TNPSC Thervupettagam

கல்விக் கொள்கை: என்ன சொல்லப்போகிறது தமிழக அரசு?

June 21 , 2019 2016 days 1544 0
  • வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019 பற்றி கருத்து அறிய ஜூன் 22-ல் மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது. அங்கே என்ன சொல்லப்போகிறார் தமிழக அமைச்சர்? என்ன சொல்ல வேண்டும் அவர்? இதுவும் நமது விவாதப் பொருளாக இருக்க வேண்டும்.
  • மும்மொழித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அந்தக் கொள்கை அறிக்கை திட்டவட்டமாகக் கூறுகிறது. ‘இந்தித் திணிப்பா?’ என்று தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்புக் கிளம்பியதும் அப்படி நேரடியாகச் சொன்ன சில வாக்கியங்களை நீக்கினார்களே ஒழிய, மேலே உள்ள வாக்கியம் சம்மணமிட்டு அங்கே உட்கார்ந்திருக்கிறது! அது மட்டுமல்ல 1968-லிருந்தே மும்மாழித் திட்டம் உள்ளது என்றும் அது பெருமையோடு பகர்கிறது!
மீண்டும் மும்மொழித் திட்டமா?
  • இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம், மற்றொரு இந்திய மொழி; இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி என்பதுதான் அன்று கொண்டுவரப்பட்ட மும்மொழித் திட்டம். அதுதான் இப்போதும் தொடருமாம். இது இந்தித் திணிப்பு இல்லாமல் வேறு என்ன? இதை எதிர்த்து நின்றது தமிழ்நாடுதான். இந்திக்காரரும் ஆங்கிலம் படிக்கிறார், தமிழரும் ஆங்கிலம் படிக்கிறார். இணைப்பு மொழி கிடைத்துவிட்டது. பிறகு, இந்திக்காரர் ஏன் தமிழ் படிக்க வேண்டும், தமிழர் ஏன் இந்தி படிக்க வேண்டும்? தாய்மொழி, ஆங்கிலம் எனும் இருமொழி போதுமே!
  • இந்த நியாயமான வாதத்துக்கு இந்தித் திணிப்பாளர்கள் அன்றும் இன்றும் பதில் சொன்னதில்லை. அது மட்டுமல்ல, இந்திக்காரர்கள் தம் தாய்மொழியோடு ஆங்கிலம் படித்தார்களே தவிர, வேறொரு இந்திய மொழியைப் படிக்கவில்லை. அதை இந்த அறிக்கையும் ஒப்புக்கொள்கிறது. ஆனாலும், மும்மொழித் திட்டம் தொடரும் என்கிறது. இது வம்படி வேலையல்லவா?
  • தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளைக் கற்கவே நமது பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள், இரண்டிலும் அரைகுறையாகப் பலர் இருக்கிறார்கள். இதில் முதல் வகுப்பிலேயே மூன்று மொழிகளாம். சொல்லித்தர ஆள் இல்லாத ஏழை வீடுகளில் பாதியிலேயே பிள்ளைகள் படிப்பை விட்டுவிடும்.
தமிழ் செம்மொழி இல்லையா?
  • இந்தியை மட்டுமல்ல; சம்ஸ்கிருதத்தையும் புகுத்துவோம் என்கிறது அறிக்கை. “இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு சம்ஸ்கிருதத்துக்கு உள்ள சிறப்பு முக்கியத்துவத்தையும், அறிவு வளர்ச்சிக்கும் நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்குமான அதன் தனித்துவப் பங்களிப்பையும் கவனத்தில் கொண்டு சம்ஸ்கிருதப் படிப்புக்கான வசதிகள் பள்ளிகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் செய்யப்படும்”. அது என்ன அந்த ஒரு மொழிக்கு மட்டும் இவ்வளவு உயர்ந்த பீடம்? தொன்மையிலும் வளத்திலும் அதற்கு எந்த வகையிலும் குறையாத தமிழ் பற்றி ஏன் இப்படிச் சொல்லவில்லை?
  • இந்தக் கொள்கையை அமல்படுத்தும் அதிகாரத்தைப் பிரதமர் நேரடியாகத் தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்போகிறார். ‘ராஷ்டிரிய சிக் ஷா ஆயோக்’ என்பதை பிரதமரைத் தலைவராகக் கொண்டு அமைக்க வேண்டும் என்கிறது அறிக்கை. இந்த தேசிய கல்வி ஆணையம்தான் இனி கல்வி சம்பந்தப்பட்ட அனைத்தையும் கவனிக்குமாம். வேண்டுமென்றால், முதல்வரைத் தலைவராகக் கொண்டு ‘ராஜ்ய சிக் ஷா ஆயோக்’ அமைத்துக்கொள்ளலாம் ஒரு மாநிலம். அது ராஷ்டிரிய ஆயோக் சொல்படிதான் நடக்க வேண்டியிருக்கும் என்பது சொல்லாமல் புரிந்துகொள்ள வேண்டியது. கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. 1976 நெருக்கடிநிலை ஆட்சியில்தான் பொதுப் பட்டியலுக்குக் கடத்தப்பட்டது. இந்த ராஷ்டிரிய ஆயோக் அமைந்தால் நடைமுறையில் அது மத்தியப் பட்டியலுக்குப் போய்விடும்.
  • இந்நிலையில், தமிழகக் கல்வி அமைச்சர் என்ன சொல்ல வேண்டும்? தமிழ்நாடு அரசு இந்தப் புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்கிறது என்று பிரகடனப்படுத்த வேண்டும். அண்ணாவின் பெயரில் அவரது கட்சி உள்ளது, அண்ணாவின் படம் அவரது கொடியில் உள்ளது. அந்த அண்ணா கண்ட இருமொழிக் கொள்கைக்கு நேர்விரோதமாக மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதால் இதை நிராகரிக்கிறது. மருத்துவக் கல்விக்கே நீட் வேண்டாம் என்று மசோதாக்களை நிறைவேற்றியது தமிழ்நாடு. அதை மற்ற படிப்புகளுக்கும் புகுத்துவதால் இதை நிராகரிக்கிறது. கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிவருகிறது தமிழ்நாடு. அதை மத்தியப் பட்டியலுக்கே மாற்றப் பார்ப்பதால் இதை நிராகரிக்கிறது. இப்படி முரசறைய வேண்டும். செய்வாரா?

நன்றி( இந்து தமிழ் திசை: 21-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories