TNPSC Thervupettagam

உ.வே.சா.

February 15 , 2019 2144 days 3061 0
  • கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த தியாகராச செட்டியார் ஓய்வுபெறும் தருணம் அது. தான் வகித்துவந்த பணியைத் தனது ஓய்வுக்குப் பின்னர் உ.வே.சாமிநாதையர் ஏற்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் முடிவுசெய்தார். அக்கால வழக்கப்படி அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்துமுடித்திருந்தார்.
  • அப்போது திருவாவடுதுறை மடத்திலிருந்த உ.வே.சா., தியாகராச செட்டியாருடன் கிளம்பி கும்பகோணம் கல்லூரிக்குச் சென்றார். கல்லூரி முதல்வர் கோபால் ராவ் உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் அவரது திறமையைத் திறனாய்வு செய்தனர். பல திறனாய்வுகளின் முடிவில் அவருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
தமிழாசிரியர்
  • 1880 பிப்ரவரி 16-ல் கல்லூரித் தமிழாசிரியர் பணியை ஏற்ற உ.வே.சா., தொடர்ந்து 23 ஆண்டுகள் தனது பணியைத் திறம்படச் செய்து, மாணவர்களுக்குச் செறிவான தமிழறிவை ஊட்டியவர் என்பதை அவரது வரலாறு வெளிப்படுத்துகிறது. பொதுவாக அவரது ஆசிரியப் பணிக்கால அனுபவத்தை மூன்று நிலைகளாகப் பகுத்துக்கொள்ள முடியும்.
முதல் நிலை: 1876 – 1800
  • உ.வே.சா. 1871-லிருந்து திருவாவடுதுறை மடத்தில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் முறையாகத் தமிழ்ப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். 1876 ஜனவரி 1-ல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைவுற்ற பின்னர், மடத்து ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்க வேண்டிய சூழல் உருவானது. தேசிகரிடம் பாடம் கேட்டுக்கொண்டிருந்த அதேகாலத்தில் இளைய தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லித் தருபவராகவும் உ.வே.சா. விளங்கியிருக்கிறார். இப்படி மடத்தில் தம்பிரானாகவும் வித்துவானாகவும் ஐந்தாண்டு காலம் இருந்திருக்கிறார்.
  • இந்த அனுபவத்தை அவரது ஆசிரியர் பணிக்காலத்தின் முதல்நிலையாகக் கொள்ளலாம். மடத்தில் வித்துவானாக இருந்த இந்தக் காலப்பகுதியில் அந்த மடத்திலிருந்த ஆறுமுக சுவாமிகளுடன் இணைந்து ஆதீனம் பெரியகாறுபாறு வேணுவனலிங்கசுவாமிகள் இயற்றுவித்த ‘சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு’ எனும் நூலைப் பதிப்பித்து (1878) வெளியிடுகிறார். இதுவே இவர் பதிப்பாசிரியராக இருந்த முதல் நூலாகும். அந்த வகையில், 23 வயதிலேயே ஆசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் தன்னை நிலை உயர்த்திக்கொண்டவர் உ.வே.சா.
இரண்டாம் நிலை: 1880 - 1919
  • அவர் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய 23 ஆண்டுகால அனுபவங்களையும் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றிய 16 ஆண்டுகால அனுபவங்களையும் சேர்த்து மொத்தம் 39 ஆண்டுகால ஆசிரியர் பணி அனுபவங்களை இரண்டாம் நிலையாகக் கொள்ளலாம். கும்பகோணம் கல்லூரியில் பணியேற்றபோது அவருக்கு மாதச் சம்பளம் ரூ.
  • கும்பகோணம் கல்லூரியிலிருந்து மாற்றலாகி 1903 நவம்பரில் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஏற்றார் உ.வே.சா. அப்போது மாநிலக் கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜே.பி.பில்டர்பெக் எனும் ஆங்கிலேயர். 1919 மார்ச் 31 வரை 16 ஆண்டுகள் மாநிலக் கல்லூரியில் பணியாற்றியிருக்கிறார் உ.வே.சா. கும்பகோணம், சென்னை என்று இரண்டு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
  • தியாகராச செட்டியாருடன் இணைந்து மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய ‘திருக்குடந்தைப் புராண’த்தைப் பதிப்பித்து 1883-ல் வெளியிட்டிருக்கிறார். உ.வே.சா. பதிப்பாசிரியராக விளங்கிய இரண்டாவது நூல் இது. இதே காலப்பகுதியில் ‘ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம்’ (1885) எனும் தலவரலாறு பற்றிய நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் ‘சீவகசிந்தாமணி’ (1887), ‘பத்துப்பாட்டு’ (1889) உள்ளிட்ட 30 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். மேலும், மாணவர்களின் தேர்வுநோக்கைக் கருத்தில்கொண்டு 14-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். மறுபதிப்பு நூல்களும் உண்டு. ‘யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைநகர் ஸ்ரீதண்டபாணி வித்தம் - ஸ்ரீமுத்துக்குமாரசாமி ஊசல்’ எனும் சிற்றிலக்கிய நூலொன்றையும் (1891) இக்காலப்பகுதியில் இயற்றி வெளியிட்டிருந்தார். மாணவர்கள் போற்றும் நல்லாசிரியராக விளங்கிய உ.வே.சா., பழந்தமிழ் நூல்களைப் பாதுகாக்கும் பதிப்பாசிரியர் என்று போற்றப்படும் நிலையை எட்டியது இந்தக் காலகட்டத்தில்தான்!
மூன்றாம் நிலை: 1924 – 1927
  • 1924-ல் சிதம்பரத்தில் மீனாட்சி தமிழ்க் கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, மீனாட்சி கலைக் கல்லூரி எனும் மூன்று கல்லூரிகளைத் தொடங்கினார் ராஜா அண்ணாமலை செட்டியார். தமிழ்க் கல்லூரிக்குத் தகுந்த ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டுமென்று அவர் எண்ணியபோது, அவரது நினவுக்குவந்தது உ.வே.சாவின் பெயர்தான். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் உடனே தொடங்கினார். 1924 ஜூலையில் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்று மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை உ.வே.சா. ஏற்றார்.
  • அவர் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில் சேது சமஸ்தான வித்துவானாக இருந்த ரா. ராகவையங்கார் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் கல்லூரிக்கு வந்து சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கின்றனர். அதன் பின்னர் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, தான் வகித்துவந்த கல்லூரி முதல்வர் பணிவாய்ப்பை விட்டுவிட்டு, 1927-ல் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார் உ.வே.சா.
  • 1924 முதல் 1927 வரை கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய மூன்றாண்டுகளை அவரது ஆசிரியர் பணி அனுபவத்தின் மூன்றாம் நிலையாகக் கொள்ளலாம். இந்தக் காலப்பகுதியில் ‘நன்னூல் சங்கரநமசிவாயர் உரைப் பதிப்பு’ (1925) உள்ளிட்ட ஒருசில நூல்களையே உ.வே.சா. பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இதற்குப் பிந்தைய காலத்தில்தான் பல நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
  • 1876-ல் திருவாவடுதுறை மடத்தில் இளைய தம்பிரான்களுக்கு வித்துவானாகப் பணியாற்றத் தொடங்கியது முதல் 1927-ல் கல்லூரி முதல்வராக இருந்தது வரையிலான 51 ஆண்டுகள் எனும் பெரும் காலப்பரப்பில் தமிழ் மாணவர்களோடு நேரடியாகத் தொடர்பில் இருந்திருக்கிறார். தமிழ் மட்டுமே படித்த, அறிந்த ஒருவருக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கப்பெற்றது உழைப்பின்வழி மட்டுமேயாகும் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
  • உ.வே.சா. என்றால், உடனே ‘தமிழ்த் தாத்தா’ எனும் சிறப்புப் பெயரும், அலைந்து திரிந்து சேகரித்து அவர் பதிப்பித்த பழந்தமிழ் இலக்கியங்களும் முதலில் நினைவுக்கு வரும். தமிழின் முன்னோடிப் பதிப்பாசிரியரான உ.வே.சா. அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கல்விப் புலத்தோடு தம் வாழ்க்கையைக் கழித்திருக்கிறார் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories