- தமிழக டெல்டா பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா பாசனத்துக்கு ஒரு முறைகூட ஜூன் 12-ஆம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. நடப்பாண்டிலும் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
நீர்
- இது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜூன் முதல் வாரத்துக்குப் பிறகுதான் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
- எனவே, போதிய மழை பெய்து கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று, அந்த மாநில அணைகள் நிரம்ப பல நாள்களாகும் நிலை உள்ளது. தென்மேற்குப் பருவமழை மூலம் கர்நாடக மாநில அணைகள் நிரம்பினால் மட்டுமே உபரி நீர் தமிழகத்துக்குக் கிடைத்து, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு காவிரி டெல்டா விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும்.
- எனவே, 8-ஆவது ஆண்டாக நடப்பாண்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் குறுவை சாகுபடியை உரிய காலத்தில் மேற்கொள்ள முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கர்நாடக அரசைப் பொருத்தவரை, அணைகளில் உள்ள தண்ணீர் அதன் குடிநீர்த் தேவைக்கே போதுமானதாக இருப்பதாகக் கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்துவருகிறது.
காவிரிப் பிரச்சனை
- காவிரி விவகாரத்தில், நதிநீர் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரியைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
- காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் தில்லியில் கடந்த மே 23-ஆம் தேதி நடந்தது. இதில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் தலைமையில் அதிகாரிகளும் கர்நாடகம்-கேரளம்-புதுச்சேரி ஆகியவற்றின் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழகத்துக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் 2 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமாரிடம் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
- உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன் மாதம் 19 டி.எம்.சி., ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி., ஆகஸ்ட் மாதம் 45.95 டி.எம்.சி., செம்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி., அக்டோபர் 20.22 டி.எம்.சி., நவம்பர் மாதம் 7.35 டி.எம்.சி., ஜனவரி மாதம் 2.76 டி.எம்.சி., பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.50 டி.எம்.சி. என தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்.
எதிர்பார்ப்பு
- தமிழகத்துக்கு உடனடியாக கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதே காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
எனினும், கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர், தங்களது தேவைக்கே சரியாக இருப்பதாகக் கூறி தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவது பெரும் குற்றமாகும்.
- கர்நாடகத்திடமிருந்து பெற வேண்டிய மாதத் தவணை தண்ணீரைப் பெற தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மேலும் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தையும் வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
- இதன் மூலம் திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் பெற முடியும்.
- இதற்கிடையில் கடந்த மே 28-ஆம் தேதி கூடிய காவிரி ஆணையம், தமிழக குறுவை சாகுபடிக்கு 19 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியானவுடன், தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டதை கர்நாடக அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு வந்தது தவறு என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
இது ஒரு சட்டப்படியான ஆணை என்று கூறும்போது அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மாறாக எதிர்க் கருத்து சொல்வது என்பது சரிதானா? "பருவமழை போதிய அளவு இல்லை; கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை' ஆகியவை உண்மையானால், காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவைச் சேர்ந்தவர்கள் சென்று கள ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டுமேயொழிய, ஆணையத்தின் சட்ட ரீதியான உத்தரவை மீறுவது நியாயமா?
தமிழக டெல்டா மாவட்டங்கள் முழுவதிலும் கடும் வறட்சி நிலவுவதால், சாகுபடிக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாக நிலத்தடி நீர் தொடர்ந்து அதிகமாக உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் ஆழத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. பாசனம், குடிநீர் இரண்டுக்குமே நீர்இல்லாத நிலையில், விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் பரிதவிப்பில் உள்ளனர்.
- இந்தப் பின்னணியில் குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை அமல்படுத்த ஆவன செய்யவும் தமிழக முதல்வரை அரசியல் கட்சிகளும் விவசாயிகள் சங்க அமைப்புகளும் தொடர்ந்து நிர்ப்பந்திக்க வேண்டும்.
- கர்நாடக அரசு மூலம் காவிரியிலிருந்து தண்ணீரைப் பெற உரிய முயற்சிகளை மத்திய அரசும் தமிழக அரசும் எடுக்காவிட்டால், தமிழக டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். வரும் காலத்தில் காவிரி டெல்டா பாசனம் என்பது கேள்விக்குறியாகி விடும்.
நன்றி:தினமணி (03-06-2019)