TNPSC Thervupettagam

கல்வி: தொண்டா, வணிகமா?

June 19 , 2019 2049 days 1177 0
  • உலகத்திலேயே மிகவும் லாபகரமான தொழில் என்பது திரைப்படங்களில் நடிப்பதுதான் என்பார்கள். அதில்தான் எந்தவிதமான முதலீடும் இல்லாமல் கையை, காலை ஆட்டி,  முகபாவத்தை சட்டென்று மாற்றி அழுது, ஏறிக் குதித்து, விளையாடி, உருண்டு புரள்வார்கள். இவற்றை திரைப்படத்தில் பார்த்துவிட்டு மக்கள்  கைதட்டுவார்கள்; குதூகலிப்பார்கள். திரைப்பட அரங்குகளில் அதிக அளவில் வசூல் ஆகும். அதனால், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனத் திரைப்படத்தில் நடிப்பார்கள். திரைப்படத்தில் நடிப்பதைவிட லாபகரமான தொழில் என்ன என்று தொடர்ந்து யோசித்து, திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலர் அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். அது திரைப்படத்தைவிட பல மடங்கு லாபகரமாக இருந்தது.
  • அரசியலைவிட எது லாபகரமானது என்று யோசித்துப் பார்த்தால்,  ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு என பொறியியல் கல்லூரியைத் தொடங்கலாம் எனக் கருதினர். கல்வித் தொண்டுக்கு மேலான அறத் தொண்டு எதுவும் இல்லை என்பார்கள். எந்தப் பொறியியல் கல்லூரியின் தொப்புள் கொடி வழியைத் தேடிச் சென்றாலும், அது பெரும்பாலும்  ஓர் அரசியல்வாதியின் பின்புலத்தில்தான் இருக்கும்.
விதிவிலக்குகள்
  • ஒருசில விதிவிலக்குகள் உண்டு. கல்லூரிக்கு அருகில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது, தகராறு வந்தால் அடியாட்களை வைத்து மிரட்டி அந்த நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு பதிவு செய்வது, மாணவர்களிடம் ரசீது இல்லாமல் அதிகக் கட்டணம்  வசூலிப்பது அல்லது பொய் ரசீது கொடுப்பது, கல்லூரி ஆசிரியர்களுக்கு மிகக் குறைவாக சம்பளம் கொடுத்துவிட்டு, அதிகமான தொகையைக் குறிப்பிட்டு கையெழுத்து வாங்கிக் கொள்வது ஆகியவை நடைமுறையில் உள்ளன.
  • பிரபல பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை முதல் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து கல்விக் கட்டணம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மன மாற்றம் ஏற்பட்டு படிப்பை மாணவர்கள் இடையில் விட்டுச் செல்லாமல் இருக்க இத்தகைய கட்டண நடைமுறையை கல்லூரி நிர்வாகங்கள் கடைப்பிடித்து பெற்றோருக்கு நிதி நெருக்கடியை உருவாக்குகின்றன. மேலும், கல்லூரிக்கு மாணவர்கள் வந்து செல்ல  பேருந்துக் கட்டணத்தை மிக அதிகமாக வசூலிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மேலே குறிப்பிட்ட கட்டணங்கள் அனைத்தையும் ஆண்டு தொடக்கத்திலேயே வாங்கி விடுவார்கள். ஏனென்றால், இப்போது மாணவர்கள் சமுதாயத்தில் பல்வேறு விதமான திசை மாற்றல்கள் இருக்கின்றன.  அதில் கல்லூரி காலத்திலேயே  விதைகளை ஊன்றி வளர்த்து விடுவார்கள்.
தனியார் கல்லூரிகளில்….
  • தனியார் கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவர்களில் பலர்,  எதைப் படித்தார்களோ அல்லது பயிற்று விக்கப்பட்டார்களோ அந்த வேலைகளுக்குக்கூட பொருத்தமில்லாமல் பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர். முதலில் பொறியியல் கல்லூரிகள், அதன் பின்னர் கலை அறிவியல் கல்லூரிகள், இப்போது அதிகமான மெட்ரிகுலேஷன்  பள்ளிகள் என வளர்ந்துகொண்டே  இருக்கின்றன? அரசியல்வாதிகளின் கல்வித் தொண்டு வளர்ந்துகொண்டே வருகிறது. கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்களில் சிலர், கையெழுத்துகூட போடத் தெரியாதவர்களாக இருப்பார்கள். கல்லூரிக்கு ஒரு நிர்வாகக் குழு இருக்கும்;
  • அந்தக் கூட்டத்தை மாதம் ஒரு முறை கூட்ட வேண்டும். அவர்கள் கல்லூரி எல்லைகளைச் சுற்றிப் பார்த்து விட்டு கட்டடங்களையும், மாணவர்கள் அமரும் மேசை நாற்காலிகள் முதல் அறைகளின் சான்றொப்பம், ஆசிரியர் பாடம் எடுக்கும் தகுதி எல்லாம் சரி பார்த்து, சரியில்லையேல் சரியானவர்களை நியமிக்கச் சொல்ல வேண்டும். இதில் மைனாரிட்டி சலுகைகளை எந்த வகையிலாவது வாங்கி விடுவார்கள். இந்த நிலை மாற வேண்டும். கல்லூரிகளை கல்வியாளர்கள் நடத்தும் நிலை வர வேண்டும்.
  • அதிகாரிகள் நினைத்தால் நிலைமையை மாற்றலாம். ஆனால்,  அரசியல்வாதிகளின் கைப்பாவையாக அதிகாரிகள் இருக்கிறார்கள்.
  • பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க ஓர் அரசாங்கம் தரமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். ஏனெனில், ஆசிரியர் பயிற்சி பெற வருவோரிடம் கட்டட நன்கொடை உள்பட அதிகக் கட்டணங்களை தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்துவோர் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கழிப்பறை வசதிகள்கூட இல்லாத நிலை உள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
  • இவ்வாறு உரிய வசதிகள் மற்றும் கற்பிக்கத் தகுதியுள்ள ஆசிரியர்கள் இல்லாத தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து சான்றிதழ் பெறுவோரை ஆசிரியர் பணியில் அமர்த்த அரசு உதவி பெறும் பள்ளிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கில் லஞ்சம் அளித்தால் உடனே இடைநிலை ஆசிரியர் ஆகிவிடலாம்.  ஆசிரியர் ஆணாக இருந்தால், இந்தத் தொகையை மணமகள் வீட்டாரிடம் வரதட்சிணையாக வாங்கி விடலாம்;
  • பெண்ணாக இருந்தால் வரதட்சிணையில் குறைத்துக் கொள்ளலாம். இதைவிட இளங்கலை, முதுகலை ஆசிரியர்கள் பதவி நிலைக்கு  ரூ.30 லட்சம் அல்லது ரூ.40 லட்சம் என லஞ்சம் கொடுத்து சேர்ந்து, அக்கறையற்ற தன்மையுடன் பள்ளிக்கு வந்து செல்வோர், பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கித் தருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
  • கல்வி ஒருவருக்குக் கற்றுக் கொடுப்பதன் நோக்கமே அவர் மற்றவருக்கு உதவி செய்வதற்காகத்தான். பள்ளிகளின் நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் சுவாரஸ்யமானது. அதாவது, அரசுப் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் குறித்து  பணக்கார ஆசிரியர்கள் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை;  ஆனால்,  தனியார் பள்ளிகளில் பணக்கார மாணவர்கள், பெற்றோருக்குப் பிடித்தவர்களாக ஏழை ஆசிரியர்கள் இருப்பார்கள்; ஆசிரியர் சரியாக பாடம் நடத்தவில்லை என்றால் அடுத்த  நாள் வகுப்பறைக்கே வந்து விடுவார்கள். இத்தனை முறைகேடுகளையும் கவனிக்க, கண்டிக்க அந்தந்த ஊர்களில் மாவட்டங்களில் அதிகாரிகள் உண்டு. அவர்களெல்லாம் இவற்றை ஆய்வு செய்வது இல்லையா என்று கேட்கலாம். அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் வேலைகள்; ஆய்வுக்கு வரும்போது விருந்து வைத்து  பரிசுப் பொருள்கள் அளிக்கப்படுவதால் பள்ளிகளின் குறைகளை பெரும்பாலான அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. பரிசுப் பொருள்கள் பெறுவது குறித்து வெட்கமோ அல்லது அவமானமோ அவர்களுக்கு ஏற்படுவதில்லை. அரசு பள்ளிக்கூடங்களில் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சைக்கிள் முதல் காலணி வரை விலையில்லா பொருள்களை மாணவர்களுக்கு அளிக்கின்றனர்.
  • ஆனால், குழந்தைகளுக்கு பொருத்தமில்லாத, மூச்சுத் திணறும் சீருடைகளை பெற்றோர் அணிவித்து  பெற்றோர் அனுப்புகின்றனர். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் மோகம் பெற்றோருக்கு என்று குறையும் எனத் தெரியவில்லை. வாழ்க்கையில் தங்களால் முடியாததை குழந்தைகளிடம் திணிக்கும் நோக்கத்தில், அவர்கள்  விரும்பாவிட்டாலும்கூட சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட உள்ள பள்ளியில் சேர்க்கும் பெற்றோரும் உள்ளன. இதற்கு பெற்றோரின் ஆங்கில மோகமும் காரணம். மனித மூளையின் அதிகமான வளர்ச்சி குழந்தையின் மூன்று வயது முதல் ஐந்து வயதுக்குள் அமைந்து விடுகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இப்போது குழந்தைக்கு மூன்று வயது நிறைவடைந்த உடனேயே பிரீகேஜி வகுப்பில் பெற்றோர் சேர்த்து விடுகின்றனர்; தொடர்ந்து எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படிக்க வைக்கின்றனர். இதனால் சுதந்திரத் தன்மையை இழக்கும் இந்தக் குழந்தைகள், காற்றோட்டம்-நல்ல குடிநீர்- கழிப்பிட வசதியில்லாத பள்ளிகளில் படிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், குறைந்த ஊதியத்தில் முழுமையான தகுதி ஏதும் இல்லாத ஆசிரியர்களிடம் இத்தகைய குழந்தைகள் நாள் முழுவதும் இருக்கும் துரதிருஷ்டவசமான நிலை இந்தியாவில் உள்ளது.
மழலையர் பள்ளிகள் 
  • ஜப்பானில் மழலையர் பள்ளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டடம் உண்டு.  அங்கு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் மிக அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு நியமிக்கப்படுகின்றனர். பல்வேறு திறன்களுடன் கூடிய ஜப்பானிய தலைமுறையை உருவாக்குவதற்கு அந்த நாடு முக்கியத்துவம் அளிக்கிறது. குழந்தைகள் எப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும், தூய்மையைக் கடைப்பிடித்து நோயின்றி ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வேண்டும் உள்ளிட்டவற்றுக்கு மழலையர் பள்ளி ஆசிரியர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். மேலும் மழலையர் பள்ளிகளில் நீச்சல் குளம் உண்டு. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கின்றனர். கடைசி வரை தண்ணீரைப் பார்த்து பயப்படும் தன்மையே குழந்தைகளுக்கு வராது. இந்தியா ஒரு தீபகற்ப நாடு; மூன்று பக்கமும் கடல் சூழ்ந்தது.
  • ஆனால் நம்மில் பத்து சதவீதம் பேருக்குக்கூட நீச்சல் தெரியாது. நீர்நிலைகளைக்  கண்டால் வெறித்துப் பார்ப்பார்கள். தண்ணீரில்  இறங்கப் பயப்படுவார்கள். ஒவ்வோரு குழந்தையையும் செறிவாக வடிவமைப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். அது கல்வியால்தான் முடியும். முதலில் தொண்டு என்று  தொடங்கி,  இன்று வணிகமாக மாறியிருக்கிறது கல்வி. மழலையர் பள்ளிகளில்  இடம்பிடிக்க அதிகாலை முதலே வரிசையில் நிற்போரைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. பள்ளிகள் மட்டுமே குழந்தைகளை சிறந்தவர்களாக உருவாக்கித் தருவதில்லை.  வீடுதான் சிறந்த  பள்ளிக் கூடம்; குழந்தையின் தாய்தான் சிறந்த ஆசிரியர் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
  • குடிமக்களை உழைப்பாளிகளாக அரசாங்கம் உருவாக்க வேண்டும்.  ஆனால்,  இப்போதைய கல்வி முறை பெரும்பாலும்  பொறுப்பற்ற குடிமக்களை அரசு உருவாக்குகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து செம்மையாக வழிநடத்தும் குடிமக்களாக இல்லாமல் ஒருவருக்கொருவர் அச்சப்பட்டு வாழும் நிலையே நீடிக்கிறது. பொறுப்பான வாழ்வு வாழ்ந்திட, வாழ வைத்திட ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
  • இன்று வணிகமயமாகவும் சீரற்ற முறையிலும் உள்ள கல்வியை மடைமாற்றி, அறிவார்ந்த மனிநேயம் மிக்க சமுதாயம் உருவாக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். கல்வி என்பது, அறியாமை அகற்றும் விளக்கு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி(19-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories