TNPSC Thervupettagam

காந்தி 150: காந்தியின் வரலாற்று நடைப்பயணம்

July 17 , 2019 1998 days 1349 0
  • “தாக்குங்கள் என்று திடீரென்று உத்தரவு வரவே, ஏராளமான போலீஸ்காரர்கள் முன்னே செல்கிறார்கள். உப்பு ஆலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சத்தியாகிரகிகளின் தலை மீது லத்தியால் தாக்குகிறார்கள். சத்தியாகிரகிகளில் ஒருவர்கூட அடியைத் தடுப்பதற்குக் கையை உயர்த்தவில்லை. மண்டை உடைந்து ரத்தம் தெறிக்க அப்படியே சரிகிறார்கள். அடுத்து வரும் வரிசைக்கும் தெரியும் தாங்கள் தாக்கப்படுவோமென்று. அவர்களும் முன்னே செல்ல, தாக்கப்பட்டு வீழ்கிறார்கள். உதவிக்கென்று நின்றிருக்கும் சத்தியாகிரகிகள் கீழே வீழ்ந்தவர்களைத் தூக்கிச் செல்கிறார்கள். எந்தக் கைகலப்பும் இல்லை, போராட்டமும் இல்லை” என்று எழுதுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளர் வெப் மில்லர்.
  • அது 1930-ம் ஆண்டு. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக உள்ளுக்குள் பொருமிக்கொண்டே இருந்தார்கள். பூரண சுதந்திரம் என்ற பேச்சு பல ஆண்டுகளாக இருந்தபோதிலும் இன்னும் அது கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் காந்திக்குக் கிடைத்த ஒரு ஆயுதம் உப்பு.
  • கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரம் இருந்த காலத்திலேயே உப்பின் மீது மிக அதிகமான வரி இருந்தது. 1858-ல் இந்தியா பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நேரடி ஆளுகைக்குக் கீழ் வந்தது. அப்போது அவர்களின் வருமானத்தில் 10% இந்திய உப்பால் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தங்களைத் தவிர உப்பை வேறு யாரும் உற்பத்தி செய்வதோ, உடமையாக வைத்திருப்பதோ குற்றம் என்று சட்டம் இயற்றவும் செய்தார்கள்.
உப்பு எனும் உரிமை
  • மனிதர்களுக்குக் காற்று, நீருக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது உப்பு என்று கருதிய காந்தி, அந்த உப்பு ஒவ்வொரு ஏழை இந்தியரின் சுதந்திர உரிமையாக இருக்க வேண்டும் என்றார். இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய 1930-க்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் தன் உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதை நிறுத்திவிட்டார்.
  • உப்புக்காகப் போராட வேண்டும் என்று முடிவெடுத்தாலும் அவர் முக்கியமான காரியங்கள் செய்யும்போது ஆழ்மனதின் குரலை எதிர்பார்ப்பார். ஆறு வார காலமாகக் காத்திருந்த காந்திக்கு ஒருவழியாக ஆழ்மனதின் குரல் கேட்டுவிட்டது. அதை அடுத்து வைசிராய் இர்வின் பிரபுவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்.
  • அந்தக் கடிதத்தில் இந்தியர்களின் துயர நிலை, விவசாயிகள் படும் துயரம், குறிப்பாக உப்பு வரி எனும் கொடுமை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். உப்பு வரியை நீக்குதல் உள்ளிட்ட தன் வேண்டுகோளை ஏற்கவில்லை என்றால் தான் சத்தியாகிரகத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டாத தொனியில் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதற்கெல்லாம் முறையான பதில் கிடைக்காததை அடுத்து மார்ச் 12 அன்று உப்பு சத்தியாகிரகம் நடைபெறும் என்று காந்தி அறிவிக்கிறார்.
  • காந்தியின் ஆசிரமத்திலிருந்து சில நாட்கள் நடந்தால் பாதல்பூர் கடற்கரை வந்துவிடும். ஆனால், இந்த சத்தியாகிரகம் ஒரு மாபெரும் செய்தியாக இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அமைய வேண்டும் என்று காந்தி முடிவெடுத்தார். அதனால்தான், நீண்ட நடைப்பயணமாக அமைய வேண்டும் என்று முடிவெடுத்து 240 மைல்கள் தொலைவிலுள்ள தண்டி கடற்கரையைத் தேர்ந்தெடுத்தார்.
பயணம் தொடங்கியது
  • மார்ச் 12 அன்று நடைப்பயணம் தொடங்கியது. காந்தியுடன் தண்டி செல்வதற்காக 78 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குஜராத்திலிருந்து 31 பேர், மகாராஷ்டிரத்திலிருந்து 13 பேர், தமிழ்நாடு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலிருந்தும் சிலர் அதில் இருந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், சில முஸ்லிம்கள், ஒரு கிறித்தவர் உள்ளடங்கிய குழு அது.
  • அப்போது காந்திக்கு வயது மூட்டுவலியால் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். எனினும், மாபெரும் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என்ற உற்சாகமே அவரைச் செலுத்திக்கொண்டிருந்தது. போகும் வழியெல்லாம் மக்கள் மலர்களையும் இலைகளையும் இறைத்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் நின்று காந்தி உரையாற்றினார். உப்பு சத்தியாகிரகம் என்றால் உப்பை மட்டுமே மையப்படுத்தியதாக இல்லாமல் அவரது செயல்திட்டத்தில் கதர், தீண்டாமை ஒழிப்பு, மத ஒற்றுமை, மது ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வி போன்றவற்றையும் சேர்த்துக்கொண்டார். வழியில் 105 வயது மூதாட்டி காந்தியை ஆசீர்வதித்து நெற்றியில் பொட்டு வைத்தார். சுதந்திரத்தை அடையாமல் திரும்பிவரக் கூடாது என்று கட்டளையிட்டார்.
  • நடைப்பயணம் தொடங்கி 24-வது நாளில் அதாவது ஏப்ரல் 6, 1930-ல் தண்டி கடற்கரையை காந்தி அடைந்தார். அங்கு கடல் அலை ஒதுக்கியிருந்த உப்பை அள்ளி, கையை உயர்த்தினார். அது, இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அஸ்தமனத்துக்கு அழுத்தமாக அடிகோலிய செயலாகவே வரலாற்றாசிரியர்களால் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்த அதிர்வுகள்
  • தண்டியில் மட்டுமல்ல, அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் காந்தியின் அழைப்பை ஏற்றுப் பல்வேறு தலைவர்களும் சாதாரண மக்களும் உப்பைக் காய்ச்சினார்கள். வேதாரண்யத்தில் நூறு பேருடன் சென்று ராஜாஜி உப்பை அள்ளும்போது கைதானார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஜவாஹர்லால் நேரு அலாகாபாதில் உப்பு விற்றுக் கைதானார். அவருக்கு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நாடெங்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதானார்கள். காங்கிரஸ் அலுவலகங்களிலெல்லாம் உப்பு விற்கப்பட்டது. தண்டியில் காந்தி அள்ளிய உப்பை டாக்டர் கனுகா ரூ.1,600-க்கு வாங்கிக்கொண்டார்.
  • தண்டி யாத்திரையைத் தொடர்ந்த மிக முக்கியமான நிகழ்வு தர்ஷனா உப்பு யாத்திரை. மே 5 அன்று காந்தி கைதானதற்குப் பிறகு நடந்த நிகழ்வு இது. அப்பாஸ் தயாப்ஜியும் கஸ்தூர்பா காந்தியும் தலைமையேற்று குஜராத்தில் உள்ள தர்ஷனா உப்புத் தொழிற்சாலையை நோக்கிச் சென்றார்கள். அங்கு தயாரிக்கப்படும் உப்பைக் கைப்பற்றுவதுதான் திட்டம். அந்த இடத்தைச் சென்றடையும் முன்னே அப்பாஸ் தயாப்ஜியும் கஸ்தூர்பா காந்தியும் கைதுசெய்யப்பட நடைப்பயணம் சரோஜினி நாயுடு, மௌலானா அபுல்கலாம் ஆசாதின் தலைமையில் தொடர்கிறது. அவர்களைப் பின்தொடர்ந்த தொண்டர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைப் பற்றிதான் வெப் மில்லர் எழுதினார். வெப் மில்லர் எழுதியது மேற்குலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை காந்தியையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் இளக்காரமாகவே பார்த்துவந்த மேற்குலகம் அப்போதுதான் விழித்துக்கொண்டது.
  • உலகினரின் கண் முன்னே தனது தார்மீகத்தை இழந்து பிரிட்டன் நின்றது. காந்தியின் மந்திர அழைப்புக்கு இந்தியா எப்படித் தன் ரத்தத்தைச் சிந்தவும் தயாராக இருக்கிறது என்பதை உலகம் தெரிந்துகொண்ட அன்றுதான் இந்திய சுதந்திரத்துக்கான முதல் வெளிச்சம் வந்து விழுந்தது.

நன்றி: இந்து தமிழ் திசை (17-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories