- நாடெங்கும் ஒரே சமயத்தில் மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவதன் சாதக பாதகங்களை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைப்பதென்று மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவும், ஆட்சிப் பொறுப்பேற்ற வேகத்தில் இதுகுறித்து விவாதிக்க பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டமும் இந்த விஷயத்தில் பாஜக அரசு கொண்டிருக்கும் தீவிர ஆர்வத்தை வெளிக்காட்டுகிறது.
- இத்தகைய தேர்தல் முறையைப் பரிந்துரைப்பவர்கள் “செலவுகளைக் குறைக்கலாம், ஆட்சி நிர்வாகத்தில் சில முடிவுகளைத் துணிந்து எடுக்கலாம்” என்கிற காரணங்களை முதன்மையாகக் குறிப்பிடுகிறார்கள்.
குழு
- இத்தகைய முறையை எதிர்ப்பவர்கள், “அதிகாரக் குவிப்போடு சம்பந்தப்பட்ட விஷயம் இது; தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பிராந்தியப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படும்; பிராந்திய நலன்கள் அடிபடும்” என்கிற காரணங்களை முதன்மையாகக் குறிப்பிடுகிறார்கள்.
- நடைமுறை சார்ந்த சில முக்கிய கேள்விகள் இருக்கின்றன. மத்திய அரசு கவிழ்ந்தால் என்னவாகும்? அதேபோல மாநில அரசு கவிழ்ந்தால் என்னவாகும்? ஒரே நேரத்தில் தேர்தல் என்ற லட்சியத்தை எட்டுவதற்காக மாநில அரசுகள் இவற்றின் சுமையைத் தாங்க வேண்டுமா? இதற்கான தீர்வாக ‘ஆக்கபூர்வ நம்பிக்கைத் தீர்மானம்’ என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது. அதாவது, ஒரு அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் உறுப்பினர்கள் அதற்கு மாற்றாக மற்றொரு அரசின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். அதேபோல, பெரும்பான்மையை இழப்பதன் மூலம் ஆட்சியின் இடைக்காலத்திலேயே தேர்தல் வந்தால் அதைத் தொடர்ந்து அமையும் அரசானது முழு ஆட்சிக் காலம் வரை அல்லாமல் முந்தைய அரசுக்கு மிச்சமிருந்த காலம் வரையிலேயே ஆட்சியில் இருக்கும்.
அணுகுமுறைகள்
- இத்தகைய அணுகுமுறைகள் எல்லாம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை மாற்றவும் மாற்று அரசை ஆதரித்த உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்யவும் ஏதுவாக அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கும் வாய்ப்புண்டு. இதில் பிரதான பிரச்சினை என்பது ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பிரதிநிதித்துவ ஜனநாயகமும் கூட்டாட்சித் தத்துவமும் பாதிக்கப்படும் என்பதுதான். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நிர்வாகத் துறையானது சட்டம் இயற்றும் அவைக்குக் கட்டுப்பட்டது.
- ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது அந்த அவையின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும் என்பதே உண்மை. ஆக, இந்த யோசனையை ஓரங்கட்டுவதே அரசு எடுக்கும் நல்ல முடிவாக இருக்க முடியும். நிறைய மக்கள் பிரச்சினைகள் அரசின் கவனம் கோரி நிற்கின்றன. அரசு தன் கவனத்தை இப்போது அங்கு திருப்பட்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (24-06-2019)