TNPSC Thervupettagam

உரத்துப் பேசப்படாத ஓர் உண்மை

March 29 , 2019 2078 days 2030 0
  • வரும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கைகளை நமது தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகள் அனைத்தும் வெளியிட்டுள்ளன. அனைத்து அறிக்கைகளையும் ஒரு சேரப் பார்க்கும்போது விடுபட்டுப்போன மக்கள் நலத்திட்டங்கள் என்று பெரிதாக ஏதுமில்லை.
  • அதே நேரத்தில் இந்த அறிக்கைகளில் உரத்தும், அறிவியல்பூர்வமாகவும், சொல்லப்படாத, விட்டுப்போன ஒரு வாக்குறுதி உண்டென்றால், அது தமிழ்வழிக் கல்வியை உறுதியாக நடைமுறைப்படுத்துவோம் என்பது மட்டும்தான். பா.ம.க.வின் அறிக்கை மட்டும் அதை லேசாகத் தொட்டுச் செல்கிறது.
பொதுப் பட்டியல்
  • மற்றபடி அனைத்து அறிக்கைகளும் கல்வியை மத்திய அரசின் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவோம், மத்திய அரசின் அலுவல் மொழியாகத் தமிழை இடம்பெறச் செய்வோம் என்றும் சொல்கின்றன.
  • வழக்கம்போலவே அனைத்து அறிக்கைகளிலும், தமிழ்மொழி சார்ந்த வாக்குறுதிகளில் ஒரு பொதுத்தன்மை காணப்படுகிறது. இது வழக்கமானதொரு சடங்கின் குரல்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ்நாட்டில்
  • தமிழ்நாட்டில் தமிழைப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், மதிப்பிற்குரியதாக மாற்றுவதற்கும், கோடிக்கணக்கான நமது மாணவர்களின் இயற்கையான அறிவாற்றலை வெளிக்கொண்டு வருவதற்கும் இருக்கின்ற உண்மையான ஒரு வழி உண்டென்றால், அது தமிழ்வழிக் கல்வி மட்டும்தான். தமிழ்நாட்டில், தமிழ்மொழிதான் பயிற்று மொழி என்ற நிலை ஏற்பட்டால் மட்டும்தான், தமிழ் தனது பாதுகாப்பையும், வளர்ச்சியையும், தானே வடிவமைத்துக் கொள்கின்ற வாய்ப்பினைப் பெறும். தமிழ்நாட்டின் கல்வி முறையிலும் ஒரு சிந்தனை மலர்ச்சி ஏற்படும்.
  • தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி நடத்தப்பட்டு வருகின்ற போராட்டங்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது. 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் முன்னெடுப்பில் 102 தமிழ் அறிஞர்கள் அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உயிர்துறக்கும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த அந்தப் போராட்டம், அப்போதைய அரசின் வாக்குறுதிகளை நம்பி கைவிடப்பட்டு, பின்னர் நீதியரசர் குழு, கலந்தாய்வு, கருத்துக் கேட்பு, அறிக்கை அளிப்பு என்றெல்லாம் முகம் மாறி, முனைமழுங்கி, நீர்த்தும் நிர்மூலமாகியும் போய்விட்டது.
மொழிப் போராட்டம்
  • மிகவும் வலிமை வாய்ந்ததாக அமையப் பெற்ற அந்த மொழிப்  போராட்டத்தில் பங்கேற்ற 102 தமிழறிஞர்களில், அதற்குத் தலைமை ஏற்ற முனைவர் தமிழண்ணல், முனைவர் இரா.இளவரசு, புலவர் கி.த.பச்சையப்பன், ஆய்வறிஞர் குருவிக்கரம்பை வேலு, புதுவையைச் சேர்ந்த முனைவர் இரா.திருமுருகன் உள்ளிட்ட பலர் இன்று நம்மிடையே இல்லை. தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி என்னும் தங்களது கனவு நிறைவேறாமலேயே அவர்கள் கண்மூடினர். அவர்களின் பணிகளைத் தொடர்ந்து செய்யப் போதுமான அளவுக்கு இளம் தமிழறிஞர்கள் தலையெடுக்கவில்லை.
  • அதற்குக் காரணம், நமது ஆங்கில வழிக் கல்விமுறையில் இருந்து தமிழறிஞர்கள் உருவாக முடியாது என்னும் இயற்கையான உண்மைதான். தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டத்தில் பங்கேற்ற திருப்பூரைச் சேர்ந்த இயற்கை வாழ்வகம் க.இரா.முத்துசாமி, இப்போதும் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
  • தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு 03.2018-ஆம் நாள் முதல் பேசா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்ட அவர், இன்றுவரை பேசவில்லை.
  • ஓர் ஆண்டைக் கடந்தும் அவர் மேற்கொண்டு வரும் மெளனப் போராட்டத்தை வரலாறு மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கிறது. அரசும், அரசியல் கட்சிகளும், அவரது போராட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
தமிழ் வழியில்
  • தமிழ்வழிக் கல்வியை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் எந்த இடத்தில் தொடுவது, எப்படித் தொடர்வது, எந்த வகையில் வெற்றிகரமாக அதைச் சாத்தியமாக்குவது என்கிற உறுதியும் தெளிவும் நமது அரசியல் கட்சிகளிடம் இல்லை, ஆட்சியாளர்களிடமும் இல்லை.
  • இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்து, கல்வி, நிர்வாகம், காவல், நீதி என்று அனைத்து முதன்மையான துறைகளிலும் தங்களது ஆங்கிலத்தை ஊன்றி வளர்த்து அதை கெட்டிப்படுத்தி உறுதி செய்த ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, அமைந்த முதல் சுய இந்திய அரசு இந்தியாவின் மொழிகளை முன்வைத்தே தனது முதல் சீர்த்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்க வேண்டும். நமது நாட்டின் விடுதலை என்பது பன்முகத்தன்மை கொண்ட நமது மாநிலங்களின் மொழிகளுக்கும் சேர்த்துத்தான் என்பது அப்போது உணரப்படவில்லை.
  • அதன் விளைவாகத்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற உயர்கல்வித் துறைகளில் இன்றளவும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்கிறது.
  • தற்போதைய இந்தியாவின் பல மாநில அரசுகள், தொடக்கக் கல்வியை தங்களது மண்ணின் மொழியில் பயிற்றுவித்து, தங்களின் பிள்ளைகளை ஆங்கிலத்தின் வல்லாதிகத்தில் இருந்து விடுவித்துக் கொண்டன. ஆனாலும், உயர்கல்வியில் அங்கெல்லாம் ஆங்கிலமே முன்வந்து நிற்கிறது. இந்தியாவில் இருந்து ஜெர்மனி, ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வியை மேற்கொள்ளச் செல்லுகின்ற இந்தியர்கள், முதலில் ஓர் ஆண்டுக்காலம் அந்தந்த நாட்டின் தாய்மொழியைக் கற்றுப் பயிற்சி பெற்ற பின்னரே அந்நாடுகளின் கல்விக்குள் நுழைய முடியும்.
ஆங்கிலம்
  • நமது இந்தியாவிலோ அது போன்ற கல்விக்குத் தங்களது தாய் மொழியை ஒதுக்கிவிட்டு ஆங்கிலத்தில் பயிற்சி பெற வேண்டும். இது கல்வி உளவியலுக்கு எதிரான ஒரு பேரவலமாகும்.
  • தற்போதைய இந்தியாவின் கல்வி நிலை இப்படியென்றால், நமது தமிழ்நாட்டின் கல்வி முறையோ ஒரு மாபெரும் பள்ளத்தாக்கில் இடுப்பொடிந்து விழுந்து கிடக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுக் காலங்களில் எத்தகைய சக்தியாலும் அசைக்கவே முடியாத அளவுக்கு ஆங்கிலக் கல்வியின் கோட்டையாக மாற்றப்பட்டிருப்பது நமது தமிழ்நாடுதான்.
  • இங்கே, இல்லாதோருக்கு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி, இருப்பவருக்கு தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி என்று கல்வியில் இருவேறு வர்க்க முறையைத் திணித்துப் பிள்ளைகளைப் பிளவுபடுத்தி தமிழ்நாட்டை மெட்ரிக் புற்றீசல் மாநிலமாக மாற்றி, வெற்றி பெற்ற பெருமை கடந்த ஐம்பது ஆண்டுக்கால ஆட்சியாளர்களையே சாரும்.
தொலைநோக்குப் பார்வைகள்
  • மொழியியலில் தொலைநோக்குப் பார்வைகள் ஏதுமின்றி, மொழியின் மீதான உண்மையான, அறிவியல் பூர்வமான அக்கறையின்றி இத்தகைய வரலாற்றுக் குற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றத்தைச் சமன் செய்யும் விதமாகவே, கடந்த ஐம்பது ஆண்டுக் காலங்களில் சிற்றின்பம் தரக்கூடிய ஒரு பொழுதுபோக்கு மொழியாக தமிழ்மொழி மாற்றப்பட்டது.
  • அதன் விளைவாகவே திரைப்படங்கள், நாடகங்கள், இசை, நடனம், பாடல்கள், பழந்தமிழ்ப் பெருமைப் பேச்சு, சொக்கவைக்கும் சொற்பொழிவுகள், இலக்கியப் பொழிப்புரைகள், நினைவு மண்டபங்கள் போன்றவையெல்லாம் பேருருக்கொண்டு வளர்ந்தன.
  • தங்களது தாய்மொழியான தமிழ் என்பது தங்கள் வாழ்வின் பயன்பாட்டு மொழியாக இல்லாமல் வெறும் பொழுதுபோக்கு மொழியாக மாற்றப்பட்டுவிட்ட ஒரு பேராபத்தை இன்னமும் கூட நமது தமிழ் மக்கள் உணரவில்லை.
  • 1956-ஆம் ஆண்டு மொழிவழி மாநிலம் அமைந்த பிறகாவது, அதையே ஒரு நல்வாய்ப்பாகவும் அங்கீகாரமாகவும் கருதி பயிற்று மொழிக் கொள்கையில் நமது தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் எச்சரிக்கையடைந்து விழித்துக் கொண்டு செயலாற்றியிருக்க வேண்டும். அப்படியெல்லாம் இங்கு எதுவும் நடக்கவில்லை.
  • கோடிக்கணக்கான நமது பிள்ளைகளை வேற்று மொழியில் கல்வி கற்று பண வேட்டையாடுமாறு வற்புறுத்துகின்ற வன்முறை நிறைந்த நமது வணிகக் கல்வி முறை, இந்திய அளவில் தோல்வியும், தமிழக அளவில் படுதோல்வியும் அடைந்துவிட்டது. தாய்மொழிக் கல்வி மட்டும்தான் கற்பவர்களைச் சிந்தனையாளர்களாகவும், படைப்பாளிகளாகவும், ஆய்வாளர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும், மாற்றக்கூடிய சிறப்பியல்புகளைக் கொண்டது என்பது உலக அளவில் உரிய  சான்றுகளோடு நிரூபிக்கப்பட்டு விட்டது.
  • இனியும் விழித்துக் கொள்ளவில்லையென்றால், ஆதரவற்று அலைகின்ற ஆங்கிலவழிக் கல்வியாளர்களை உற்பத்தி செய்து அவர்களை உருக்குலைக்கின்ற, அவர்களின் உளம் குலைக்கின்ற வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இந்த நிலையில் தங்களது தேர்தல் அறிக்கைகளில் சொல்லியிருந்தாலும், சொல்லாமல் இருந்தாலும் அமையப் போகிற இந்திய அரசு உண்மையான நமது மக்களாட்சியை நிலைநிறுத்த இரண்டு பெருங்கடமைகளைச் செய்தாக வேண்டும். ஒன்று, இந்திய அளவில் கல்வியில் நிலவுகின்ற ஆங்கில மொழியின் பேராதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
கல்வி
  • மற்றொன்று, கல்வியில் இந்தியாவின் மாநில அரசுகள் அதனதன் தாய்மொழியில் தலையெடுத்து வளர்வதற்கானஅனைத்து உதவிகளையும் அளித்து அங்கீகரிக்க வேண்டும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories