TNPSC Thervupettagam

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டந்தட்டுவதா?

May 16 , 2019 2073 days 1471 0
  • இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பை அகில உலகமும் கூர்ந்து நோக்கி பாராட்டுவது உண்டு. காரணம், அதன் மையப்புள்ளியாக இரும்புச் சட்டம் (ஸ்டீல் ஃப்ரேம்) என்று அழைக்கப்படும் நிர்வாக அமைப்பு இருப்பதுதான். சுதந்திரம் அடைந்த பின்னர் முன்னாள் ஐ.சி.எஸ். அதிகாரிகளின் பெயர் மாற்றப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) என்று அழைக்கப்பட்ட அந்த நிர்வாக அமைப்பை வழிநடத்தும் அதிகாரிகள்தான் அதற்கான காரணம்.
நிர்வாக அமைப்பு
  • இப்போது, உலகமே வியந்து பாராட்டிய அந்த நிர்வாக அமைப்பையும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் மட்டந்தட்டும் வகையில், குடிமைப் பணித் தேர்வு எழுதாமலேயே துறை சார்ந்த வல்லுநர்களை மத்திய அரசு நியமிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசின் வேலைகளுக்கு வெளியே, தனியார் துறைக்கு இணையாகச் சில குறிப்பிட்ட பணிகளைக் கையாள்வதற்கு, பக்கவாட்டில் நுழையும் லேட்டரல் எண்ட்ரி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. குடிமைப் பணித் தேர்வு எழுதாமலேயே, தனியார் துறையில் துறை சார்ந்த திறமையானவர்களை இணைச் செயலாளர்கள் என மத்திய அரசில் நேரிடையாகப் பணியமர்த்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
செயலர்கள்
  • மத்திய அரசின் செயலகத்தில் நிதித் துறை, மின்சாரத் துறை மற்றும் கழிவுநீர்த் துறைகளில் ஒன்பது இணைச்செயலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன எனும் வாதங்களைக் கவனிக்க வேண்டும். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பின்னாளில் ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பணியாற்றிய சுப்பாராவும், நடராஜன் எனும் உயர்நிலை ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இதற்கான காரணங்களை விளக்கியுள்ளனர்.
இரும்புச் சட்டம்
  • முதலாவதாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உள்ளடக்கிய இரும்புச் சட்டம் எனும் நிர்வாகக் கட்டமைப்பு பிரிட்டிஷ் காலனிய அரசு போன்ற, ஒரு கடுமையான மத்திய அரசுக்குத் தேவை என்பது அவர்கள் வாதம். 1991-ஆம் ஆண்டு முதல் பொருளாதாரச் சீர்திருத்தம் அமலுக்கு வந்தபின், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள்தான் அதிகமாக இருக்கின்றன.
  • அரசின் கட்டுப்பாடுகள் தளர்ந்து, பொருளாதாரம் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார்போல நடவடிக்கைகள் எடுக்கும் தன்மை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குக் கிடையாது எனக் கூறுகின்றனர் இந்த அதிகாரிகள். அடுத்து, இளம் வயதில் குடிமைப் பணித் தேர்வு எழுதி பணியில் சேரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நிர்வாகம் மற்றும் பல நிகழ்வுகளை சரியாக எடைபோடும் அனுபவம் இல்லை என்பது அவர்கள் கணிப்பு.
  • மேலும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் பணியில் சேர்ந்துவிட்டால், அவருக்குப் பதவி உயர்வு பணிமூப்பு அடிப்படையில் திட்டமிட்ட பாணியில் வழங்கப்படும். திறமை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன அதிகாரிகளுடன்  இவர்கள் நேரிடையாகப் பணியாற்றும்போது, போட்டி உருவாகி, நிர்வாகத் திறமை அதிகரிக்கும் என்கிறார்கள் அந்த அதிகாரிகள்.
  • இதுபோன்ற வாதங்கள் சரிதானா என்பதை முடிவு செய்ய இந்தியாவின், நிர்வாக கட்டமைப்பின் பின்னணியை அலசி ஆராய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.  இந்தியாவில், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி பல பகுதிகளை ஆக்கிரமித்தும் அங்குள்ள மன்னர்களிடம் நிர்வாகத்தைக் கைப்பற்றியும் பிரிட்டனால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், ஆட்சியாளர்கள் மூலம் ஆட்சி செய்தது.
வரலாறு
  • அவர்கள் கையூட்டாகத் தாங்கள் பல லட்சங்கள் சம்பாதித்து தங்கள் நாட்டுக்குச் சென்று தங்கிவிடுவது வழக்கமாக இருந்தது. இதைக் கண்டித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் உருவாகியதால், இந்தியாவில் நிர்வாகக் கட்டமைப்பைச் சரி செய்ய நிரந்தரமாக ஒரு பணியமைப்பு உருவாக்கப்பட்டது.  அதுவே ஐ.சி.எஸ். எனும் நிர்வாக அமைப்பு.
  • 1884-ஆம் ஆண்டு முதல் 1888-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் வைஸ்ராயாகப் பணியாற்றிய, லார்ட் டஃப்பரின், உலகில் வேறு எங்குமே ஐ.சி.எஸ். போன்ற பணியமைப்பு கிடையாது. உண்மைத்தன்மை, தைரியம், சரியான கணிப்புத் திறன், சுயநலமில்லா பணி, வெளிப்படைத்தன்மை, தங்களுடன் பணியிலிருக்கும் எல்லோரிடமும் சிறப்பான நட்பு, தங்கள் உயரதிகாரிகளுக்கு கட்டுக்கடங்காத பணிவு ஆகிய குணாதிசயங்கள் குறிப்பிடத்தகுந்தவை.  25 கோடி மக்களை, மிகவும் சமாதானமான முறையில் நிர்வகிக்கும் 1,000 ஐ.சி.எஸ். அதிகாரிகளை நாம் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டும் என்கிறார்.
  • இங்கிலாந்தில், கல்லூரிப் படிப்பில் சிறந்தவர்களாக விளங்கும் பல இளைஞர்களும், தாங்கள் ஐ.சி.எஸ். அதிகாரிகளாக உருவாக வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தங்கள் கல்லூரியில் கல்வி கற்பது அந்த காலகட்டத்தின் நடைமுறை. அந்த எண்ணத்துக்கு அடிப்படைக் காரணம், வித்தியாசமான நாட்டில் சேவை செய்யவும், நிர்வாக அதிகாரத்தை உபயோகிக்கவும், ஏழை மக்களை முன்னேற்றவும் முடியும் என்ற உயரிய எண்ணம்.
  • தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று பின் ஐ.சி.எஸ். பொதுத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்பவர்களே இந்த ஐ.சி.எஸ் அதிகாரிகள். ஐ.சி.எஸ். அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மிகத் தரமானவை. குதிரை சவாரி, துப்பாக்கிச் சுடுதல், தனியாக இரவில் தங்குதல் எனப் பல பயிற்சிகள்.
பயிற்சி 
  • இந்தியாவுக்கு வந்தபின் அடிமட்டத்தில், கிராமத்து ஊழியர்கள் முதல் மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் பணிகளிலும் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால், இவர்கள் பொது நிர்வாகத்தில் மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் இந்தியாவுக்கு பல நன்மைகளைச் செய்தனர். உதாரணமாக, பல மலைப்பிரதேசங்களுக்கு குதிரையில் கஷ்டப்பட்டு சென்று திரும்பிய ஐ.சி.எஸ். அதிகாரி ஒருவர், சரியான பாதைகளை அமைத்து மலைவாழ்மக்கள் எல்லா இடங்களுக்கும் செல்ல உதவினாராம்.
  • இதைக் கேள்விப்பட்ட மற்ற பகுதிகளின் ஐ.சி.எஸ். அதிகாரிகளும் அதைச் செய்தனராம்.  இன்றைய நம் மாநிலத்தின் உதகை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் உருவான பாதைகள் அப்படி உருவானவையே! அடுத்து, நாடு சுதந்திரம் பெற்ற பின் ஆங்கிலேயரின் ஆட்சிக் கரமாக இருந்த ஐ.சி.எஸ். ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எல்லா காங்கிரஸ் தலைவர்களிடமும் உருவாகியது. பிரிட்டிஷ் அரசின் கொள்கைகள் மற்றும் உத்தரவுப்படி மிகுந்த நேர்மையுடனும், திறமையுடனும், ஒழுக்கமாகவும் நடந்த இந்த அதிகாரிகள், நமது ஆட்சியிலும், நமது கொள்கை மற்றும் விருப்பப்படியும் அதே கட்டுப்பாட்டுடன் திறமையுடன் நடப்பார்கள் என சர்தார் வல்லபபாய் படேல் கூறி, அவர்கள் தொடர வேண்டும் என வாதிட்டு வெற்றி பெற்றார்.
ஐ.ஏ.எஸ்.
  • அவர்களது பெயரைஐ.சி.எஸ். என்பதற்குப் பதிலாக ஐ.ஏ.எஸ். என மாற்றி அமைத்தார். ஒரு கூட்டுறவு நூற்பாலையின் நிர்வாக இயக்குநராக ஒரு இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தபோது, 16 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த ஆலை முதல்முறையாக லாபத்தில் இயங்க ஆரம்பித்தது. இதைக் கண்டு வியப்படைந்த மற்ற நூற்பாலைகளின் இயக்குநர்கள், ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதில் தனியார் நூற்பாலைகளின் இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டுறவு நூற்பாலை எப்படி லாபத்தை ஈட்டுகிறது என்பதை ஐ.ஏ.எஸ். அதிகாரியான அதன் நிர்வாக இயக்குநர் விளக்கினார்.
  • நிறைய அனுபவம் பெற்ற நூற்பாலை அதிகாரிகளைவிட, ஓர் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி தாம் சிறந்தவர் என நிரூபித்தார். இதுபோன்ற நிறைய உதாரணங்களைக் கூற முடியும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் நிர்வாகப் பயிற்சி மிக முக்கியமான ஒன்று. ஒரு துறையில் அவர்கள் பெற்றுக் கொள்ளும் அனுபவத்தை மற்றொரு துறையில் அவர்கள் புகுத்தி நிர்வகிக்கும்போது அதிகத் திறமையான நிர்வாகம் உருவாகும்.
  • இதைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான், பக்கவாட்டில் நுழையும், குடிமைப் பணி தேர்வு எழுதாத தனியார் வேறு துறை அதிகாரிகளை இணைச் செயலர்களாக பணியமர்த்துவதை வரவேற்பார்கள். தலைமைப் பணி என்பது வேலையைச் செய்யும் குணமல்ல, ஆனால் பிறரை வேலை செய்ய வைக்கும் குணம் என்பது அடிப்படை. அரசு நிர்வாகத்தில் பங்கு பெறாத திறமைசாலிகளை, பலப்படுத்திக் கொள்வதை இப்போதைய அமைப்பு தடுப்பதில்லை. அவர்கள் ஆலோசகர்களாகவும், குறிப்பிட்ட பணியைச் செயல்படுத்துபவர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படலாம் அல்லது நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்காக, அவர்கள் துறையின் இணைச் செயலராக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு நிகரான தகுதியுடன் பணியமர்த்தப்படுவது, புரிதல் இன்மை என்றுதான் கூற வேண்டும்.
மத்திய அரசு – முடிவு
  • மத்திய அரசின் இந்த முடிவு, நமது மத்திய நிர்வாகத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு முதல் படி. இது மாநிலங்களுக்கும் பரவினால் முழு தேசமும் பாதிக்கப்படும்.தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சிக்கு வரும் கட்சிகள், தகுதி, திறமை, நேர்மை என்று எந்த அடிப்படைத் தகுதியுமில்லாத கட்சிக்காரர்களை அரசின் துறைச் செயலர்களாக நியமிக்கும் அவலத்துக்கும் இது வழிகோலும். நல்லதோர் அரசியல் கட்சி ஆட்சி அமைத்தால், மோசமான நிர்வாகத்தை நேர்மையான அதிகாரிகளின் உதவியுடன் சரி செய்ய முடியும் என்ற இன்றைய நிலைமை மாறி, எப்போதுமே சரி செய்ய முடியாது என்ற நிலை நம் நாட்டில் உருவாகும்.

நன்றி: தினமணி(16-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories