டயட் என்றால்:
- மூன்று வேளையும் சாப்பிடவேண்டும். ஆனால் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ருசிக்குச் சாப்பிடாமல் பசிக்குச் சாப்பிடவேண்டும். மாவுச்சத்து, கார்போ ஹைட்ரேட், கொழுப்பு மிக்க உணவுகள், இனிப்புகள், எண்ணெய் வறுப்புகள் என்று எதையும் தொடக்கூடாது. நெடுந்தூரம் பயிற்சி செய்துவிட்டு, இரண்டு மடங்கு உணவை விழுங்கக் கூடாது. சாலட், காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், முளை கட்டிய தானியங்கள் என்று பட்டியலிட்டு மூன்று வேளை உடலுக்குத் தேவையான கலோரிகள், கார்போஹைட்ரேட்கள் இத்யாதி.. எல்லாம் சேர்ந்த டயட் ஷீட் தான் நீங் கள் சாப்பிடும் உணவை அளவை நேரத்தை முடிவுசெய்யும். டயட் கன்ட்ரோலை ஃபாலோ செய்யும் கன்ட்ரோல் மட்டும் உங்களிடம் இல்லையென்றால் பருமன் உங்களை பலவீனப்படுத்திவிடும்.
டயட் யாருக்கு:
- ’டயட் கன்ட்ரோல்ல இருக்கேன்’ என்று பெருமிதப்படுவது இருக்கட்டும். உயரத்துக்கேற்ற எடை இருந்தாலே ஆரோக்கியம் என்கிறார்கள். ஒருவர் 165 செமீ இருந்தால் அவரது எடையானது 165 லிருந்து -100 ஐ கழித்து மீதியிருக்கும் 65 கிலோவாக இருக்க வேண்டும். இதிலிருந்து 5 கிலோவரை அதிகமாக இருந் தால் பிரச்னையில்லை. அதே போன்று 65 லிருந்து 60 கிலோவாக குறைந்து இருந்தாலும் கவலை கொள்ள தேவையில்லை. ஆனால் 70 க்கும் மேற்பட்டு இருந்தாலே உடல் பருமன் என்று சொல்லலாம். இப்படி உயரத்துக்கேற்ற எடையை விட அளவுக்கதிகமாக உடல் பருமனைக் கொண்டிருப்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
- இவர்களில் அதிக உடல் பருமனைக் கொண்டிருப்பவர்கள் தான் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று டயட் என்னும் வார்த்தையைப் பார்த்தாலோ கேட்டாலோ படித்தாலோ மனம் முழுவதையும் ஒருமுகப்படுத்தி அதை செய்தும் பார்க்கிறார்கள். ஆனால் பலன் என்பது எல்லோருக்கும் கிட்டுவ தில்லை என்பதுதான் இங்கு மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
பலனளிக்காத டயட்:
- ’ஏய் என்னடி பூசினாப்ல இருக்க.டயட் கன்ட்ரோல்ல இரு’
- ’என்ன மச்சான் தொப்பை பலமா இருக்கு. கீழே குனிஞ்சு உன் கட்டைவிரல பார்க்கிற அளவுக்கு உடம்பைக் குறை’
- ’சிறுத்த குட்டிபோல் அழகா இருந்தே… கல்யாணம் ஆகி குழந்தை பிறந்ததும் பருத்து பெருத்துட்டியே’
- மேற்கண்ட இந்த வசனங்கள் போதும். இடி விழுந்தது போல் சுருண்டு உட்கார! பிறகுதான் டயட் கன்ட்ரோலில் இருக்கிறேன் பேர்வழி என்று கண்டதையும் தானாகவே முயற்சி செய்து பலனளிக்காமல் பருமனோடு மன அழுத்தத்தையும் சேர்த்து வாங்கி ஏற்றிக் கொள்கிறார்கள்.
- டயட் கன்ட்ரோல் தேவைதான், ஆனால் சுய உணவு கட்டுப் பாட்டை கடைப்பிடித்து பருமனோடு உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்ளும் பலனளிக்காத டயட் கன்ட்ரோல் தேவையே இல்லை.
பருமனா இருந்தாலே டயட் கன்ட்ரோலா:
- உலக சுகாதார நிறுவனம் நீரிழிவு நோய்க்கு அடுத்தபடியாக ஆபத்தான நிலையில் இருக்கும் பிரச்சினை உடல் பருமன் என்று தெரிவித்துள்ளது. உடல் பருமன் நேரிடையாக பாதிப்பை ஏற் படுத்தாவிட்டாலும் அது பல்வேறு நோய்கள் உருவாகும் கூடாரமாக இருக்கிறது, சிகப்புக் கம்பளம் விரித்து, வரவேற்கிறது என்பதில் மாற்றமில்லை என்பதை எச்சரிக்கிறது. குழந்தைகள், இளைய தலைமுறையினர், 40 வயதைத் தொட்டிருப்பவர்கள் என்று உடல் பருமனாக இருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்தான் பெரும்பாலோனோர் உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாட்டு முறையைப் பின் தொடர்கிறார்கள்.
- தீர்வைக் கண்டறிவது இருக்கட்டும். ஆனால் பிரச்சினை என்பதே தெரியாமல் தீர்வு எப்படிக் கண்டறிய முடியும். உடல் பருமனுக்கு இதுதான் காரணம் என்று தெரியாமல் உணவுக்கட்டுப்பாடு இருப்பது பூப்படையாத பெண்ணுக்கு நாளை பிறக்கப் போகிற குழந்தைக்கு பெயர் வைப்பது போல் இருக்கிறது.
- டயட் கன்ட்ரோல் என்று பெருமைப்பட்டு வயிற்றைச் சுருக்குவதை விட காரணத்தைக் கண்டறிவதே மிகவும் முக்கியம்.
காரணம்:
- முதல் காரணம் கடுமையான உடல் உழைப்பு என்பது இல்லாதது. இரண்டாவது மூன்றாவது காரணமும் உடல் உழைப்பு இல்லாததுதான்! அடுத்தது உணவுப்பழக்கம். நவீன உணவு என்று சத்தை இழந்து சக்கையை உண்கிறோம். பாரம்பரிய உணவுகள் இடம்பிடிக்க வேண்டிய தட்டுகளில் செயற்கைச் சுவையூட்டிகள் நிறைந்த மேற்கத்திய உணவுகள் நிறைந்திருக்கின்றன. குழந்தைகளும் பெரியவர்களும் வாய் நிரம்புவதும் தெரியாமல் வயிறு நிரம்புவதும் தெரியாமல், கவளத்தை வாயிலும் கண்களைத் தொலைக்காட்சியிலும் பதிக்கிறார்கள். பிறகு எப்படி உடல் கட்டுக் கோப்பாக இருக்கும். கூடவே பரம்பரை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் இப்படி உடல் பருமனுக்குக் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என பின்பற்றுவது மட்டுமே எப்படித் தீர்வாக இருக்க முடியும்.
- மன அழுத்தத்தால் உடல் பருமனானவர்கள் மன அழுத்தத்தைக் குறைக்காமல் உணவை மட்டும் கட்டுப்படுத்துவதால் உடல்பருமன் அதிகரித்து மேலும் அழுத்தத்துக்குத்தான் உள்ளாகிறார்கள். நாளெல்லாம் ஏஸி அறையில் அமர்ந்து உடலுக்கு வேலை கொடுக்காமல் உணவை மட்டும் குறைத்தால் எப்படி உடல் பருமன் குறையும்.
டயட் கன்ட்ரோல்:
- வரும் முன் காப்போம் என்று வராத பிரச்சினையை வரவழைத்துக்கொள்ளும் வகையில் ’எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன். அதனால் தான் டயட் கன்ட்ரோலில் இருக்கிறேன்’ என்று நாலு மினி இட்லி சாப்பிட்டு 4 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் சிம்ரன் இடையழகிகள் நிறைய பேர் இங்கு உண்டு. ஆரோக்கியம் குன்றி நோய் வருவதால் தான் உடல் பருமனைக் குறைக்கச் சொல்கிறோம் என்று சொல்லும் மருத்துவர்கள், கூடவே... உடலில் சத்துக்கள் இல்லாமல் மெலிந்து இருந்தால் அதுவும் நோய் வருவதற்கான பிறப்பிடம் என்று சொல்லவும் செய்கிறார்கள். ஆரோக்கியம்தான் அழகின் இருப்பிடம் என்பதை மறந்து ஆர்வக்கோளாறால் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகளின்றி தவறான டயட் கன்ட்ரோலை முன்னெடுத்து பின்னாளில் உடல் குறைத்தேன் நோயை வளர்த்தேன் என்று புலம்புவர்களே அதிகம்.
உழைத்தால் டயட் எதற்கு:
- உடல் பருமனால் நோய் என்பதை விட உடல் உழைப்பு குன்றியதால்தான் நோய் என்று சொல்வதே சரியாக இருக்கும். சமீபத்தில் நீரிழிவு மருத்துவர் ஒருவரிடம் சென்றேன். பரிசோதனையில் எனக்கு நீரிழிவு என்று உறுதியானது. ”மாத் திரை சிகிச்சையா? மனோதத்துவ சிகிச்சையா?” என்றார். ”மாத்திரைகள் வேண்டாமே” என்றேன்.
- பழங்கள், காய்கறிகள், கீரைகள், கேழ்வரகு, அரிசி கூட சாப் பிடுங்கள். ஆனால் நன்றாக மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிடுங்கள். தினமும் காலை அல்லது மாலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும். இனிப்பு கூட சாப்பிடலாம். ஆனால் பதிலுக்குக் கூட அரைமணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள் என்றார். ஒருவித பயத்தோடு அவர் சொன்னதை எல்லாம் கடைபிடித்தேன். அடுத்தடுத்த மாதங்களில் பரிசோதனை செய்ததில் நீரிழிவு நோயின் அளவு, அளவாகவே இருந்தது.
- நமது முன்னோர்களைப் பரிசோதனை செய்திருந்தால் அவர்களுக்கும் நீரிழிவு இருந்திருக்குமோ என்னவோ. ஆனால் அவர்கள்தான் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தார்களே. பெரும்பாலும் நடைபயணம், அவ்வப்போது சைக்கிள், வயல்வேலை, வீட்டுவேலை, கிணற்றில் நீர் இறைத்தல், அம்மி, ஆட்டு உரல் என்று அனைத்து வயதினருமே உடலுக்கான உழைப்பை சீராக கொடுத்ததால் இன்சுலின் சுரப்பதும் நார்மலாக இருந்திருக்கிறது. உணவு முறைகளும் தேவையற்ற கொழுப்பை அவர்களுக்கு உண்டாக்கவில்லை என்பதால் உடலைக் கட்டுகோப்பாக வைத்து ஆரோக்கியமாக சுகமாக வாழ்ந்தார்கள்.
டயட் எச்சரிக்கை:
- ’வாரத்துக்கு 4 கிலோ, மாதத்துக்கு 20 கிலோ குறைக்க நாங்கள் உதவுகிறோம்’ என்று விளம்பரங்கள் உடல் பருமனைக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையைப் போலவே அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சிலந்திவலையில் சிக்கிய விட்டில் பூச்சிகளைப் போல் பலரும் பருமன் குறையாமல் ஏமாந்து வருவதும் அதிகமாகவே நடக்கிறது. மறுபுறம் உடற்பயிற்சி செய்கிறேன். உணவை குறைத்துவிட்டேன். ஆனால் உடல் எடை குறையவில்லை என்று ஆதங்கப்படுபவர்களையும் பார்க்க முடிகிறது.
- கடுமையான முறையில் திட்டமிடாத சத்துக்கள் இல்லாத உணவுமுறை பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். உடலுக்குத் தேவையான சத்துகள், வைட்டமின்கள், மினரல்கள், தாதுக்கள் குறையாமல் சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
- உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாவிட்டாலும் உடலுக்கு போதிய உழைப்பை அன்றாடம் கொடுத்துவந்தால் உடல் எடை மெதுவாக கட்டுப்படும். இயன்றவரை மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். கொழுப்பு மிக்க உணவுகள், இனிப்புகள், நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் இவை உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதுமே நல்லதல்ல. எனவே, இயல்பாகவே அதை ஒதுக்கிவிடுவதும் ஒருவகையில் டயட் கன்ட்ரோலைத்தான் குறிக்கும். அப்படியும் டயட் கன்ட்ரோலை கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்பினால் மருத்துவரின் உதவியோடு உடல் பருமனைக் குறைப்பதே நல்லது.
- நடந்தால் உடம்பும் கூடவே வருகிறது என்று கேலியாக சொல்வார்கள். ஆனால் நடந்தால் ஆரோக்கியம் கூடவே வருகிறது என்று மனதுக்குள் அழுத்தமாக சொல்லிக் கொள்ளுங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (22-05-2019)