- இன்று கல்வி கற்பது என்பதே ஆங்கிலம் கற்பதுதான் எனும் சூழல்தான் நிலவுகிறது, உண்மையான சிக்கல் என்னவென்றால், நம் மக்களுக்குக் கல்வி என்றால் என்னவென்றே புரியவில்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குகளை மதிப்பீடு செய்வதுபோலோ, நிலத்தை மதிப்பீடு செய்வதைப் போலோ நாம் கல்வியையும் மதிப்பீடு செய்கிறோம். மாணவர்கள் மேலும் பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமோ அதை வழங்குவதே கல்வி என்கிறோம் நாம்… போலிகளை ஒரு இனமாக உருவாக்கும் எந்த நாடும் ஒரு தேசியமாகப் பரிணமிக்க முடியாது.
…
கல்வி
- பாடப் புத்தகங்கள் மூலமே அனைத்தையும் கற்பித்துவிடலாம் எனில் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பற்றுப் போய்விடும். பாடப் புத்தகங்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர், அவரது மாணவர்களிடத்தில் சுயசிந்தனையை விதைக்க முடியாது…
- பள்ளி என்பது வீட்டுச் சூழலின் விஸ்தரிப்பாகவே இருக்க வேண்டும். மிகச் சிறந்த விளைவுகளை ஏற்படுத்த பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைகளுக்குக் கிடைக்கும் மனப்பதிவுகளில் ஓர் ஒத்திசைவு அவசியம் வேண்டும். வேற்று மொழிகளில் பயிலும்போது இந்த ஒத்திசைவு உடைபடுகிறது. இப்படி உடைப்பவர்கள், அவர்களின் நோக்கம் நேர்மையானதாக இருந்தாலும்கூட, அவர்கள் மக்களின் எதிரிகளே.
…
கிராமியப் பொருளாதாரம்
- கிராமியப் பொருளாதாரத்தைச் சீராக்கி அதற்கு உரிய கல்வியை ஏற்படுத்துவதே நாட்டை அழிவிலிருந்து காக்க ஒரே வழி. கிராமப்புறத் தொழில்கள் சார்ந்தே மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்… வேளாண்மைக் கல்லூரிகள் அப்பெயருக்குத் தகுதியானவையாக இருக்க வேண்டுமெனில், தற்சார்பை அடைய வேண்டும். வேளாண்மைப் பட்டதாரிகள் சிலரோடு எனக்கு வருத்தமூட்டும் அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.
- அவர்களது அறிவு மேலோட்டமானது. நேரடி அனுபவமற்றவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களது பயிற்சியைத் தற்சார்புடைய பண்ணைகளில் அமைத்துக்கொண்டு நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முன்வருவார்களேயானால், பட்டப் படிப்பு முடித்த பிறகு, அவர்களைப் பணியில் அமர்த்துபவர்களின் செலவில் பட்டறிவு பெற வேண்டிய அவசியம் நேராது.
நன்றி: இந்து தமிழ் திசை (24-07-2019)