- வேளாண்மையில் எத்தனையோ மாற்றங்களை நாம் கண்டிருந்தாலும் தற்போதைய நடைமுறையில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கௌரவ உதவித் தொகை ஒரு புது வகையான மாற்றமாய் அமையும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அத்தகைய மாற்றத்துக்கு உயிர் கொடுக்கும் தார்மீகப் பொறுப்பு அரசிடம் உள்ளது.
- இதற்கிடையில் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவிலிருந்து 5 மடங்கு அதிகமாக, குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தி வழங்கப்படும் என்னும் அரசாங்கத்தின் அறிவிப்பும் சரியானது இல்லை என்கிறார் பொருளாதார நிபுணர் சுவாமிநாதன் அங்கலேசாரிய ஐயர். இதைத்தான் போர் நடந்த சமயத்தில் அன்றைய எதிரியான சோவியத் யூனியனைவிட உணவு உற்பத்தியில் தனது விவசாயிகளை தன்னிறைவு அடையச் செய்வதற்காக உலக அளவில் இல்லாத விலை உயர்வை ஐரோப்பிய பொருளாதார சமூகம் வாரி வழங்கியது.
ஐரோப்பிய விவசாயிகள்
- இதன் விளைவு, மலையளவு வெண்ணெய், இறைச்சி உற்பத்தி மிகுதியாகவும் ஆறாக ஓடும் அளவுக்கு பால் மற்றும் ஒயின் உற்பத்தி மிகுதியாகவும் உருமாறி விற்க முடியாமல் போனது. இறுதியாக, வேறு வழியின்றி ஐரோப்பா வழிநெடுகச் சென்று எதிரி என்றும் பாராமல் சோவியத் யூனியனிடம் வந்த விலைக்கு விற்கும் நிலைக்கு ஐரோப்பிய விவசாயிகள் தள்ளப்பட்டனர். தவறை உணர்ந்த ஐரோப்பா ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது, விவசாயப் பயிர்களுக்கு மானியம் தருவதைவிட விவசாயிகளுக்கு நேரடியாகத் தரலாம் என்றும் இறுதியில் அதுவே உற்பத்தியாகும் உபரியைக் குறைத்து, விநியோகம் மற்றும் தேவையைக் கட்டுக்கோப்பாக்கி விவசாயிகளுக்கு நல்லதொரு விடியலைத் தந்தது.
- ஆகவே, தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி என்னும் சலுகையைவிட, குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட கௌரவ உதவித் தொகை நிச்சயம் கௌரவம் அளிக்கும். இதனைக் கருத்தில் கொண்டுதான் வேறு சில பரிந்துரைகளை இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு நிறைவேற்றியது. "பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப் பெயரிட்டு விவசாயிகளுக்கு நீண்ட காலம் பயன்தரும் வகையில் விவசாயி கௌரவ உதவித் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகைகளை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதே ஆகும்.
முன்னோடி மாநிலம்
- மேலும், இந்தத் திட்டத்தின் முன்னோடி தெலங்கானா மாநிலம் ஆகும். அதாவது "ரித்து பந்து' என்னும் திட்டத்தின் கீழ் 33 லட்சம் விவசாய நிலப் பட்டாதாரர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு பருவத்துக்கு ரூ.5,000 (ரூ.4,000-லிருந்து ரூ.5,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.)
ஆண்டுக்கு இரண்டு பருவத்துக்கு ரூ.10,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் வாங்குவது மற்றும் அவர்களின் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இதற்காக அந்த மாநிலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.12,000 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தில் உள்ள குறைபாடு என்பது, நிலத்தை குத்தகைக்குக் கொடுத்திருப்போருக்கு ஒவ்வொரு முறை பயிரிடும் பருவத்தின்போதும் ஏக்கருக்கு ரூ.4,000 கிடைக்குமே தவிர, குத்தகைக்கு எடுத்துப் பயிரிடுபவர்களுக்கு இதனால் பலன் கிடைக்காது.
- மேலும், இந்தத் திட்டத்தில் ஏக்கருக்கு வரைமுறை இல்லையென்பதும், பெரிய நிலச்சுவான்தாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் பொருந்தும் என்பது மிகப் பெரிய குறை.அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஒடிசா மாநிலம் "கலியா திட்டம்' எனப் பெயரிட்டு ரூ.10,000 கோடியில் ஏக்கருக்கு இரண்டு தவணை முறையில் ரூ.10,000 (அதாவது ஒவ்வொரு பருவத்துக்கும் ரூ.5,000 வீதம்) என இரு பருவங்களுக்கும் தரப்பட இருக்கிறது. பெரு விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இடம்பெற மாட்டார்கள் என்பதும் குத்தகைதாரர்களும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுபவர்களுமான 30 லட்சம் சிறிய, நடுத்தர விவசாயிகள்தான் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
- இதைத் தவிர வாழ்க்கை காப்பீடாக ரூ.2 லட்சமும்,விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சமும் அளிக்கப்படும் என்றுஅந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலமும் "கிரிஷ் கிரிஷாக் பந்து' என்னும் திட்டத்தின் கீழ் 72 லட்ச விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை ஒரு ஏக்கருக்கு தலா ரூ.2,500 வீதம் வழங்கப்படும் என்றும் அறுபது வயதுக்குள் விவசாயி மரணம் அடைந்தால்
அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
- இது போன்ற திட்டங்கள் விவசாயிகளை வெளி நபர்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்குவதைக் குறைத்து, அவர்களுக்கு தகுந்த பயிர்களைச் சாகுபடி செய்யவும், அவர்களின் சொந்தத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளப் பெரிதும் பயன்படும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
மானியம்
- இதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டு ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவாக வைத்துள்ள 12 கோடி விவசாயிகளுக்கு ரூ.6,000 நேரடி மானியமாக விவசாயின் வங்கிக் கணக்கில் மூன்று (ஒவ்வொரு தவணையிலும் ரூ.2,000 வீதம்) தவணையாகச் செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்காக ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தற்போது இதில் மேலும் இரண்டு கோடி விவசாயிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு ரூ. 87,217.50 கோடி அண்மையில் ஒதுக்கப்பட்டது. மேலும், இதுவரை முதல் தவணையில் 11 கோடி விவசாயிகளும், இரண்டாவது தவணையில் 2.66 கோடி விவசாயிகளும் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இந்தத் திட்டத்தில் அனைத்து மாநிலங்களும் இணைந்து கூடுதலாக உதவித் தொகையைப் பங்கிட்டுக் கொண்டால் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும்; அவர்களும் ஒரே வகையான பயிர்களைச் சாகுபடி செய்வதைக் கைவிட்டு, பல்வேறு வகையான பயிர்களைச் சாகுபடி செய்து அவர்களின் சொந்தத் தேவையையும் தாராளமாகப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
நன்றி: தினமணி (06-06-2019)