- “ஐயா, தென்னாப்பிரிக்காவில் நீங்கள் நடத்திய சத்தியாகிரகத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் நீங்கள் அதுபோன்ற சத்தியாகிரகம் நடத்த வேண்டிய இடங்களுள் ஒன்றுதான் எங்கள் சம்பாரண் பகுதி. ஆங்கிலேயே நிலச்சுவான்தாரர்களிடம் மாட்டிக்கொண்டு அவுரி விவசாயிகள் படும் துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து போராடி எங்களுக்கு விடிவு பிறக்க வழிசெய்ய வேண்டும்” என்று கெஞ்சிய ராஜ்குமார் சுக்லாவை காந்தி பார்த்தார்.
- 1916 டிசம்பர் மாதத்தில் லக்னௌவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின்போது காந்தியைப் பார்த்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்த ராஜ்குமார் சுக்லா தன் முயற்சியில் வெற்றியும் கண்டுவிட்டார். எனினும், சம்பாரணை நேரில் வந்து பார்த்து அங்கு நிலைமை என்ன என்பதை முழுக்க அறிந்துகொள்ளாமல் செயலில் இறங்க முடியாது என்றும், அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை என்றும் சொல்லிவிட்டார் காந்தி. அதன் பிறகு, நான்கு மாதங்களுக்கும் மேலாக காந்தியை அவர் செல்லும் இடங்களிலும் கடிதங்கள் வாயிலாகவும் விடாமல் பின்தொடர்ந்தார் சுக்லா. அதைத் தொடர்ந்து, கல்கத்தா வந்திருந்த காந்தியை அழைத்துக்கொண்டு ஏப்ரல் 7 அன்று சம்பாரண் புறப்பட்டார் சுக்லா.
போராட்டமே நடத்தாத போராட்டம்
- சம்பாரண் சென்ற பிறகு அவர் முக்கியமான பல விஷயங்களைச் செய்தார். முதலில் அங்குள்ள நிலவரத்தைச் சீர்தூக்கிப் பார்த்தார்; தன்னுடன் ஒருங்கிணைந்து செயல்பட அங்குள்ள படித்தவர்களையும் பிற இடங்களிலுள்ள தன் சகாக்களையும் அழைத்துக்கொண்டார்; ஒன்றாய் உண்டு உறங்கி எல்லா வேலைகளையும் சமமாக எல்லோரும் செய்துகொள்ளும் கட்டமைப்பை உருவாக்கினார்; சுகாதார-கல்வி வசதிகளை அங்கே ஏற்படுத்தினார். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்தார் என்பதுதான் முக்கியமானது. காந்தி எந்த ஒரு போராட்டத்தில் இறங்கினாலும் அதில் கழிப்பறையை ஒருவர் தானே சுத்தப்படுத்திக்கொள்வது முதல் சிறை செல்வது வரை எல்லாமே சம இடம் பெறும்.
- கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு சம்பாரணில் காந்திக்கு வெற்றி கிடைத்தது. விவசாயிகளின் சார்பாக காந்தி முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சம்பாரண் போராட்டத்தின் அழகே போராட்டமே நடத்தாத போராட்டம் என்பதுதான்; மக்களைச் சரியாக ஒருங்கிணைத்தல், முறையான பேச்சுவார்த்தைகள் போன்றவற்றை நடத்தியதன் மூலம் வெற்றி பெற்ற போராட்டம் அது. சம்பாரண் மக்களிடையே உள்ள அச்சத்தை அகற்றி அவர்களைத் தன்னிடம் பேச வைத்ததும், பெருந்திரளாக நீதிமன்றத்துக்கு வரச் செய்ததும் காந்தியின் முதல் வெற்றி! ஏழை விவசாயிகள் தமக்குப் பயப்படாமல் நீதிமன்றம் வரை வந்திருக்கிறார்கள் என்பதே ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சம்பாரண் போராட்டத்தைத் தொடர்ந்து மேலும் பல போராட்டங்கள் நடத்தி இந்தியர்கள் மனதிலுள்ள அச்சத்தை விரட்டித் துணிவை விதைப்பதில் காந்தி கணிசமான வெற்றியைப் பெற்றார்.
- சம்பாரண் சத்தியாகிரகம் வெற்றிகரமாக நிறைவுபெற்றவுடன் காந்தியால் சற்றும் ஓய்வெடுக்க முடியாதவாறு 1918 பிப்ரவரியில் மற்றொரு போராட்டத்துக்கு - இந்த முறை தொழிலாளர்களுக்காக - அழைப்பு வந்தது. காந்தியின் மீது மிகுந்த அன்புகொண்டவரும், ஆலை அதிபர் அம்பாலால் சாராபாயின் தங்கையுமான அனசூயாபென் சாராபாயிடமிருந்து வந்த அழைப்பு அது.
முதன்மையான விசுவாசம் தொழிலாளர்களுக்கே!
- அனசூயாபென்னின் அண்ணன் அம்பாலால் சாராபாய்தான் ஆலை அதிபர்களின் தலைவர். காந்தியின் ஆசிரமம் இக்கட்டான தருணத்தில் இருந்தபோது பெரும் நிதியுதவி செய்தவர். அப்படிப்பட்ட அம்பாலாலையே எதிர்த்து காந்தியும் அம்பாலாலின் சகோதரியும் போராட வேண்டிய சூழல். எனினும் நண்பர், புரவலர் என்பதையெல்லாம் தாண்டி, தனது முதன்மையான விசுவாசம் தொழிலாளர்களுக்கே என்ற முடிவு காந்தியிடம் இயல்பாகவே இருந்தது.
- அகமதாபாதுக்குத் திரும்பிவந்த காந்தி, தொழிலாளர்களின் நிலையை ஆராய்ந்துபார்க்கிறார். அவர்களின் வறிய சூழல் அவர்களது கோரிக்கையை நியாயப்படுத்துகிறது என்று காந்தி கருதினார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆலை அதிபர்களுக்கு காந்தி அழைப்புவிடுத்தார். அவர்கள் அதற்கு இணங்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்.
- தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை யாரும் வேலைக்குச் செல்வதில்லை என்ற உறுதிமொழியை காந்தி அனைத்துத் தொழிலாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, வன்முறை சிறிதும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். வேலைநிறுத்தம் ஆரம்பித்தும்கூட ஆலை அதிபர்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கிவரவில்லை. எனவே, போராட்டம் இழுத்துக்கொண்டேபோனது. தினசரி போராட்டக்களத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வந்தது. இதற்கிடையில் ஆலை அதிபர்கள் ஆசைவார்த்தை காட்டித் தொழிலாளர்கள் பலரையும் வேலைக்கு இழுத்தனர்.
- ஆலை அதிபர்களின் மனங்களை வெல்வதற்கு முன்பு தொழிலாளர்களின் மனங்களை வெல்வது முக்கியம் என்று காந்தி கருதினார். ஆகவே, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் காந்தி.
மனதை மாற்றிய தார்மீக அழுத்தம்
- ஆலை அதிபர்களின் பேச்சுக்கு மயங்கி அவர்கள் பக்கம் சென்றவர்களும் காந்தியின் உண்ணாவிரதத்துக்குப் பிறகு திரும்பிவந்து போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். காந்தியின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய தார்மீக அழுத்தம் ஆலை அதிபர்களின் மனதை மாற்றியது. பேச்சுவார்த்தைக்கு இணங்கினார்கள். 21 நாட்கள் நீடித்த போராட்டமும் மூன்று நாட்கள் நீடித்த உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்தன. தொழிலாளர்கள் கேட்டது மாதம் ரூ. ஆலை அதிபர்கள் தரத் தயாராக இருந்தது ரூ.28. சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின், இரண்டுக்கும் நடுவில் ரூ.32 வழங்குமாறு காந்தி பரிந்துரைக்க, அந்தப் பரிந்துரை இரண்டு தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- தன் ஆசிரமம் தொடர்ந்து நடத்த உதவிய முதலாளி மட்டுமல்லாமல், தனது சீடரைப் போன்றவர் அம்பாலால். அவரை எதிர்த்துத் தொழிலாளர்களுக்காகக் களத்தில் நின்றார் காந்தி. அது மட்டுமல்லாமல் அம்பாலாலுக்கு எதிராக அவரது சகோதரியும் காந்தியுடன் களத்தில் நின்றார். அம்பாலாலின் மனைவி சரளாதேவியின் ஆதரவும் அந்தப் போராட்டத்துக்குக் கிடைத்தது. தன் நண்பர்களை எதிர்த்தே அவர்களின் குடும்பத்தினர் ஆதரவுடன் இப்படியெல்லாம் சத்தியாகிரகம் செய்திருக்கிறார் காந்தி!
- சம்பாரண் சத்தியாகிரகம், அகமதாபாத் சத்தியாகிரகம் இரண்டும் காந்தி இந்தியாவுக்கு வந்த பிறகு இந்தியாவின் இரு வேறு திசைகளில் வெற்றிகரமாக நடத்திய சத்தியாகிரகங்கள். பின்னாளில் இந்தியா முழுக்க அவர் விரிவுபடுத்தும் எல்லாக் கூறுகளையும் கொண்ட சத்தியாகிரகங்கள் அவை.
நன்றி: இந்து தமிழ் திசை (15-05-2019)