TNPSC Thervupettagam

எம்.பக்தவத்சலம்: கோயில் வருமானத்துக்கு திட்டம் வகுத்த முதல்வர்!

February 14 , 2019 2149 days 1895 0
  • கோயில்களுக்கு நிலச் சொத்து ஒத்துவராது என்றவர் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம். கோயில் நிலங்களுக்கு 1976-ல் அவர் தந்த திட்டத்தை விவரிப்பது அவர் நினைவைப் போற்றும் பொருத்தமான வழி. அன்றைய உத்தேச மதிப்பில் தமிழகக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் இருந்த நிலம் ஆறு லட்சம் ஏக்கர். இதனைப் பிரித்துக் கொடுத்தால் ஏறத்தாழ மூன்று லட்சம் நிலமில்லாத குடும்பங்கள் பயனடையும் என்றார் பக்தவத்சலம்.
  • சராசரி சிந்தனையில் இது கோயில்களுக்கு எதிரான திட்டமாகத் தோன்றும். “அவரா இப்படிச் சொன்னார்?” என்றுகூட கேட்பார்கள். அவரல்லாமல் வேறு யார் சொல்வது? அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது, அன்றைய அறநிலையத் துறை ஆணையர் உத்தண்டராம பிள்ளையும் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் என்றென்றும் நிலைத்திருப்பவை. தேவாரப் பாடல்களுக்குப் பண் வகுத்திருப்பதுபோல் திவ்ய பிரபந்தங்களுக்கு இல்லை. இந்தக் குறைக்கு வருந்திய பக்தவத்சலம் அதைப் போக்கிக்கொள்ள திட்டமிட்டார். அரியக்குடி இராமானுஜ ஐயங்காரும் அந்தத் திட்டத்தின் பணியைச் செய்வதற்கு இசைந்தார். அதற்கான அலுவலகத்தை மதுரை அழகர்கோயிலில் அமைத்துக்கொள்வதாகவும் இருந்தது “அது நடக்க வேண்டும் என்று இருக்கவில்லை” என்று ஆழமான சொற்களில் பக்தவத்சலம் வருந்துவார்.
கோயில்களுக்கு எதிரானதா?
  • கோயில் நிலங்களைப் பற்றிய அவர் திட்டத்தை விமர்சித்து அக்டோபர் 1976-ல் ‘தினமணி’ நாளேடு ஒரு தலையங்கம் எழுதியது. சென்னையில் நடந்த இந்து ஆலயப் பாதுகாப்பு கமிட்டியின் சிறப்பு மாநாடு ஒன்று பக்தவத்சலத்தின் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. தன் திட்டத்தை விளக்குவதற்குத் தோதாக மயிலாப்பூர் அகாடமி அவருக்கு ஒரு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. “ என் முதல் கவலை வருமானம் இல்லாமல் கோயில்கள் நலிந்துவிடக் கூடாது என்பதுதான்” என்று தன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார் பக்தவத்சலம்.
  • நிலச் சொத்திலிருந்து கோயில்களுக்கு நியாயமாக வர வேண்டிய வருமானம் அப்போதும், இப்போதும்கூட வருவதில்லை. சில கோயில்கள் ஒருவேளை பூஜைக்குக்கூட வழியில்லாமலிருந்தன. கோயில் அலுவலர்களின் சொற்ப ஊதியத்தையும் தடைபடாமல் வழங்க இயலாத நிலை. இன்றைக்கும் திருவாரூர் தியாகேசர் கோயிலில் நாகசுரம் வாசிப்பவருக்கு மாத ஊதியம் ரூ.8,100 தான். அதையும் அவர் தன் குழுவில் உள்ள மேளக்காரர், தாளக்காரரோடு பகிர்ந்துகொள்கிறார்.
கோயில்களுக்கு மானியம்
  • கோயில், மடாலயங்களின் நிலத்தை தலா இரண்டு ஏக்கர் வீதம் நிலமில்லாதவர்களுக்குச் சொந்தமாக்கலாம். சந்தை நிலவரத்தையொட்டி அல்லாமல் ஒரு நியாயமான கிரயத்தை நிர்ணயித்து அதை 10 அல்லது 12 தவணைகளில் அவர்களிடமிருந்து அரசாங்கம் பெற்றுக்கொள்ளலாம். எடுத்துக்கொண்ட நிலத்துக்கு ஈடாக அரசாங்கம் கோயில்களுக்கு ஆண்டு மானியம் வழங்க வேண்டும். மானியம் வழங்குவதைச் சட்டத்தின் மூலம் உறுதிசெய்யலாம். மானியத்தைக் கோயில்கள் நல்ல வருமானம் பெற்ற மூன்று ஆண்டுகளின் சராசரி அடிப்படையில் நிர்ணயிக்கலாம்.
  • இந்தத் திட்டத்தால் நிலம் இல்லாத குடும்பங்கள் நிலம் பெறும். கோயில்களின் வருமானத்துக்கும் வழி பிறக்கும். ஏற்கெனவே கோயில் நிலத்தின் சாகுபடி உரிமை உள்ளவர் முழு உடைமையாளராவார். “கோயில்களும் மடங்களும் சமுதாய நலனுக்கான நிறுவனங்கள். சமூக நலன்தான் அவற்றின் நோக்கம். இல்லாதவர்கள் தனக்கும் கொஞ்சம் நிலம் வேண்டும் என்று நினைப்பது இயற்கைதானே!” என்று ஒரு பொது நியாயத்தையும் காட்டி பக்தவத்சலம் அன்றைய விளக்க உரையை முடித்தார்.
வெறும் கருத்தல்ல
  • திட்டத்தைத் தன் கருத்தாகச் சொல்லி பக்தவத்சலம் விட்டுவிடவில்லை. அன்றைய உத்தேசக் கணக்கில் திருவாரூர் தியாகேசர் கோயிலுக்கு 3,000 ஏக்கர் நிலம் இருந்தது. அதையே எடுத்துக்காட்டாக்கி இந்தத் திட்டம் எப்படிச் செயல்படும் என்பதை அப்போது மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்த சண்முகசுந்தரம் ஒரு அறிக்கை தயாரித்துக் கொடுத்தார் என்று அறிகிறேன். “ஏக்கருக்கு ரூ.100 வீதம், திருவாரூர் கோயில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் பெறுகிறது. இந்த அடிப்படையில் கோயில், மடங்களின் ஆறு லட்சம் ஏக்கருக்கும் ரூ.6 கோடி ஆண்டு மானியம் தரவேண்டியிருக்கும். ஏக்கர் ரூ.2,000 என்று இல்லாதவர்களுக்குக் கொடுத்தாலும் விற்றுமுதல் ரூ.120 கோடியின் வட்டிவரவில் ரூ.6 கோடி மானியம் தருவது சுமையாக இருக்காது” என்று பக்தவத்சலம் கணக்கு சொன்னார்.
முன்னுதாரணம்
  • திட்டத்துக்கு முன்னுதாரணத்தையும் காட்டினார். 1948-ல் செய்த சட்டத்தின் வழியாக எஸ்டேட் நில உடைமைகளை ரயத்வாரி நிலங்களாக அரசு மாற்றியது. அப்போது கையகப்படுத்திய நிலத்தின் பழைய உடைமையாளர்களுக்கு அரசாங்கம் ஆண்டு மானியம் கொடுத்துவருவதாகக் கூறினார்.
  • 1961 சட்டத்தில் அறநிலையங்களின் நிலங்களைச் சாகுபடி செய்பவர்கள் ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்று உச்ச வரம்பு. அந்த சட்டத்தைச் செய்தவரும் பக்தவத்சலம்தான். கோயில் நிலத்தின் சாகுபடி உரிமை பரவலாகும் என அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதையே கோயில் நிலம் பற்றிய தன் திட்டத்துக்கு ஒரு காரணமாகவும் சொன்னார். கோயில் நிலங்களை முறையாகவோ, திறமையாகவோ நிர்வகிக்க இயலாது என்பதையும் திட்டத்துக்கு இன்னொரு காரணமாக்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மானியம் தருவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளும் என்றார்கள் சிலர். நீதிபதிகள் ஊதியம்போன்ற செலவினங்கள் சட்டமன்ற வாக்கெடுப்புக்கு உட்பட்டவையல்ல. அவற்றைப்போல் மானியத்தையும் வாக்கெடுப்புக்கு உட்படாத செலவாக வைத்துக்கொள்ளலாம் என்றார் பக்தவத்சலம்.
  • கோயில்களின் நில உரிமையைப் பறிப்பதுதான் அவர் நோக்கம் என்றும் ஒரு விமர்சனம். “ நான்தான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில் நிலங்களுக்கு விலக்களித்தேன். நான்தான் கோயில்களுக்கு நிலச் சொத்து உதவாது என்றும் சொல்கிறேன்” என்று வெளிப்படையாகத் தன் அனுபவத்தையே அதற்கு விடையாக்கினார்.
  • கோயில், தெய்வம் பற்றிய திராவிடக் கட்சிகளின் சிந்தனையோட்டம் எதிர்மறை சாயல் கொண்டதாக மக்களிடையே ஒரு மனப் படிமம். ஆட்சிக்கு வந்த அக்கட்சிகள் இந்தப் படிமத்தை மெல்ல கழித்துக்கொள்ளவே முயன்றன. அவை கோயில் நில நிர்வாகத்தைச் சீர்திருத்துவதுபற்றி உரத்துப் பேசினால் இந்த படிமம் அழுத்தமாகும் என்று தயங்கும். தமிழகச் சூழலில் கோயில் நிலப் பிரச்சினை பற்றிய ஒரு திட்டத்தை பக்தவத்சலம் ஒருவர்தான் அவர் பேசிய உறுதியோடு பேசியிருக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories