக்கப்படுவதில்லை. கல்லூரி வகுப்பறைகள் தரமானவையாக பராமரிக்கப்படுவதில்லை.
  • பகுதி நேர ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் அமர்த்தப்படுகின்றனர். ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்கள் யாருமே கல்லூரிகளில் கிடையாது என்கிற நிலைமை பரவலாகவே உருவாகிவிட்டது.
  • கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் செய்யப்படும் ஆராய்ச்சிகளே, உயர் கல்வி வளர்வதற்கு அடிப்படை. கல்லூரி ஆசிரியர்கள், அவர்கள் போதிக்கும் பாடங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கட்டாயம். ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அவர்களது மிகத் தரமான, புதிய கண்டுபிடிப்புகளும், விளக்கங்களும் இருந்தால் மட்டுமே கட்டுரைகள் ஒப்புக் கொள்ளப்பட்டு புகழ்பெற்ற ஆராய்ச்சி பத்திரிகைகளில்  வெளியிடப்படும். இதுபோன்ற கட்டுரைகளை எழுதி வெளியிடும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு மட்டுமே அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். பணியில் தொடர அனுமதிக்கப்படுவர்.
சம்பள உயர்வு
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எல்லா கல்லூரி ஆசிரியர்களுக்கும் குறிப்பிட்டபடி ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படுவது இயல்பு. அமெரிக்காவின் தரமான பல்கலைக் கழகங்களில் 3 ஆண்டுகள் எந்த ஆராய்ச்சிக் கட்டுரையையும் வெளியிடாத கல்லூரி ஆசிரியர்களுக்கு அவர்கள் வேலையிலிருந்து நின்று கொள்கிறார்களா என்ற கேள்வியுடன் நோட்டீஸ் வழங்கப்பட்டுவிடும்.  இந்த மாதிரியான ஆராய்ச்சிக்கான முக்கியத்துவத்துக்கு, பாடங்களில் புதிய எண்ண ஓட்டங்கள் இல்லாத ஆசிரியர்களும், பேராசிரியர்களும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியாது என்ற நிரூபிக்கப்பட்ட நடைமுறையே காரணம்.
உளவியல் கண்டுபிடிப்பு
  • ஆராய்ச்சியில் நாட்டமுள்ள உயர் கல்வி ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு கல்வியை தரமாக போதிப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என்ற உளவியல் கண்டுபிடிப்பு கவனிக்கத்தக்கது. மற்ற வேலைகள் கிடைக்காததால் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தேன் என ஒருவர் கூறினால், அவர் மாணவர்களுக்கு தரமான முறையில் பாடம் போதிக்கும் ஆசிரியராக இருக்க முடியாது. டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் ஜெர்ரி வாஃபர்ட் எனும் பேராசிரியர் இருந்தார். அவர் நிறைய சம்பளம் கிடைக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் சேர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின் கல்லூரிப் பேராசிரியராக மீண்டும் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினார்.
  • அங்கு அவருக்கு தனியார் நிறுவனத்தில் கிடைத்த சம்பளத்தைவிடவும் குறைவான சம்பளமே வழங்கப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்ட ஒரு மாணவரிடம், எனக்கு சம்பளம் குறைவாகக் கிடைத்தாலும், ஆராய்ச்சியிலும் மாணவர்களுக்கு பாடம் போதிப்பதிலும் கிடைக்கும் ஆத்ம திருப்தி தனியார் நிறுவன வேலையில் கிடைக்கவில்லை எனக் கூறினாராம்.அதுபோன்ற பேராசிரியர்கள்தான் தரமான உயர் கல்விக்காக நமக்குத் தேவைப்படுகிறார்கள்.
  • ஆராய்ச்சிகளில் உயர் கல்வியில்  மிளிர்வது இன்றைய நிலையில் அமெரிக்காதான். இந்தியாவில் பி.எச்.டி பட்டம் பெற கைடுகள் எனப்படும் பேராசிரியர்களின் தயவு மாணவர்களுக்குத் தேவை.  தற்காலத்தில் கைடுகளுக்கு பணம் வழங்கினால், பி.எச்.டி. பட்டம் பெறத் தேவையான ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர்களே எழுதி மாணவர்கள் எழுதியதாகக் காட்டி பட்டம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த அடிமட்ட நிலையிலிருந்து நம் நாடு எப்படி மீண்டெழுந்து நமது உயர் கல்வியின் தரம் உயரும் என்கிற கவலை உருவாகிறது.
  • அரசின் எந்த நிதி உதவியும் பெறாமல் நம் நாட்டில் சுயநிதிக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற 450 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.  இதில் 10,000 ஆசிரியர்கள் நீண்டகாலம் பணியில் உள்ளனர்.  இந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற்று இயங்குகின்றன.
  • கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பி.எச்.டி. அல்லது செட்நெட் பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும்.  சுயலாபத்துக்காக வியாபார நோக்கில் நடத்தப்படும் இந்தக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் இதுபோன்ற பட்டம் பெற்றிருக்கவில்லை என 2014-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கு ஒன்றின் தீர்ப்பு கூறுகிறது.
  • தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் இந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியும், பலமுறை தங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வுகள் செய்தும் இந்த ஆசிரியர்களின் தகுதியின்மை கண்டுபிடிக்கப்படவில்லையா அல்லது ஊழல் காரணமாக அதிகாரிகள் கையூட்டு பெற்றதால் கண்டுகொள்ளவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
ஐந்து தேவைகள்
  • உயர் கல்வியின் தரத்துக்கு மோஹத் எனும் கல்வியாளர் ஐந்து தேவைகளைக் கூறியுள்ளார். (1) நன்னடத்தை; (2) வெளிப்படைத்தன்மையுடன் இயங்குதல்; (3) தரமான பலதரப்பட்ட நல்ல ஆசிரியர்கள்; (4) முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள்;  (5) போட்டிபோட்டு நற்பெயர் வாங்கும் ஆர்வம் ஆகியவையே அவை. மேலே குறிப்பிட்ட எதுவுமே இன்றைய நமது பல்கலைக்கழகங்களில் இல்லை எனலாம்.  ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். மற்றும் சில குறிப்பிட்ட உயர்கல்வி நிலையங்களில் இவை எல்லாமே உள்ளன.  இவற்றில் உருவாகும் 80 சதவீத மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் பணி செய்யச் சென்றுவிடுகிறார்கள் எனவும் 20 சதவீதத்தினர் மேல்படிப்புக்காக வெளிநாட்டிற்குச் சென்று பின் அங்கேயே தங்கிவிடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு நாட்டில் உயர் கல்வியில் தரமாக மாணவர்கள் தேறி, ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தால், பொருளாதார முன்னேற்றத்துக்கு  அவர்கள் உதவி நாட்டுக்கு நன்மை செய்ய முடியும்.
  • இதுபோன்ற நிலைமையை மாற்றியமைத்து, நம் நாட்டின் உயர் கல்வியைத் திருத்தி அமைப்பது மிகவும் அவசர அவசியமாகிறது.  புதிய கல்விக் கொள்கையைவிட, இன்றைய உயர் கல்வியைத் திருத்தி அமைப்பதே உடனடித் தேவை.

நன்றி: தினமணி (04-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories