அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்னும் பொன்மொழியை என்றோ நவின்றார் தமிழ் மூதாட்டி ஒளவை. கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறப்பு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ வேண்டுமாயின், அறம் செய விரும்பு என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்தொழுக வேண்டுமென்பதையும் ஆத்திசூடியில் அவர் கூறியுள்ளார்.
அறம்
அறம் எனப்படும் பண்பு நலன் மனிதர்களின் மனம், சொல், செயல் சார்ந்ததாகும். இதன் அடிப்படையில் அறம் செய விரும்பு என்ற சொற்றொடரை ஆழ்ந்து நோக்கினால் மனித குலம் மனத் தூய்மையுடன் அறநெறி போற்றி வாழ நாட்டம் கொள்ளுதல் வேண்டும் என்னும் சொற்பொருள் நன்கு புலப்படும்.
இவ்வாறான அறம் சார்ந்த வாழ்வை மானுடம் மேற்கொண்டு துலங்குவதற்கு அடிப்படை அஸ்திவாரமாக அமைவது கல்வியும் ஒழுக்கநெறியுமே ஆகும்.
எனவேதான், மனித வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவப் பெருந்தகை, கல்விச் செல்வத்துக்கு நிகரான செல்வம் இந்த உலகில் வேறொன்றுமில்லை என்பதை அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒழுக்க நெறியின்றி ஒருவன் எவ்வளவு நுசிலறிவுப் பெற்றிருந்தாலும் அவன் அறிவற்றவனேயென்பதை,
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் என்னும் குறள் வாயிலாகவும் வலியுறுத்தினார்.
ஆனால், இயந்திரமயமாகிவிட்ட இன்றைய மனித வாழ்வில் கல்வி ஒழுக்கநெறி சார்ந்தது என்பதைப் பெற்றோர்கள் பலர் உணர்வதே இல்லை.
மாறாக, தங்கள் குழந்தைகளின் திறமை, விருப்பம் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அவர்கள் மருத்துவர்களாக வேண்டும், பொறியாளர்களாக வேண்டும் என்ற தங்களின் வணிக நோக்கம் கொண்ட எண்ணத்திற்கேற்பக் கல்விக் கூடங்களை நோக்கிப் படையெடுப்பது வாடிக்கையாகி விட்டது.
தனியார் கல்வி நிறுவனங்கள்
பெற்றோர்களின் இத்தகைய மனநிலையைப் புரிந்துகொண்டு வணிக நோக்குடன் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களும் இன்று பெருகிவிட்டன. ஆனால், மாணவர்களின் பண்பு நலனைச் செழித்தோங்கச் செய்வதற்கான ஒழுக்கநெறியைப் புகட்டுதல் என்னும் மகத்தான பணி பெரும்பாலான கல்விக் கூடங்களில் இன்று அருகிவிட்டது என்பதே நிதர்சனம்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் கல்விக் கூடங்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
அன்று, எந்தவொரு பள்ளிக்கூடமானாலும் கல்வி கற்பித்தலுக்கான நேர ஒதுக்கீட்டில் வாரம் ஒருமுறை நீதி போதனைக்கென்று ஒரு வகுப்பை ஒதுக்கி, தனிமனித ஒழுக்கத்தின் அவசியத்தை உளவியல் ரீதியாகப் போதித்தார்கள். ஒருநாள் சுற்றுலா மற்றும் கல்விச் சுற்றுலா என விவசாயம், நெசவு, தச்சு போன்ற தொழில் செய்யும் இடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கோயில்கள், கோட்டைகள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மாணவர்களின் மனதில் பதிய வைத்து மனவளத்தைச் செம்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர்.
கல்வி முறை
இத்தகைய ஒழுக்கநெறி சார்ந்த கல்வி முறை இன்று கானல் நீராகிவிட்டது என்பது கசப்பான உண்மையே! கல்வியின் மேன்மையை ஆழ்ந்து ஆராய்ந்த அண்ணல் காந்தியடிகள், மனிதன் என்றால், வெறும் அறிவு மாத்திரமல்ல, அல்லது ஸ்தூல உடலுமல்ல, உணர்ச்சி மட்டுமோ, அதுவும் அல்ல, அறிவு, உடல், உணர்ச்சி ஆகிய மூன்றும் அழகிய முறையிலே ஒன்று கூடினால்தான் மனிதன் ஆகிறான்.
இவை மூன்றையும் வளர்ப்பதே உண்மையான கல்வி முறையாகும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். வரலாற்றில் கல்வெட்டுச் செய்தியாக இடம்பெற்றுள்ள இந்தக் கருத்தினை இன்றைய கல்வி நிறுவனங்களும், நாமும் கருத்தில் கொண்டு இந்தச் சமுதாயத்தின் மீது தவழ்ந்து கொண்டிருக்கும் நெருப்புப் போர்வையை அகற்ற முற்படுவோம்.
இது ஒருபுறமிருக்க, கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை நாம் தொலைத்துவிட்ட காரணத்தால் தாத்தா, பாட்டி மற்றும் நெருங்கிய உறவுகளின் அரவணைப்பும், நல்வழிகாட்டுதலும் நம் குழந்தைகளுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பையும் இழந்துவிட்டோம். மேலும், பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றுவிடுவதால் அவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அன்பு செலுத்தவோ, அவர்களை உற்றுநோக்கி நெறிப்படுத்தும் வாய்ப்போ சரிவர அமைவதில்லை. ஆனால், தங்களது இயலாமைக்குச் சமாதானம் செய்து கொள்ளும் வகையில் இவர்கள் தங்களது பிள்ளைகளுக்குச் செல்லிடப்பேசியையும், இரு சக்கர வாகனத்தையும் வாங்கித் தந்துவிட்டு அந்த இடைவெளியை வெகு எளிதாகக் கடந்து விடுகின்றனர்.
இவ்வாறான காரணங்களினால்தான் எதையும் பகுத்தாய்ந்து பார்க்கும் மனப் பக்குவம் அற்று, பள்ளிப் பருவத்திலேயே சில மாணவர்கள் திசை மாறி மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகுதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், வழிப்பறி செய்தல் போன்ற விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்ளும் அவல நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
எனவே, கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதை மனதில் கொண்டு வருங்காலச் சமுதாயத்தைத் தாங்கும் தூண்களாகிய இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வியைப் புகட்டுவதற்கான ஆக்கப் பணிகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.