TNPSC Thervupettagam
February 22 , 2019 2137 days 1680 0
  • முந்தைய காலங்களில், நமது நாட்டின் உயர் பதவியான ஐ.சி.எஸ். உலகெங்கிலும் பாராட்டப்பட்டது.  சுமார் 1,000 ஐ.சி.எஸ். அதிகாரிகள், 30 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டை சீரும் சிறப்புடன் நேர்மையான வகையில் நிர்வாகம் செய்தனர் என இந்தியாவை விடவும் முன்னேற்றம் அடைந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாராட்டினார்கள்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்
  • நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய பிரபலங்களில் ஒருவரான ஜவாஹர்லால் நேரு, ஐ.சி.எஸ். அதிகாரிகளின் மீது மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். இந்தியன் சிவில் சர்வீஸ் எனப்படும் ஐ.சி.எஸ். அதிகாரிகள்,  இந்தியனும் அல்ல, சிவிலும் அல்ல, சர்வீசும் அல்ல எனக் கூறினார்.
  • அதை ஒத்துக்கொள்ளாத வல்லபபாய் படேல், ஆங்கிலேயர்களின் இந்திய அரசு மிகவும் நேர்மையுடன் செயல்பட்டதற்கான அடிப்படைக் காரணம், ஐ.சி.எஸ். அதிகாரிகளே எனவும், நாம் சுதந்திரம் அடைந்த பின்னரும் அது போன்ற அதிகாரிகள் பணியில் தொடர வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.  சுதந்திர இந்தியாவில் அதிகாரிகளின் பெயரை வேண்டுமென்றால் , ஐ.சி.எஸ். என்பதிலிருந்து ஐ.ஏ.எஸ். என மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறி அதில் வெற்றி பெற்றார்.
இராஜாஜி – அண்ணாதுரை
  • தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி தோல்வி அடைந்து தி.மு.க. வெற்றி பெற்றபோது, அதன் தலைவர் அண்ணாதுரை, ராஜாஜியைச் சந்தித்து வாழ்த்து பெறச் சென்றார்.  அது சமயம் சோர்ந்த நிலையிலிருந்த அவரை என்ன காரணம் என ராஜாஜி வினவினாராம்.  அதற்கு, ஐயா, நாங்கள் எதிர்க்கட்சியாக இயங்கி பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்;  அதுசமயம், பல இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரிகளையும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகளையும் எதிர்த்துத்தான் எங்கள் போராட்டங்கள் இருந்தன; தற்சமயம் நாங்கள் ஆட்சியில் அமர்ந்து அதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் இணைந்து நிர்வாகத்தை நடத்திச் செல்வது எப்படி என்ற தயக்கம் எனக்கு உள்ளது எனக் கூறியுள்ளார்.
  • அதற்குப் பதிலளித்த ராஜாஜி, நீங்கள் அரசின் உயர் அதிகாரிகளான ஐ.ஏ.எஸ்.கள் குறித்துச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்;  அரசு அதிகாரம் யார் கையில் உள்ளதோ, அவர்கள் கூறுவதையும் அரசின் சட்டவிதிகளையும் பின்பற்றி வேலை செய்பவர்கள்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்;
  • எனவே, நீங்கள் பதவிக்கு வந்தால் உங்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடுவார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் அவர்களுக்கு முக்கியம்  எனக் கூறியுள்ளார். சட்டவிதிமுறைகளை மீறிச் செயல்படும்படி பணித்தால், உயர் அதிகாரிகள் மறுத்து விடுவார்கள் என்ற நடைமுறை நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது.  ஆனால், பிற்காலங்களில் நடைமுறை மாறியது.
உதாரணங்கள்  
  • சில உதாரணங்களை எடுத்துக் கூறி, இதைப் புரிய வைக்க முடியும். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி விடுதிகளில் வார்டன்கள் பணிக்கான நேர்காணல் நடந்தது.
  • அது சமயம், அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும்படி துறையின் தலைவருக்கு வற்புறுத்தினர்.  முடியாது; யார் பணிக்குத் தகுதியானவர்கள் என்பதைக் கணித்து அவர்களைத்தான்  தேர்ந்தெடுப்போம் என அவர் மறுத்து விட்டார்.
  • அரசியல்வாதிகள் அன்றைய அமைச்சரை அணுகியபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரியான துறைத் தலைவரிடம் தான் ஒன்றும் கூற முடியாது என அவர் கூறிவிட்டார். இது, 1975-ஆம் ஆண்டில் நடந்தது.
