- தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை என்றால், பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடுகிறது. ‘தமிழகத்தின் மின் தேவை இத்தனை மெகாவாட். தற்போது இவ்வளவு பற்றாக்குறை இருக்கிறது. காரணம், நீர்மின் நிலையங்களுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு இல்லை. காற்றாலைகள் இயங்கவில்லை. சென்னை தவிர்த்த பிற ஊர்களில் இத்தனை மணி நேரம் மின் தடையை ஏற்படுத்துகிறோம்’ என்றெல்லாம் அரசுத் தரப்பும் சொல்கிறது; பொதுச் சமூகத்துக்கும் தெரிகிறது. ஆனால், ‘தமிழத்தின் தண்ணீர் பற்றாக்குறை இவ்வளவு... இதனால்தான் இந்தப் பற்றாக்குறை... எத்தனை நாட்கள் இருப்பைக் கொண்டு சமாளிக்க முடியும்... அதற்குப் பின் என்ன செய்யப்போகிறோம்’ என்று ஏதேனும் கணக்கு இருக்கிறதா?
- தண்ணீர் பயன்பாட்டைப் பொறுத்தவரையில், நம்மிடம் எந்த வகையான கணக்கு வழக்கும் கிடையாது. குடிநீர் வழங்கல் விஷயத்திலும் அதுதான் நடக்கிறது. ஒரு கிராமத்தின் நீர்த் தேவை எவ்வளவு என்பது, அந்த ஊர் மக்களுக்கு குறைந்தபட்சம் ஊரை நிர்வகிக்கிற உள்ளாட்சி அமைப்புகளுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மதிப்பீடுகள் அவசியம்
- வெறுமனே இது சின்ன ஊர் இவ்வளவு போதும், இது பெரிய ஊர் எனவே இவ்வளவு தேவை என்று கண்மூடித்தனமாக முடிவெடுக்காமல், தண்ணீர் மதிப்பீட்டுக் குழு (வாட்டர் அசெஸ்மென்ட் கமிட்டி) அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். கிராமப்புற மதிப்பீட்டுக் குழு, நகர்ப்புற மதிப்பீட்டுக் குழு என்று இரு பிரிவாகக் குழுக்களை அமைப்பது அவசியம்.
- கிராமம் என்றால் அங்கே உள்ள நீர் ஆதாரங்கள் எவை? அரசு ஆவணங்களில் உள்ள அதே அளவுகளின்படி ஆறு, குளம், வாய்க்கால் உள்ளதா? இல்லையென்றால் எவ்வளவு ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் கிடைக்கிற தண்ணீரின் அளவு எவ்வளவு என்று கணக்கெடுக்க வேண்டும். கூடவே ஊரில் குடியிருக்கும் மக்கள்தொகை, ஊராட்சிப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அங்கன்வாடிகளின் எண்ணிக்கை, அங்கே படிப்பவர்கள், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், ஊரில் உள்ள சிறுகுறு தொழில் நிறுவனங்கள், அங்கு உற்பத்தியாகும் பொருட்கள், தேவையான தண்ணீர் என்று அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்க வேண்டும்.
நகரங்களின் நீர்த் தேவை
- இதுவே நகரங்கள் என்றால் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், தனியார் தங்கும் விடுதிகள், பொதுக் கழிப்பறைகள், வாகன பராமரிப்பு நிறுவனங்கள், பெரும் தொழிற்சாலைகள், குடிநீர் கேன் நிறுவனங்கள், மத வழிபாட்டுத்தலங்கள், அங்கு நடைபெறுகிற பெரிய விழாக்கள் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவரையில் அந்த ஊருக்கென நிறைவேற்றப்பட்ட குடிநீர்த் திட்டங்கள் எவை; அதன் மூலம் எவ்வளவு தண்ணீர் வழங்கப்படுகிறது, பற்றாக்குறை எவ்வளவு என்ற ஆய்வு கட்டாயம் தேவை. இப்படி ஒவ்வொரு ஊரிலும் தரவுகளை சேகரிக்க ஆட்களும், நாட்களும் அதிகம் தேவைப்படும் என்பதால், உள்ளூர் தன்னார்வலர்களையும் கல்லூரி மாணவர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- வெறுமனே தண்ணீர் பற்றாக்குறை அளவை அறிவதற்காக மட்டும் இந்தக் கணக்கெடுப்பு அல்ல. அதை ஈடுசெய்வதற்கு மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் போன்றவற்றைத் திட்டமிடவும் விரைவுபடுத்தவும் இந்தப் புள்ளிவிவரங்கள் பயன்படும். நீர் ஆதாரங்களைக் கண்டறியவும் நீரின் தன்மையைக் கண்காணிக்கவும் குழு அமைக்க வேண்டும் என்று கடந்த 2000-ம் ஆண்டு மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கீழுள்ள குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அது இதுவரையில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
செயற்கைப் பற்றாக்குறை
- தனிநபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு கிராமம் என்றால் 55 லிட்டர், பேரூராட்சி என்றால் 90 லிட்டர், நகராட்சி என்றால் 110 லிட்டர், வசிப்பது மாநகராட்சி என்றால் 150 லிட்டர் வழங்க வேண்டும் என்பது குடிநீர் வாரியம் நிர்ணயித்த இலக்கு. அதன்படி, தமிழகத்தில் 21 கோடி மக்களுக்கு, தினமும் 2,073 எம்எல்டி (மில்லியன் கன லிட்டர்) தண்ணீர் வழங்கப்பட வேண்டும், ஆனால், 1,803 எம்எல்டிதான் வழங்கப்படுகிறது என்று கடந்த நிதியறிக்கையின்போது நம் சட்டமன்றத்தில் அரசு தெரிவித்தது. 4.21 கோடி மக்களுக்குத்தான் குடிநீர்த் திட்டம் இருக்கிறதா, எஞ்சியுள்ள மக்கள் குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வரவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
- உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒரு கணக்கு இருக்கிறது. உதாரணமாக, மதுரை மாநகருக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர்த் தேவை என்றால், அதை ஈடுகட்டும் அளவுக்கு தண்ணீர் வைகையில் இருந்து எடுக்கப்பட்டுவிடுகிறது. ஆனாலும், மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறார்கள் என்றால், குடிநீர்த் திருட்டே காரணம். முறைகேடான இணைப்புகள் மூலம் தொழில் நிறுவனங்களும், பணக்காரர்களும் மின் மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சிக்கொள்வதால், செயற்கையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் முறையான ஆய்வுகள் தேவை.
- தமிழகத்தில் குழாய் மூலம் வருகிற தண்ணீருக்குத்தான் தட்டுப்பாடு நிலவுகிறது. லாரி தண்ணீரும், கேன் தண்ணீரும், பாட்டில் தண்ணீரும் தங்கு தடையின்றி கிடைக்கிறது எனில் பிரச்சினை எங்கிருக்கிறது? குழாய் மூலம் வருகிற கார்பரேஷன் தண்ணீரை மக்கள் ஏன் குடிக்கத் தயங்குகிறார்கள்? குடிநீர் வழங்கல் மட்டுமல்ல, திட்டமிடல், திட்டத்தைச் செயல்படுத்துதல், பராமரிப்பு, தரத்தைப் பரிசோதித்தல் அனைத்தும் ஒரே துறையின் கீழ் வர வேண்டும். குடிநீர் வழங்கல் துறையானது தன்னாட்சி அதிகாரம் பெற்ற, தன் ஊழியர்களுக்கு சம்பளம் போடவே அரசிடம் கையேந்தும் நிலை இல்லாத நிலையை அடைய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தண்ணீருக்கென தனி பட்ஜெட் தேவை.
நன்றி: இந்து தமிழ் திசை (14-06-2019)