TNPSC Thervupettagam

உ.பி. கல்வியறிவு கவலைக்கிடம்!

May 27 , 2019 2059 days 1203 0
  • மக்களவைத் தேர்தல் பரபரப்புக்கிடையில் அண்மையில் அதிக அளவில் நமது கவனத்தைக் கவர்ந்திடாமல் கடந்து சென்றது ஒரு செய்தி. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளே அந்தச் செய்தியின் சாரம் ஆகும். இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்களுடன் ஒப்பிடுகையில், வட மாநில மக்கள், குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களின் குடிமக்கள் தடாலடிச் செயல்பாடுகளுக்குப் பெயர் போனவர்கள்.
இறுதித் தேர்வுகள்
  • பள்ளி இறுதித் தேர்வு சமயங்களில் அந்த மாநிலங்களின் மக்கள் அரங்கேற்றும் அதிரடிகள் இந்தியா முழுவதும் பிரசித்தம். தேர்வு எழுதும் மாணவர்கள் பகிரங்கமாகக் காப்பி அடிப்பது,  ஆசிரியர்களே விடையைச் சொல்லித் தருவது, மாணவர்களின் பெற்றோர் தேர்வு மையங்களுக்குள் பாடப் புத்தகங்களுடன் நடமாடுவது, அதை எதிர்க்கும் கல்வித் துறை ஊழியர்கள் மிரட்டப்படுவது எல்லாம் இந்த இரு மாநிலங்களில் மிகவும் இயல்பு. விளைவு, பாடங்களைக் கொஞ்சமும் படிக்காத மாணவர்கள்கூட எளிதில் தேர்ச்சி பெற்று விடுவர்.
  • சென்ற ஆண்டு பிகார் மாநில மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்ட ரூபி ராய் என்ற மாணவி மற்றும் செளரவ் சிரேஷ்டா என்ற மாணவன் இருவருக்கும் எல்லாத் தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.
  • ஆனால், அவ்விருவரையும் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தபோது, தாங்கள் எழுதிய பாடங்களின் பெயர்களையே அவர்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஊடகங்களில் இது குறித்துப் பரவிய பிறகு, பிகார் அரசு அமைத்த விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த மாநிலப் பள்ளிக் கல்வித் துறையில் பரவியிருந்த ஊழல் மற்றும் முறைகேடுகளால் தகுதியற்ற பலர் தேர்ச்சி பெற்றதும் அப்போது வெளிச்சத்துக்கு வந்தது.
மற்ற மாநிலங்களில்
  • உத்தரப் பிரதேச மாநிலப் பள்ளிகளும், அவற்றில் படிக்கும் மாணவர்களும் இதற்குச்  சளைத்தவர்கள் அல்லர். பள்ளி இறுதி மற்றும் மேல்நிலைத் தேர்வுகளில் காப்பி அடித்து விடை எழுதுவது அங்கு தடை இல்லாமல் நடைபெற்று வந்திருக்கிறது.  ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது அங்கு சர்வ சாதாரணம். இந்த மாநில மாணவர்களுக்குப் பதிலாக, நேபாள  நாட்டவர்கள் வந்து தேர்வு எழுதுவதும் உண்டாம்.
  • கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.) மற்றும் லக்னௌவில் செயல்படும் இந்திய மேலாண்மையியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்.) போன்று பல சிறப்புமிக்க உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு, பெருமளவில் முறைகேடுகள் நடந்த  பள்ளி இறுதித் தேர்வுகளால் ஒருவிதத் தலைக்குனிவு நேர்ந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த அவல நிலையைப் போக்க வேண்டுமென்று அந்த மாநிலப் பள்ளிக் கல்வித் துறை முனைப்புடன் செயல்பட ஆரம்பித்தது. இதன் காரணமாக,  இந்த ஆண்டு நேபாளத்திலிருந்து வந்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட ஆள் மாறாட்டங்கள் கண்டிப்புடன் தடுக்கப்பட்டன.
வசதிகள்
  • தேர்வு மையங்கள் அனைத்திலும் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டன. சென்ற ஆண்டு தேர்வுகளின்போது, கண்காணிப்புக் கேமராக்கள் இருந்தும், ஆசிரியர்களின் உதவியுடன்  பல மாணவர்கள் காப்பி அடித்துத் தேர்வு எழுதியதால், இந்த ஆண்டு தெளிவான ஒலியமைப்புடன் ("ஆடியோ') கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. கண்காணிப்புகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால், தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் சுமார் ஆறு லட்சம் பேர் தேர்வு மையங்களுக்கே வரவில்லை.
  • உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள சுமார் 8,500 மேல்நிலைப் பள்ளிகளில், 165 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை. காப்பி அடித்துத் தேர்வு எழுதுவதற்குப் பெயர்போன கெளஷாம்பி, அலீகர் போன்ற ஊர்களிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் அவற்றில் அடக்கம்.  மேலும் 388 பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 20 சதவீதத்துக்கும்  குறைவாகவே இருந்துள்ளது.
  • செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய அந்த மாநிலப் பள்ளிக் கல்வி இயக்குநர் விநய் குமார் பாண்டே,   மாணவர்களின்  தேர்ச்சி விகிதம் குறைந்தது ஒருபுறம் வருத்தம் அளித்தாலும், மறுபுறம் தேர்வுமுறைகேடுகள் பெருமளவில் தடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மற்ற நாடுகளில்
  • வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதிலும், அவர்களது அறிவுத்திறனை மதிப்பீடு செய்வதிலும் மேம்பட்ட வழிமுறைகள் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு மாணவரின் மீதும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தனிப்பட்ட கவனம், களப்பயிற்சி, விளையாட்டு மற்றும் குழுச் சுற்றுலா போன்றவற்றுக்கு அந்த நாடுகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேசமயம், மாணவர்களின் திறனை மதிப்பிட, தேர்வு மதிப்பெண்களை மட்டுமே ஒரு காரணியாகக் கொள்வதில்லை.
  • மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமுள்ள நமது நாட்டில் அனைவருக்கும் எழுத்தறிவு என்ற நிலையை எட்டுவதற்கே மிகுந்த பிரயாசை தேவைப்படுகிறது. ஏட்டுக் கல்வி மற்றும் ஆண்டு இறுதித் தேர்வு முறைக்கு மாற்றாக வேறு ஒரு முறையைக் கண்டுபிடித்து நாடு முழுவதும் செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமில்லை.
  • இந்த நிலையில், தங்களது வாரிசுகள் நேர்மையான முறையில் படித்துத் தேர்ச்சி அடைவதுதான் சிறந்தது என்பதை முதலில் பெற்றோர் புரிந்து கொள்ளவேண்டும். நேர்மையற்ற முறையில் தங்கள் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டிப் பெருமை கொள்வது சரியில்லை என்று பள்ளி நிர்வாகங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தேர்வுகளில் நேர்மையை நிலைநாட்டத் தத்தமது மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
  • எத்தனையோ அறிவுலக மேதைகளையும், நேர்மையாய் உழைத்த மக்கள் தலைவர்களையும் இந்த நாட்டுக்கு வழங்கிய உத்தரப் பிரதேசம்,  பிகார் மாநிலங்கள் பள்ளி இறுதித் தேர்வு முறைகேடுகளிலிருந்து தங்களை முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (27-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories