அன்னைத் தமிழுக்கு அணிகலனாகிய ஐம்பெரும் காப்பியங்களில் இரட்டைக் காப்பியங்கள் என்ற சிறப்பை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பெறுகின்றன. இதற்கு கதைக் கருவின் உறவு மட்டும் காரணமல்ல, இரண்டுமே உயர்ந்த அறங்களை உரத்து முழங்கும் உன்னதம் கொண்டவை.
செய்யாத தவறுக்காக சிதைபட்ட கோவலனால் மனவதைபட்ட கண்ணகி, சீற்றமிகு தோற்றமுடன் அநீதி இழைத்த அரசனின் அவையில், ஆவேசமாக நீதி கேட்டாள்.
நெடுஞ்செழியன்
"மன்பதைக் காக்கும் தென்புலங் காவல் என்முதல் பிழைத்தது கெடுகஎன்ஆயுள்' என்று கூறி, தான் கூறிய தவறான தீர்ப்புக்காக தனது உயிரையே விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன்.
"கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதொன்று இல்' என்று அரசனின் மனைவி கோப்பெருந்தேவியும் ஆருயிர் துறந்தாள்; தவறாக தீர்ப்புரைத்த மன்னனின் தலைநகரம் மதுரையும் இதனால் எரிந்தது என்கிறது சிலப்பதிகாரம்.
தவறான தீர்ப்பால் ஓர் அப்பாவியைத் தண்டிப்பது எவ்வளவு பெரிய கொடுங் குற்றம் என்பதைச் சிலப்பதிகாரம் அறத்தின் சிகரத்தில் நின்று இந்த அவனிக்கு உரைக்கிறது.
ஆயிரக்கணக்கான அப்பாவிகள் சிறைகளில் சீரழிய, அவர்களின் குடும்பங்கள் நிராதரவாய் நிலைகுலைந்து சிதைய, அதுகுறித்த எந்தவோர் அக்கறையும் இல்லாத, அறிந்திட ஆர்வமும் கொள்ளாத, அரசாங்கம், நீதிமன்றம், ஊடகம், மக்கள் இவர்களுக்கு இதயம் இருக்கிறதா, அதிலே ஈரம் சிறிதேனும் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டியுள்ளது.
மணிமேகலை
சிறைக் கோட்டங்கள் அறக் கோட்டங்களாக மணிமேகலை என்ற மாதரசியால் மாற்றப்பட்ட அறப்புரட்சியை "மணிமேகலை' என்ற மகத்தான காப்பியம் ஆணித்தரமாய் எடுத்துரைக்கிறது.
ஒரு தேசத்தின் நாகரிகத்தை அதன் சிறைச்சாலைகளிலிருந்துதான் அளக்க வேண்டும் என்றொரு ஆங்கிலச் சொலவடை உண்டு. நமது சிறைகள் சீர்திருத்தும் கூடங்களாக உள்ளனவா அல்லது சிறு குற்றவாளிகளை மேன்மேலும் சீரழித்து, கொடுங்குற்றவாளிகளாக்கி சமூகத்திற்குக் கொடையளிக்கும்(?) கொடுமையின் கோட்டங்களாக உள்ளனவா என்பதை விளக்க வேண்டியதில்லை.
செய்யாத குற்றத்துக்காக சிக்க வைக்கப்பட்டு சிறைகளிலே சிதைக்கப்படும் அப்பாவிகளைப் பற்றியும், சிறைச்சாலைகளை குற்றக் கலாசாலைகளாக மாற்றுகின்ற பாவிகளைப் பற்றியும், சமூக அக்கறையே கொள்ளாமல் அலட்சியமாய் இருப்பது, அது ஆரோக்கியமாய் இருப்பதற்கு அடையாளமாகாது.
உதாரணம்
பேரறிவாளன் என்று பெயரிடப்பட்டு பேரபாயமான வழக்கு காரணமாக சிறு வயதிலேயே சிறையில் சிக்கி, பொன்னான இளமையை இழந்து, சிறையில் மகனும், வெளியில் தாய் அற்புதம்மாளும், அவர் குடும்பத்தினரும், அடைகின்ற வேதனையை சொற்களால் உணர்த்திவிட முடியாது.
நாங்கள்தான் பயங்கரவாதச்செயல்களைச் செய்தோம் என்று உலகறிய ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்களே அதிகாரத் தலையீடுகளால் விடுதலையாகி விடுகிறார்களே? சமமாக நடத்தவேண்டிய சட்டம் ஒரு ஜடமாக ஆக்கப்பட்டிருப்பது ஜனநாயக நாட்டில் சரியான செயலா?
பேரறிவாளனின் வாக்குமூலத்தை நாங்கள் திரித்தும், மாற்றியும் எழுதினோம் என்று விசாரணை அதிகாரியான தியாகராஜன் தனது பணி ஓய்வுக்குப் பிறகு பகிரங்கமாக அறிவித்தார். அதன் பிறகாவது நீதி கிடைத்ததா?
தமிழக சட்டப்பேரவை ஏழு பேர் விடுதலைக்குத் தீர்மானமே இயற்றியது.
அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரும் மன்னிப்பதாக அறிவித்தனர். உச்சநீதிமன்றமே தமிழக அரசின் பரிந்துரை பெற்று இவர்களை விடுதலை செய்யலாம் என அறிவித்தது. ஆளுநர் மாளிகையில் கோப்புகளின் நிலை என்ன? மத்திய அரசுக்கு மனம் வரவில்லையா? விடுதலைக் காலம் விழிகளை எட்டவில்லையே ஏன்?
கூட்டு மனசாட்சியின் பெயரால் குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் தூக்கில் போடுகிற நீதி (?) தேசத்தில், அப்பாவிகளின் விடுதலைக்கு மட்டும் ஏராளமான தடைகள் ஏன்?
பயங்கரவாதத்தோடு நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது.
அப்பாவி மனித உயிர்களை அநியாயமாகப் பறிக்கும் பாவிகள், அச்செயலை இனியொருவர் செய்யத் துணியாத அளவுக்குக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், நம்நாட்டில் நிலவும் சில நடைமுறைகள், பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதாகவும், அப்பாவிகளை அச்சத்தில் உறைய வைப்பதாகவும் உள்ளன.
அண்மையில் "ஸ்கேப் கோட்ஸ்' என்ற ஆங்கில நூலைப் படிக்க நேர்ந்தது. பலியாடுகள் என்ற பொருள்கொண்ட 492 பக்கங்கள் கொண்டது அந்த நூல். அதை சந்தர்ப்பச் சூழலால் சட்ட வலைக்குள் சதிகார அதிகாரத்தால் சிக்க வைக்கப்பட்டு, சிதைந்து போன நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் கதைகள் அடங்கியது எனலாம்.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் பழங்குடி இன மக்களின் மீது மட்டுமே அதிகாரத்தின் அத்துமீறல்கள் அதீதமாய் அரங்கேறியிருப்பதை பல்வேறு ஆவணங்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் அறிக்கையும் உறுதிப்படுத்துகின்றன.
வழக்குகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனப் பொருளாளராக இருந்த குணங்குடி ஆர்.எம். அனீபா ஒரு வழக்கில் 13 ஆண்டுகள் சிறையிலிருந்து பிறகு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். பொதுவாழ்வில் இருந்த ஒருவர், இழந்த 13 ஆண்டுகளுக்கு நமது சட்டமும், நீதியும் எந்தவொரு இழப்பீடும் தரவில்லை.
அண்மையில் ஒரு வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் வாடி, பிறகு விடுவிக்கப்பட்ட பழங்குடி இன இளைஞர்களுக்கு உச்சநீதிமன்றம் பல லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டது ஓர் ஆறுதலான தொடக்கம்.
அமெரிக்காவில் பதினேழு வயதில் 1988-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2007-ஆம் ஆண்டு தனது 36-ஆம் வயதில் விடுவிக்கப்பட்ட மார்ட்டி டேன்லெஃப் என்பவர், அநீதியாகத் தண்டிக்கப்பட்ட தனக்கு நீதியும், நிவாரணமும் வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அவரது வாதத்தை ஏற்று 4 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்யாத குற்றத்துக்காக நீண்ட நெடுங்காலத்தைச் சிறையில் கழித்துவிட்டு அப்பாவி என நீதிமன்றம் விடுவித்தாலும், "சிறைக்குப் போன பயங்கரவாதி' என்ற அடைமொழியோடுதான் பொது சமூகத்தை பாதிக்கப்பட்டவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அத்தகையவர்கள் இழந்த வாழ்வை எந்த ஓர் இழப்பீட்டாலும் ஈடுசெய்துவிட முடியாது. ஆனால், அன்றாட வாழ்வை நடத்துவதற்கான குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதமாவது தரப்பட வேண்டுமல்லவா?
சட்ட விரோத கைதுகளும், கேள்விக் கணக்கில்லாத போலி மோதல் கொலைகளும், சாட்சிய ஜோடனைகளும், பல்கிப் பெருகிவரும் பயங்கரமான சூழலில், நிராதரவாய் நிற்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை யார் சிந்திப்பது? அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இந்தப் பிரச்னை முக்கியத்துவம் பெறுவதில்லை.
கனம் கோர்ட்டார்களும்(!) இந்த ரணங்கள் குறித்து அறிந்துள்ளார்களா எனத் தெரியவில்லை. ஊடகங்களிலும் இந்த ஊமைகளின் வேதனைகள் விவாதமாவதில்லை.
சிறைத்துறையில் உயரதிகாரியாக ஆர். நட்ராஜ் இருந்தபோது செய்த குறிப்பிடத்தக்க பணிகள் பாராட்டைப் பெற்றன. "உள்ளொளி' என்று சிறைவாழுநர்களே நடத்துகிற ஓர் இதழும் அவரது நெறியாள்கையில் நடந்தது. பொழிலன் எழுதிய "சிறைக்குள் நுழைவோம்' என்ற நூல் சிறை வாழ்வைப் பற்றிய பார்வையையும், சிறைகளின் நிலையையும் அவை பெற வேண்டிய சீர்திருத்தங்களையும் எடுத்துரைக்கிறது.
சிறைத்துறை மிகப் பெரிய சீர்திருத்தத்தைப் பெற்றாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நன்னடத்தை
விடுதலைநாள், அண்ணா பிறந்த நாள் உள்ளிட்ட சிறப்பு நாள்களில் நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகளை விடுவிப்பதில் மிகப் பெரிய பாரபட்சம் நடந்து வந்துள்ளது. முஸ்லிம் சிறைவாசிகள் வேண்டுமென்றே புறந்தள்ளப்பட்டிருப்பது புள்ளி விவரங்களோடு ஆவணமாகியுள்ளது.
சட்டம் அனுமதித்துள்ள உரிமைகள்கூட ஒருசாராருக்கு மறுக்கப்படுவது, நீதிமிக்க சமுதாயத்துக்குப் பெருமை தராது. நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஓர் அப்பாவிகூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நீதித்துறையின் நேரிய விழுமியம்.
குற்றவாளிகளுக்கு பாதுகாப்புணர்வையும், அப்பாவிகளுக்கு அச்சுறுத்தலுணர்வையும் தருவதா சரியான நீதிமுறை?
அநியாயமாகச் சிறைப்பட்டு ஆண்டுக்கணக்கில் அல்லற்படும் அப்பாவிகளின் வேதனைகளை எழுதினால், கடல்நீரை மையாக்கி, காட்டு மூங்கிலை எல்லாம் காகிதமாக்க வேண்டும்.
ஒரே ஒரு கண்ணகி உதிர்த்த கண்ணீரில் மதுரை எரிந்தது.
"அல்லற்பட்டு ஆற்றாதழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை'
(அல்லற்படும் மக்களின் கண்ணீர் வல்லரசையும் அழித்துவிடும்) என்கிறார் திருவள்ளுவர்.
அநீதியாகச் சிறைப்பட்ட அப்பாவிகளின் கண்ணீரும், அவர்தம் குடும்பத்தினரின் கண்ணீரும் அதிகார வர்க்கத்தால் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வருவது அறநெறிகளுக்கு நேர்ந்த அவமானமன்றி வேறல்ல.
மணியடித்த பசுவுக்கும் நீதி வழங்கியதாகக் கூறப்படும் மனுநீதிச் சோழனுக்கு நமது உயர்நீதிமன்றத்தில் ஒரு சிலை நிற்கிறது. ஆனால், நீதியே ஒரு சிலையாகி நிற்கலாமா?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியல்லவா? ஊமை நெஞ்சங்களின் ஒப்பாரி ஓசைகள் நீதியின் காதில் விழும் நேரம்தான் எப்போது?