- தன்னிறைவு எவ்விதம் மனிதனுக்குச் சிறந்ததாகிறதோ அதேபோல பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வதும் சிறந்த காரியமாக இருக்க வேண்டும். சமூகமாகக் கூடி வாழ்பவனே மனிதன். சமூகத்துடன் பரஸ்பர உறவு இல்லாமல், பிரபஞ்சத்துடன் ஒன்றாகிவிடுவதையோ, தான் என்ற அகந்தையை அடக்குவதோ அவனால் அடைய முடியாது.
தகுதி
- சமூகத்தில் பரஸ்பரம் பிறர் உதவியை நாடி வாழ வேண்டியிருப்பது, தனது நம்பிக்கையைச் சோதித்துக்கொள்வதற்கும், உண்மையாகிய உரைகல்லில் தன் தகுதியைச் சோதித்துக்கொள்வதற்கும் உதவுகிறது. உடன் இருக்கும் மனிதர்களின் உதவி ஒன்றுமே இல்லாமல் வாழ முடியும் என்ற நிலைமையில் ஒருவன் இருந்தால், முற்றிலும் அப்படிச் செய்துகொண்டுவிட அவனால் முடிந்துவிட்டால், அவன் கர்வம் பிடித்தவனாகவும் ஆகிவிடுவான். சமூகத்தின் உதவியுடன் அவன் வாழ வேண்டியிருப்பது காருண்யத்தின் படிப்பினையை அவனுக்கு போதிக்கிறது. ஒரு மனிதன் தன்னுடைய அத்தியாவசியமான தேவைகளையெல்லாம் தானேதான் தேடிக்கொண்டாக வேண்டும் என்பது உண்மையே.
உலகமே என் குடும்பம்
- ஆனால், தன்னிறைவு என்பதை, சமூகத்திலிருந்து தன்னைத் தனிமையாக்கிக்கொண்டுவிடுவதில் போய் முடிந்துவிடுமானால், எனக்கு அது பாவமாகவே ஆகிறது என்பதும் உண்மை. பருத்தியைச் சாகுபடி செய்து நூலாக நூற்பது வரையிலுள்ள எல்லா முறைகளிலும்கூட மனிதன் பிறர் உதவியின்றித் தானே எல்லாவற்றையும் செய்துகொண்டுவிட முடியாது.
- அவன் ஏதாவது ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தினரின் உதவியை நாடித்தான் ஆக வேண்டும். தன் குடும்பத்தின் உதவியைப் பெறுகிறவன் தன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் உதவியை ஏன் பெறக் கூடாது? அப்படியில்லையானால், ‘உலகமே என் குடும்பம்’ என்ற முதுமொழியின் கருSத்துதான் என்ன?
நன்றி: இந்து தமிழ் திசை (15-05-2019)