TNPSC Thervupettagam

"கடன்பட்டார் நெஞ்சம்போல்...'

March 4 , 2019 2133 days 1288 0
  • சமீபத்தில் மத்திய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் பற்றிய விமர்சனங்களில் முக்கியப் பங்கு வகித்தது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த வரவுக்கும், செலவுக்குமான இடைவெளி 4% அளவில் நிர்வகிக்கப்படும் என்ற விவரமாகும்.
  • ஆனால், வரவுக் கணக்கில் வெளிச் சந்தையில் அரசால் வாங்கப்படும் கடன்கள் சேர்க்கப்பட்டால்தான் அந்த இலக்கை எட்டமுடியும்; கடனுக்கான வட்டித் தொகை கூடுதல் செலவினங்களுக்கு வித்திட்டு, அது மக்கள் மீதான வரி சுமையாக மாற வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாக சந்தை கடன் மூலம் பொருளாதார இலக்குகளை எட்ட முயற்சிப்பது விவேகமல்ல என்பதுதான் விமர்சகர்களின் வாதமாக அமைந்தது எனலாம்.
தமிழக நிதிநிலை அறிக்கை
  • அதே போன்று, தமிழக அரசின் சமீபத்திய பட்ஜெட் பற்றிய விவாதங்களில் முக்கியப் பங்கு வகித்தது ரூ.4 லட்சம் கோடி அளவிலான அதன் கடன் சுமையும், அதற்கான ஆண்டு வட்டி ரூ.33 கோடியும் ஆகும். அரசின் இந்தக் கடன் சுமை, விவாதங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
  • நாட்டு நிர்வாகத்தில் அளவுக்கு அதிகமான கடன் சுமை என்பது எதிர்மறையாக பார்க்கப்படுவதுபோல்தான், வீட்டு நிர்வாகத்திலும் "கடன்' என்ற நிதி ஆதாரம், கூடியவரை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த மாதிரி நிதி ஆதாரங்களால் உடனடி பொருளாதார மற்றும் நிகழ்காலத்திற்கான சுகமான வாழ்க்கை போன்றவற்றுக்கு பாதுகாப்பு கிடைக்கப் பெற்றாலும், எதிர்காலத்தில் அதே பொருளாதாரத்துக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் அந்தக் கடன் பல மடங்கு பாதகம் விளைவிக்கக் கூடியது ன்பதை ஒவ்வொருவரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
புள்ளிவிவரம்
  • சமீபத்திய புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் தனி நபர் சார்ந்த கடன்களின் மொத்த அளவு அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. 2015-ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த மொத்த தனி நபர் கடன் தொகை, தற்போது ரூ.6 லட்சம் கோடி என்ற அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
  • இந்திய குடும்பங்களின் 30% வரையிலான சேமிப்பின் அளவு, அண்மைக்காலமாக வெகுவாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நவீன வாழ்க்கையின் சுகங்களை உடனடியாக அனுபவிக்கத் துடிக்கும் மோகம்தான்.  சேமித்து எதிர்காலத்தில் அதன் பலன்களை அனுபவிப்பதைவிட, கடன் வாங்கியாவது அன்றாட வாழ்க்கை சுகங்களை உடனடியாக அனுபவிக்கும் மனோபாவம் நம்மிடையே பெருகி விட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
  • ஒரு சாதனம் நமக்கு தேவைதானா என்பதில் கவனம் செலுத்துவதைவிட, அக்கம்பக்கத்தினர் அனுபவிப்பதை நாம் உடனடியாக அனுபவித்தாக வேண்டும் என்ற போட்டி மனப்போக்கு பலரை அவர்கள் அறியாமலேயே கடனாளியாக மாற்றி விடுகிறது.
சேமிப்பு – கடன் 
  • சேமிப்பு என்ற நல்ல பழக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்த நாம், தற்போது "கடன்' என்ற கரடு முரடான மாற்றுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம். நாம் வாங்கிய கடன் ஒரு போதும் தனியாகப் பயணிப்பதில்லை. அது, வட்டி என்ற குட்டியைப் பிரசவித்து, வேகமாக இனப்பெருக்கம் செய்யும் வல்லமை படைத்தது. ஆகவே, கடன் வாங்கியவர் அசலைத் தவிர, அதன் வட்டி என்ற குட்டிகளையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்.
  • அந்த மாதிரி பராமரிப்பைச் செய்ய இயலாதவர்கள், அதற்கான பொருளாதார விளைவுகளைச் சந்தித்து, தங்கள் மன நிம்மதியை இழந்து தவிக்க நேரிடுகிறது. சில சமயங்களில் கடன் தொல்லைகள், தற்கொலை முயற்சி வரை கடனாளியை இழுத்துச் சென்று விடுகிறது.
  • கடன் என்பது நாவால் உச்சரிக்கத் தகுதியில்லாத வார்த்தை இல்லை; கடனாக வாங்கிய தொகையை  எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியம். தொழில் சார்ந்த கடன்களில், பெறப்பட்ட கடனுக்கான அசலுடன், வட்டியையும் திருப்பிச் செலுத்தும் வகையில் பொருள் ஈட்டக்கூடிய இயந்திரங்கள் மற்றும் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் போன்ற சொத்துக்களை வாங்குவதற்கு கடன் உறுதுணையாக நிற்கிறது. அந்தச் சொத்துகளைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தி செய்வதால் ஈட்டப்படும் வருமானம், வட்டியுடன் கடன் தொகையை திருப்பிச் செலுத்த உதவுகிறது.
  • தங்களுக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத துறையில் தொழில் துவங்குவது, அதில் கால் ஊன்றுவதற்கு முன்பே அந்தத் தொழிலை விரிவுபடுத்தும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, எந்த நோக்கத்திற்காக கடன் பெறப்பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகி, கடன் தொகையை  பொருள் ஈட்டமுடியாத மற்ற சொந்தச் செலவினங்களுக்குப் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு கடனாளியைத் தள்ளி விடும்.
  • சில தொழில் அதிபர்களின் மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள்தான் வங்கிகளில் வாராக் கடன் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. கடன் வழங்கிய வங்கிகளின் நஷ்டத்தை ஈடு செய்வதற்கான தொகை அரசாங்கத்தால் வழங்கப்பட்டால், அதுவே வரிச் சுமையாக மக்களின் மீது விழுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சில ஏமாற்றுக்காரர்கள் திருப்பிச் செலுத்தாத பெரும் கடன் தொகையை பொது மக்கள், வரிகள் மூலம் திருப்பிச் செலுத்துகின்றனர். ஒருவர் அனுபவித்த கடன் தொகையை அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத மற்றவர்கள் திருப்பிச் செலுத்தும் அசாதாரண நிகழ்வு இது.
தனி நபர்
  • தனி நபர்களைப் பொருத்தவரை, எந்த நோக்கத்திற்காக கடன் பெறப்படுகிறது என்பது அதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. உதாரணமாக, சொந்த வீடு என்பது அனைவரது கனவாகும். அதற்கான முழுத் தொகையையும் குறுகிய கால சேமிப்பு மூலம் பெற்று விட முடியாது. எனவே, கடன் மூலம் வீடு வாங்குவது என்பது கட்டாயமாகிறது. ஆனால், அவரவர் வருமானத்துக்குத் தகுந்தபடி திட்டமிட்டு கடன் வாங்குவது அவசியமாகும். மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் குடியிருக்கும் வீட்டு வாடகைக்கு எவ்வளை தொகை ஒதுக்கப்படுகிறதோ, அந்த அளவு மாதத் தவணை கணக்கீட்டில் வீட்டுக் கடன் தொகை அமைந்தால், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அதிக சிரமம் இருக்காது.
  • வீட்டுக் கடன் என்பது 10 முதல் 30 ஆண்டுகளில் திருப்பி செலுத்தக் கூடிய நீண்ட கால கடன் திட்டமாகும். அசல் மற்றும் வட்டியைக் கணக்கில் கொண்டு, மாதாந்திர தவணைத் தொகை கணக்கிடப்படுகிறது. பொருளாதாரச் சக்திக்கு உள்பட்ட மாதாந்திர தவணைத் தொகையையும், காலவரம்பையும், முன்கூட்டியே திட்டமிட்டு தீர்மானித்துக் கொண்டால், தவணைத் தொகையை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை மற்றும் அதற்கான கூடுதல் செலவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
  • முந்தைய காலங்களைவிட தற்போது எளிதாகக் கிடைப்பது, கடன் வாங்க நினைக்காதவரையும் கடன் வாங்கத் தூண்டும் வர்த்தக ரீதியிலானதொலைபேசி அழைப்புகள் ஆகிய கிரியா ஊக்கிகள் எண்ணற்றவர்களை கடனாளியாக மாற்றும் காரணிகளாக அமைகின்றன. இந்த மாதிரி எளிதாகக் கிடைக்கும் கடன் திட்டங்களில் பெரும் வட்டி விகிதத்தைத் தவிர, மேலும் பல மறைமுகக் கட்டணங்கள் நிச்சயம் ஒளிந்திருக்கும். அந்த மாதிரி மறைமுக கட்டணங்களில் ஒன்று, செயலாக்கக் கட்டணம் ஆகும்.
  • வட்டித் தொகையோடு மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், வட்டி விகிதம் 36 சதவீதத்தை எட்டி விடும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், இந்த மாதிரி தூண்டப்பட்ட கடன் அழைப்புகளைத் தவிர்ப்பதுதான் விவேகமான செயலாகும்.
  • கடன் வாங்குவதை பெருமளவில் ஊக்குவிக்கும் மற்றொரு சாதனம் வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளாகும். 2015-ஆம் ஆண்டில்"கிரெடிட் கார்டு'கள் மூலம் வழங்கப்பட்ட சுமார் ரூ.25,000 கோடி கடன் தொகை, தற்போது சுமார் ரூ.85,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடன் அட்டைகளின் ஒரு முனை மலர்; மற்றொரு முனை முள் ஆகும். இந்த சாதனத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம். தவறாகப் பயன்படுத்தினால், வட்டி என்ற ஆயுதத்தால் பலத்த காயங்கள் ஏற்பட்டு விடும்.
  • நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திவிட்டால், அனுபவித்த கடனுக்கு வட்டியில்லாமல் தப்பித்து விடலாம். இல்லையென்றால், 36% வரையிலான வட்டிக்கு இரையாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
  • கடன் வாங்கும் தருணத்தில் இருக்கும் உற்சாகம், பலருக்கு அதைத் திருப்பிச் செலுத்துவதில் இருப்பதில்லை. அதனால், கடன் கொடுத்தவருக்கும், கடன் பெற்றவர்களுக்கும் இடையேயான உறவில் அன்பு குலையும்; அல்லது  நட்பில் பெரும் விரிசல் ஏற்பட்டு, அது விரோதமாக மாறிவிடும். விரோத நடவடிக்கைகளில் பண்பு குறைபாடுகள் முளைத்துவிடும்.

நன்றி: தினமணி 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories