TNPSC Thervupettagam

கட்சித் தாவல் தடைச் சட்டம்

February 7 , 2020 1816 days 1398 0
  • கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உறுப்பினர்களின் பதவி நீக்கம் குறித்து முடிவெடுக்கும் உரிமை, பேரவைத் தலைவர்களிடம்தான் தொடர வேண்டுமா என்கிற கேள்விக்கு நாடாளுமன்றம் விடைகாண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

  • உறுப்பினர்கள் பதவியில் தொடரலாமா, கூடாதா என்று அவைத் தலைவர் முடிவெடுப்பதற்கு மூன்று மாத கால வரம்பை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு.
  • நீதிபதிகள் அனிருத்த போஸ், வெ.இராமசுப்பிரமணியன் அடங்கிய அந்த மூன்று பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பு, பதவி நீக்கம் குறித்து முடிவெடுக்க சுதந்திரமான அமைப்பை உருவாக்கவும் ஆலோசனை வழங்கியிருக்கிறது.
  • ஆளும் கட்சிக்கு சாதகமாகப் பேரவைத் தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கட்டுப்பாடே இல்லாமல் கட்சித் தாவலில் ஈடுபட்டதால், குதிரைபேரம் வழக்கமாகிவிட்ட நிலையில்தான் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது.

அரசியல் சாசனத்தின் பத்தாவது பிரிவு

  • அதற்குப் பிறகும்கூட, கட்சிகள் பிளவுபடுவதும், உறுப்பினர்கள் கட்சி மாறுவதும் குறையவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட்டாக வேண்டும்.
  • அரசியல் சாசனத்தின் பத்தாவது பிரிவான கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை அங்கீகரித்து, 1992-இல் உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. குறிப்பிட்ட நிகழ்வுகளில் அவைத் தலைவரின் உத்தரவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்று அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியது. அதே நேரத்தில், அவைத் தலைவர் முடிவெடுத்து உத்தரவைப் பிறப்பித்த பிறகுதான் அந்த உத்தரவு செல்லுமா, செல்லாதா என்று நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியுமே தவிர, அதுவரை நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
  • அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாசலய்யா தலைமையிலான அந்த அரசியல் சாசன அமர்வின்போதே, உறுப்பினர்களின் பதவி நீக்கம் குறித்து முடிவு செய்யத் தனியான அமைப்பு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் வழக்குகளையும், சட்டப் பிரிவுகள் 103, 192, 329 ஆகியவற்றின் கீழ் உறுப்பினர்களின் பதவிப் பறிப்பு குறித்தும் அவைத் தலைவர்கள் முடிவெடுக்காமல் இருப்பதற்கும், கட்சித் தாவல் பிரச்னைக்கும் முடிவெடுக்க, தனியானதொரு அமைப்பை ஏற்படுத்துவது குறித்து மாற்றுத் தீர்ப்பு வழங்கியிருந்தார் அந்த அமர்வில் இருந்த நீதிபதி ஜே.எஸ். வர்மா.

பாரபட்சமற்ற தன்மை

  • அவைத் தலைவர்களின் பாரபட்சமற்ற தன்மைக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முக்கியத்துவம் அளிக்கிறது. அவைத் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், தனது  கட்சியுடனான தொடர்பை அவர் முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்கிறார்.
  • பிரிட்டிஷ் மக்களவையின் தலைவராகப் பதவி வகிப்பவருக்கு எதிராக அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தாமல் அவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கின்றன. அடுத்த தேர்தலில் போட்டியிட விரும்பாவிட்டால், அவர் பிரிட்டிஷ் மேலவையான செனட்டின் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
  • இந்தியாவிலும் ஆரம்பத்தில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. விட்டல் பாய் படேல் உள்ளிட்ட அவைத் தலைவர்கள் அரசியல் சார்பு நிலையிலிருந்து முற்றிலுமாக விலகி நின்றார்கள். காலப்போக்கில் நிலைமை மாறிவிட்டாலும்கூட, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சார்புநிலை இல்லாமல் அவைத்தலைவர் செயல்பட வழிகோலப்பட்டிருக்கிறது. தனது கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகினாலும், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்  பிரிவு எண் 5, அவைத் தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் பதவிப் பறிப்பிலிருந்து விலக்கு அளிக்கிறது.
  • உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணமான வழக்கு இதுதான். 
    காங்கிரஸ் சார்பில் மணிப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் பாஜகவுக்குத் தாவியது மட்டுமல்லாமல், அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். நியாயமாக இவர் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்க வேண்டும்.

அவைத் தலைவரின் முடிவு

  • அவைத் தலைவர் தனது முடிவை அறிவித்த பிறகுதான் நீதிமன்றம் தலையிட முடியும் என்பதால், தனது முடிவை அறிவிக்காமல் மணிப்பூர் அவைத்  தலைவர் காலதாமதம்  செய்து வருகிறார். இன்னும் நான்கு வாரங்களில் அவைத் தலைவர் எந்தவித முடிவும் எடுக்காவிட்டால், வழக்குதாரரை மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு வரும்படி ஆர்.எஃப். நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.
  • எல்லா அவைத் தலைவர்களும் ஆளுங்கட்சியின் உறுப்பினர்களாகவே செயல்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. கூட்டணி ஆட்சிகள் அமையும்போது, அவைத் தலைவர் பதவிக்கு அமைச்சர் பதவியைவிட முக்கியத்துவமும், போட்டியும் காணப்படுவதற்குக் காரணம், பதவி விலக்கும் அதிகாரம் அவர்களிடம் இருப்பதுதான்.
  • கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவியை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கத் தனியான அமைப்பை உருவாக்குவது குறித்த யோசனையை நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு முன்வைத்திருக்கிறது. அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 212, 122 ஆகியவற்றின் கீழ், அது கட்சித் தாவல் தடுப்புச் சட்டமாகவே இருந்தாலும், அவை நடவடிக்கைகளில் தலையிட நீதித் துறைக்கு அனுமதி இல்லை. பேரவைகளின் அதிகாரத்தில் நீதித் துறை குறுக்கிடுகிறது. அரசியல் சாசன உணர்வுக்கு எதிரான ஆலோசனை இது.

நன்றி: தினமணி (07-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories