பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் என்றால், அது இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒடிஷா, பிஹார், ஜார்க்கண்ட், வங்கம் ஆகியவைதான். பிஹாரும் வங்கமும் கங்கைச் சமவெளி. ஜார்க்கண்ட், சோட்டா நாகபுரி பீடபூமி. தக்காணப் பீடபூமியில் உள்ள ஒடிஷா, கிழக்கு மலைத் தொடர்ச்சி மலையைக் கொண்டது. நாட்டின் கிழக்கை நந்த, மௌரிய, சுங்க, குப்த மன்னர்கள் ஆண்டுள்ளனர்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இப்பகுதிகள் 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது ஒடிஷாவும் பிஹாரும் தனி மாநிலங்களாயின.
இந்த மாநிலங்கள் தவிர, அந்தமான்-நிகோபார் ஒன்றிய பிரதேசமும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கில் வங்கம்தான் பெரியது, அடுத்தது பிஹார், ஒடிஷா, ஜார்க்கண்ட்.
அந்தமான்-நிகோபார் வங்காள விரிகுடா கடலில் உள்ள தீவுக்கூட்டம். கிழக்கு மாநிலங்களின் மொத்த பரப்பளவு 4,18,323 ச.கி.மீ. மக்கள்தொகை 69 கோடி. நாட்டின் மக்கள்தொகையில் 22.3%. மொத்த மக்களவைத் தொகுதிகள் 113 (வங்கம் 41, பிஹார் 38, ஒடிஷா 19, ஜார்க்கண்ட் 14, அந்தமான்-நிகோபார் 1). நாட்டின் மொத்தத் தொகுதிகளில் இது 21.1%.
கிழக்கு ஒரு அறிமுகம்
வங்கத்தில் வங்காள மொழி; பிஹாரில் இந்தி, உருது, மைதிலி, மகாஹி, போஜ்புரி; ஜார்க்கண்டில் இந்தி, சந்தாலி, கோர்த்தா; ஒடிஷாவில் ஒடியா பேசப்படுகின்றன. இவை தவிர, இம்மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகளும் உள்ளன. கிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் பெரும்பான்மையவர். முஸ்லிம்கள், கிறிஸ்தவர், பவுத்தர்கள், சீக்கியர்கள் சிறுபான்மையவர். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் 27%, பிஹாரில் 17%. ஒடிஷாவில் இந்துக்கள் 94%.
கிழக்கு எதிர்கொள்ளும் சவால்கள்
சமீப காலம் வரையில், கிழக்கு இந்திய மாநிலங்கள் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தன. இப்போதுதான் வளர்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கின்றன. வேகமாக வளர்ந்துவரும் மாநிலமாக ஒடிஷா அடையாளம் காணப்பட்டுள்ளது என்றாலும் சாலை வசதிகள், மின்சார உற்பத்தி ஆகியவை போதுமான அளவில் இல்லாதது பெரும் பின்னடைவு. காங்கிரஸ், பாஜக இரண்டும் இங்கே எதிர்வரிசையில் இருப்பதால், மத்திய அரசிடமிருந்து நிதி, திட்டங்களைக் கொண்டுவரப் போராடுகிறார் முதல்வர் பட்நாயக். வங்கத்திலும் இதே நிலைதான். பிஹாரில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து நிலைமையச் சமாளிக்கிறார் நிதிஷ்; மலைகளும் வனங்களும் பழங்குடிகளும் நிரம்பிய ஜார்கண்ட் பாஜக கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்தாலும் கீழிருந்து மேலே எழத் தடுமாறுகிறது. எல்லா மாநிலங்களிலுமே வேலைவாய்ப்பின்மைதான் பெரும் சவால்.
இதுவரையில், உள்ளூரில் வேலையில்லாவிட்டால் வெளிமாநிலங்களுக்குச் செல்வதுதான் ஒரே வழி என்று இருந்த கிழக்கு மாநிலங்களின் மக்கள் தத்தமது மாநில அரசுகளைக் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறது. அதை நிறுத்தும்போது, வேறு வேலை தாருங்கள் என்று கேட்கின்றனர். தென் மாநிலங்களில் வளர்ச்சி சாத்தியமாகும்போது நாம் ஏன் பின்தங்கியிருக்கிறோம் என்ற கேள்வி இளைய சமுதாயங்களிடமிருந்து எழுந்ததை அடுத்து கிழக்கு மாநில அரசுகளும் தங்களுடைய சோம்பலை உதறிவிட்டுத் தொழில் வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளன.
இந்த நான்கு மாநிலங்களிலுமே கனிம வளங்கள் அதிகம். அவற்றை வெட்டியெடுக்கும் உரிமங்களைத் தனியார் பெருநிறுவனங்களுக்கு அளிப்பதும் வனப்பகுதியில் வசிப்பர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவோயிஸ்ட் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தண்டகாரண்யப் பகுதியில் ஒடிஷாவும் உள்ளடக்கம். தற்போது, மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் அவ்வப்போது அவர்கள் தாக்குதல்களில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்கின்றன. பழங்குடிகளும் வனப்பகுதிகளில் வசிப்பவர்களும் வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தித் தங்களது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைளை வைத்துவருகிறார்கள். வன உரிமைக் கோரிக்கைகள் தேர்தலிலும் தாக்கம் ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.