TNPSC Thervupettagam

எம்.பி.க்களுக்கு எதற்கு ஊதியம்?

April 1 , 2019 2111 days 1320 0
  • இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது, எம்.பி.க்களுக்கு ஏன் ஊதியம் வழங்க வேண்டும்? இரண்டாவது, எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஏன் பொதுமனதுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது?
அலுவலகச் செலவுகள்
  • ஒரு ஜனநாயக நாட்டில் எம்.பி.யாகப்பட்டவர் சட்டங்கள் செய்பவர், அரசைக் கேள்வி கேட்பவர், நாடாளுமன்றக் குழுக்களில் பங்கேற்பவர், அரசின் நிதிநிலை அறிக்கையை அங்கீகரிப்பவர், தொகுதியை மேம்படுத்துபவர், இன்ன பிற. இவ்வளவு பொறுப்புள்ள பதவியை வகிப்பவருக்குத் தக்க ஊதியம் வழங்கப்பட வேண்டாமா? சரி, மேற்கூறிய பணிகளைச் செய்வதற்கு அவருக்கு உதவியாளர்களும் அலுவலகங்களும் வேண்டாமா? அதற்குத்தான் மாதம் ரூ.45,000 வழங்கப்படுகிறது. இதில்தான் அவர் உதவியாளர்களுக்கு ஊதியமும் அலுவலகத்துக்கு வாடகையும் கொடுக்க வேண்டும். மேசை, நாற்காலி, கணினி, காகிதங்களெல்லாம் வாங்க வேண்டும்.
  • வளர்ந்த ஜனநாயக நாடுகளின் நிலை நேர்மாறானது. அமெரிக்காவின் நாடாளுமன்றமானது, உறுப்பினர் அவை, செனட்டர் அவை என இரண்டு அவைகளைக் கொண்டது. முன்னதன் உறுப்பினர்கள் தொகுதிவாரியாகவும், பின்னதில் மாநிலத்துக்கு இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் மாதச் சம்பளம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம். கார்ப்பரேட் நிறுவனங்களின் இடைநிலை அலுவலர்களின் ஊதியத்துக்கு இசைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். தவிர, தலைநகர் வாஷிங்டனிலும் தொகுதியிலும் அலுவலகங்களை அரசுச் செலவில் அமைத்துக்கொள்ளலாம்.
  • செனட்டர்களுக்கு மாநிலம் நெடுகிலும் அலுவலகங்கள் இருக்கும். இதில் பணியாற்றும் அலுவலர்கள் பொருளாதாரம், அரசியல், புள்ளியியல் போன்ற துறைகளில் படிப்பும் பயிற்சியும் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களைக் கட்சிப் பணிகளுக்கும் பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தலாகாது. இந்த அலுவலகங்கள், வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கவும் ஏதுவானவை.
ஹாங்காங் அனுபவம்
  • இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்க்கலாம். ஹாங்காங்கின் ஜனநாயகம் முழுமையானதல்ல. செயலாட்சித் தலைவர் மைய அரசுக்கு இணக்கமான குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், சட்டமன்றத்துக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர். சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தவிர கல்வி, சட்டம், பொறியியல், மருத்துவம் முதலான பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளும் சட்டமன்றத்தில் இடம்பெறுவார்கள்; இவர்களைத் துறை சார்ந்த வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த உறுப்பினர்களின் மாதச் சம்பளம் சுமார் ரூ.70 லட்சம். ஒவ்வொரு உறுப்பினருக்கும் அலுவலகம் இருக்கும்.
  • ரேமண்ட் ஹோ பொறியியல் துறை உறுப்பினராக இருந்தார். மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பத்தாண்டுகளுக்கு முன்பு அவரது அலுவலுகத்துக்குப் போயிருக்கிறேன். முதலில் வரவேற்பறை, அடுத்து நான்கைந்து பேர் அமரத்தக்க ஓர் ஆலோசனை அறை, ஒரு சிற்றரங்கு, அடுத்து ஒருபுறம் நூலகம், மறுபுறம் ரேமண்டின் அறை. பின்புறம் ஐந்தாறு ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள்.
இந்தியாவின் நிலை
  • இந்த அலுவலகத்துக்குப் போன சில மாதங்களில் தமிழக எம்.பி. ஒருவரின் அலுவலகத்துக்குப் போக வாய்த்தது. ஒரு நண்பர் அழைத்துக்கொண்டு போனார். புறநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார் எம்.பி. முற்றத்திலும் வசிப்பறையிலும் பிளாஸ்டிக் நாற்காலிகளும் அன்றைய நாளிதழ்களும் இறைந்து கிடந்தன. இரண்டு அறைகளில் விலை குறைந்த இரும்பு மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
  • ஒரு மேசையின் மீது ஜமுக்காளம் விரிக்கப்பட்டு அதன் மீது ஒரு கணினியும் இருந்தது. கதவுகளில்லாத அடுக்குகளில் காகிதங்கள் குறுக்காக மடித்து அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மனுக்களாக இருக்கலாம். கோப்புகள் தென்படவில்லை. அலுவலகத்தில் எம்.பி. சார்ந்திருந்த கட்சிக்காரர்களே அதிகமும் காணப்பட்டார்கள். நான் நண்பரிடத்தில் ரேமண்ட் ஹோவின் அலுவலகத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நண்பர் ‘இது போன்ற அலுவலகம்கூட நாட்டில் பல எம்.பி.க்களுக்கு இல்லை’ என்று பதில் சொன்னார்.
  • பிரதான வேட்பாளர்கள் பலரும் தேர்தல் நேரத்தில் அள்ளிவிடும் பணத்தைப் பார்க்கும் வாக்காளர்களின் மனம் இவர்களுக்கு எதற்கு ஊதியம் என்று சிந்திக்கிறது. ஒரு சாதாரணக் குடிமகன் சட்டபூர்வமான எளிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குக்கூட சிபாரிசும் லஞ்சமும் தேவைப்படும்போது, அது இந்த அமைப்பின் மீதும் அதன் பிரதிநிதிகள் மீதும் வெறுப்பாக வெளிப்படுகிறது. இதைக் களைவது வேட்பாளர்களின் கைகளில்தான் இருக்கிறது. செயல்திறன் மிக்கவர்களாகவும், காட்சிக்கு எளியவர்களாகவும், ஊழலுக்கு எதிரானவர்களாகவும் அவர்கள் பரிணமிக்க வேண்டும். அப்போது எம்.பி.க்களுக்கு எதற்கு ஊதியம் என்கிற கேள்வி எழாது.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories