பல இடையூறுகளைச் சந்தித்தாலும் அதிலிருந்து கொஞ்சமும் மாறுபடாமல் வாழ்ந்த எழுத்தாளர்கள் பலரின் வாழ்க்கை இன்றும் சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளன.
சின்னஞ்சிறு வயதிலேயே இருதயம் பலவீனமாக இருக்கிறது என்று வெளியில் போகவிடாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்தார்கள் பெற்றோர். 9 வயது சிறுமியாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அந்தச் சிறுமிதான் காலப்போக்கில் 24 நூல்களையும், 15 நாவல்களையும் எழுதிக் குவித்தவர்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நதீன் கோர்டிமர் என்ற அந்த எழுத்தாளரின் ஒருபக்கக் கட்டுரைகள், அவர் வாழ்ந்த தேசத்தில் பூகம்பத்தை உண்டாக்கியது. இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற இவர், கருப்பின மக்களின் அவலங்களை ஒரு பக்கக் கட்டுரைகளாக வடித்துக் கொட்டியது தென்னாப்பிரிக்க தேசத்தையே உலுக்கியது.
எழுத்தாளர்கள்
இந்தச் சமூகம்தானே என்னை வளர்த்தது, அந்தச் சமூகத்திற்காக நான் என்னை அர்ப்பணிக்கவும் தயார் என்று அவர் எழுதிய எழுத்துகள் பல பரிசுகளையும், பட்டங்களையும் அவருக்குப் பெற்றுத் தந்தன. இவரது எழுத்துக்காகக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையை கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காகவே செலவிட்டவர் நதீன் கோர்டிமர்.
மருத்துவராகவோ அல்லது வழக்குரைஞராகவோ ஆகுமாறு பெற்றோர் சொன்ன போது, நான் ஒரு சிறந்த எழுத்தாளராகத்தான் வருவேன் என்று தனது 10-ஆவது வயதிலேயே பெற்றோரிடம் அடம் பிடித்தவர் ரஷியாவில் பிறந்த அயன்ராண்ட் என்ற அந்தச் சிறுமி. இவர் எழுதிய நூல்கள் பலவும் எத்தனை லட்சம் விற்பனையாயின என்று கணக்கிட முடியாது. இவர் எழுதிய பவுன்டைன் ஹெட் என்ற நாவல் உலக அளவில் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
இந்த ரஷியப் பெண்ணின் எழுத்துகளுக்கு மயங்கிக் கிடந்தது அமெரிக்க இளைஞர்கள் பட்டாளம்.
ரஷ்யா
ரஷியாவில் பிறந்து அங்கு ஏற்பட்ட புரட்சி காரணமாக அமெரிக்காவுக்கு வந்து அந்த மக்களின் அவலங்களை அற்புதமாக படம் பிடித்து எழுதியதால், இந்த ரஷிய எழுத்துத் தேவதை மறைந்தபோது அமெரிக்க தேசமே கண்ணீர் விட்டது.
இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான புக்கர் பரிசினை, தான் முதன்முதலாக எழுதிய நாவலான காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் என்ற நூலுக்காகப் பெற்றவர் கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளரான அருந்ததி ராய். அந்த ஒரு நாவலே ஆயுள் முழுவதும் அவருக்கு வருமானம் தரக் கூடியதாக அமைந்தது. உலகப் புகழ் பெற்ற இந்த நாவல் ஒரே நாளில் லட்சக்கணக்கில் விற்பனையானது.
இவரது எழுத்துகள் அமெரிக்காவின் அணு ஆயுதப் பரவல்களையும், போர் நடவடிக்கைகளையும் அங்குலம், அங்குலமாக அலசியது. ஒரு கணினி செய்யும் வேலைகளைப் பார்த்து வியந்து போன இந்தப் பெண், அதில் தன் மனதைப் பறிகொடுத்ததை எழுத்துகளாக்கியதே காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் என்ற முதல் நாவல்.
தான் எழுதிய ஒரு திரைப்படத்துக்காகக் கிடைத்த தேசிய விருதை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியவர் இவர். இந்தியாவின் பெருமைக்குரிய சமூகப் போராளியும்கூட.
நினைத்தபடி வாழவேண்டும் என்றால் நிருபராகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது அந்த சிலி நாட்டு எழுத்தாளரான இஸபெல் அலண்டேவுக்கு. முதலில் ஒரு பத்திரிகையில் பணியில் சேர்ந்தார்.
உயிரிழந்து போன தனது மகளின் நினைவாக அவரது பெயரிலேயே இவர் எழுதி வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பு மிகச் சிறந்த இலக்கியத் தொகுப்பாகி லட்சக்கணக்கில் விற்பனையானது.
இலக்கியத்துக்காக ஏராளமான பரிசுகள் பெற்ற இவர், சிலி நாட்டின் ஊழலையும்,பெண்களின் நிலைமைகளையும் அம்பலப்படுத்தினார். அரசியல் அசிங்கங்களை பேய்க் கதை பாணியில் சொல்லி, பல அரசியல்வாதிகளுக்கும் பேயாகவே தெரிந்தவர் எழுத்தாளர் இஸபெல் அலண்டே.
தென்னாப்பிரிக்காவின் நதீன் கோர்டிமர், ரஷியாவின் அயன்ராண்ட், கேரளத்தின் அருந்ததிராய், சிலி நாட்டின் இஸபெல் அலண்டே ஆகிய நான்கு எழுத்து அரசிகளும் எழுதிய பல நூல்கள் 30-க்கும் மேற்பட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சாகாவரம் பெற்றன.
புகழ்
சொக்கித் தவிக்க வைத்த இவர்களின் எழுத்து நடை அவர்களை புகழின் உச்சிக்கே கொண்டு போய் விட்டன. அந்த எழுத்துகளே ஆயுள் முழுவதும் அவர்களுக்கு வருமானத்தையும் அள்ளிக் கொடுத்தது.
உலக அளவில் பல பரிசுகளும், பட்டங்களும் இவர்களிடம் குவிந்ததற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தால் மக்களின் துயரங்களை கருவாக எடுத்துக் கொண்டு எழுத்துகளைப் பிரசவித்தார்கள் என்பதே உண்மை.
மண்ணில் வாழ்வது மட்டும் வாழ்க்கையல்ல, மனித மனங்களை எழுத்துகளால் கட்டிப் போடுவதுதான் ஓர் உண்மையான எழுத்தாளனின் வாழ்க்கை.