  • ஆனால், இன்றைய நிலைமையே வேறு. அமைச்சருக்கும், தலைமைச் செயலகத்திற்கும் கட்டுப்படாத அரசின் நிர்வாக நடவடிக்கைகளில்கூட, அமைச்சரின் அலுவலகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு வந்தபின்தான் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
  • எழிலகம் என்று அழைக்கப்படும் வருவாய்த் துறை உயரதிகாரிகளின் அலுவலகத்தில், நிலம் தொடர்பான ஒரு உத்தரவுக்காகச் சென்ற ஒரு விண்ணப்பதாரரிடம் அந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அவரது உதவியாளர் ஒருவர் வாய்மொழியாக உத்தரவிட்டால்தான் கோப்பு நகரும்; தங்களுக்கு உத்தரவு கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இந்த நிலைமை, எல்லா மாநிலங்களிலும் உருவாகி மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் நிர்வாகம் முறையாக நடைபெறாமல் போய்விட்டது. புதிய கட்சி ஒன்று பதவி ஏற்கும்போதெல்லாம், பெருவாரியான ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி மாற்றம் செய்யப்படுவது சகஜமாகிப் போனது. அரசுப் பதவிக்கு வருவதற்கு ஆசைப் படும் இளம் பட்டதாரிகள், துணை ஆட்சியர் மற்றும் ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வுகளை எழுதி வெற்றி அடையப் பாடுபடுவது நடைமுறை. இது போன்று ஆசைப்பட்டு தேர்வு எழுதுபவர்களின் உள்ளத்தின் பின்னணியில் பொதுமக்களுக்கும், நாட்டுக்கும், மாநிலத்துக்கும் சேவை செய்யும் மனப்பான்மை இருக்க வேண்டும். ஆனால், அது பலரிடம் காணப்படுவது இல்லை எனக் கூறுகிறார் தேவேந்திரகுமார் எனும் சிந்தனையாளர்.
மேலும் ஒரு உதாரணம்
  • அவருக்குத் தெரிந்த ஒரு இளைஞர், மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, வேலைவாய்ப்புத் துறை அதிகாரியாகப் பதவி பெற்றாராம்.  அந்தப் பதவியில் இருந்த இளைஞரிடம், உங்கள் பதவியில் நீங்கள் எப்படிப் பணி செய்கிறீர்கள் எனக் கேட்டாராம் தேவேந்திரகுமார்.
  • அதற்குப் பதிலளித்த அந்த இளம் அதிகாரி,  தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும், அடுத்த தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்  கொண்டிருப்பதாகவும், துணை ஆட்சியர் அல்லது காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கு வருவதே தனது லட்சியம் எனக் கூறினாராம். இவரைப் போன்றவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டால் அவ்வளவு தரமான அதிகாரிகளாக உருப்பெறுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்  தேவேந்திரகுமார்.
  • நல்ல அதிகாரிகளாக உருப்பெற்று தனக்கு வழங்கப்பட்ட பணியைக் கண்டிப்புடன் சட்ட விதிமுறைகளை மீறாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசியல் தலைவர்கள் விரும்பாமல் போனாலும், அவர்கள் கண்டிப்புடன் செயல்படுவதால் பயன் பெறும் மக்கள் போற்றுவார்கள்.  அத்தகைய அதிகாரிகளின் அலுவலகத்தில், அவரின் கீழ் பணிபுரிபவர்கள் பயம் கலந்த மரியாதையுடன் செயல்படுவார்கள்.  இந்தச் செய்தி பரவலாகி மக்கள் மன்றத்தில் பரவி, இதுபோன்ற அதிகாரிகளுக்கு நற்பெயரும் பாராட்டுதல்களும் உருவாகும்.  இதனால்  கிடைக்கும் ஆத்ம திருப்தியே உண்மையான, தரமான மகிழ்வை நேர்மையான அதிகாரிகளுக்கு அளிக்கும்.
  • அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் பெருகி, அவற்றை இழுத்து மூட முடியாத வகையில் தொழிலாளர்களின் இயக்கங்கள் போராடி நஷ்டத்தை ஈடுகட்ட மக்களின் வரிப் பணம் செலவு செய்யப்படுகிறது.  வாக்கு வங்கி அரசியலுக்காக அவை தொடர்ந்து செயல்படுகின்றன. நஷ்டத்தில் இயங்குபவற்றை இழுத்து மூடி, அதனால் கிடைக்கும் நன்மையான பண மீட்சியை உபயோகித்து நிறைய பொதுநலத் திட்டங்களை  உருவாக்க முடியும்.  ஆனால், இதை எந்தக் கட்சியும் செய்யத் தயாராக இல்லை; காரணம், இதில் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் வாக்கு எண்ணிக்கையும் மிக அதிகம்!
ஊழல் அதிகாரிகள்
  • ஊழல் அரசியல்வாதிகளையும்விட, அதிக அளவில் ஊழல் அதிகாரிகள் பணம் சேர்க்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வை நாம் நினைவு கொள்ளலாம்.  ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பணம் சேர்ப்பது, கார்-பங்களா போன்றவற்றை வாங்கி தன் வாரிசுகளுக்கு இட்டுச்செல்ல எனப் பலர் நினைக்கலாம்.  ஆனால், உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலராக இரண்டு முறை தொடர்ந்து பணி செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, மும்பை, புது தில்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் மொத்தம் 74 பங்களாக்களை வாங்கிக் குவித்தது அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.  நம் நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்கூட இத்தனை பங்களாக்களை வாங்கிக் குவித்தது இல்லை.  இந்தப் பங்களாக்களை அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் குடும்பம் உபயோகிக்கக்கூட முடியாது. எனினும், அவற்றை அவர் வாங்கியுள்ளார்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories