- இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கார் விற்பனை வழக்கத்தைவிடக் குறைந்துள்ளது பலருக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கார் விற்பனை மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
மகிழுந்து
- பல வகையான உதிரிப் பொருள்கள்-டயர்கள், மின்சாதனப் பொருள்கள், கண்ணாடிப் பொருள்கள், உலோகப் பொருள்கள், கணினி மென்பொருள்கள்-எனப் பலவும் சேர்ந்து உருவாவதுதான் இன்றைய நவீன கார் என்னும் மகிழுந்து! இந்தியா முழுவதும் ரூ.35,000 கோடி மதிப்புள்ள கார்கள் விற்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது.
வெவ்வேறு மாநிலங்களிலுள்ள பலதரப்பட்ட தொழிற்சாலைகளின் தயாரிப்பை இது பாதிக்கக் கூடும்.
- இது, நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதைக் காட்டுவதாகக் கருத்துகள் வெளியாகியுள்ளன. விற்பனை அதிகரித்துக்கொண்டே சென்றால், எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், மேலே செல்லும் விற்பனை எண்ணிக்கை என்றாவது ஒரு நாள் கீழே இறங்கித்தானே ஆகும்? அது இயற்கையின் நியதி அல்லவா?
கார் விற்பனை குறைந்தால் பல விதமான தொழிற்சாலைகளும் பாதிக்கப்படும்.
- காரை பழுது பார்க்கும் சிறிய, பெரிய நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை. ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனம் பல ஆண்டுகள் கார் தயாரிப்பில் ஈடுபட்டு, விற்பனையை உயர்த்த முடியாமல், ஏற்றுமதிக்கு மட்டுமே நம் நாட்டில் கார் தயாரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
- இந்தச் சூழ்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கியா மோட்டாரும் , குஜராத்தின் ஹலோல் அருகே எம்ஜி மோட்டாரும் தொழிற்சாலைகள் அமைத்து இன்னும் சில மாதங்களில் கார் விற்பனையைத் தொடங்க இருக்கின்றனர். அவர்களின் நிலையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நுகர்வோர்
- நம் நாட்டில் யார் கார் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம். முதல் முறையாகக் கார் வாங்குபவர்கள், பொதுவாக, சிறிய கார்களையே வாங்குவர். ஏனென்றால், அவர்களுக்கு சிறிய கார் மூலம் அனுபவம் வேண்டும்.
மேலும், வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்துவிட்டோம் என்பதை மற்றவர்களுக்கு ஒருவர் அறிவிக்கும் நோக்கத்திலேயே கார் வாங்குவதை நாம் பார்க்கலாம். இது இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பொருந்தும்.
- சிறிய குடும்பம் உடையவர்கள், இரண்டாவதாக வாங்கும் கார் சற்றே பெரியதாக இருக்கும். சொந்தமாகத் தொழில் செய்து முன்னேறியவர்கள் பெரிய கார்களையே வாங்குவர். மிகப் பெரிய செல்வந்தர்கள்தான் ஆடம்பரமான கார்களை வாங்குவார்கள். அப்படியிருந்தும், வாங்கும் கார்கள் அனைத்தும் நம்முடைய சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றனவா?
- எல்லாத் தெருக்களிலும் பல வகையான கார்கள் சற்றும் அசையாமல், மாதக் கணக்கில், போடப்பட்ட உறையுடன் நிற்பதைப் பார்க்கிறோம். அப்படி கார்கள் நின்றுகொண்டே இருந்தால், அவை தேவையில்லை என்றுதானே அர்த்தம்?
- யாருக்குக் கார் கட்டாயமாகத் தேவை? தினமும் குறைந்தது 50 அல்லது 60 கி.மீ. பயணிக்கவில்லையென்றால், அவருக்குத் தனி கார் தேவையிருக்காது. புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து நல்ல நிலைக்கு வரும் வரை கார் தேவைப்படலாம்; பெரும்பாலான மருத்துவர்கள் கார் வைத்திருப்பார்கள், ஓட்டுநருடன்...அதுதான் அவர்களுக்கு நல்லது; சாலையில் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருக்கலாம்.
சாலைகள்
- தற்போதுள்ள தனியார் வாடகை கார் நிறுவனங்கள் இல்லாத காலம் அது. என்றோ ஒரு நாள் உபயோகத்துக்காக நிறைய பணம் கொடுத்து (அதற்கு வட்டியும் கட்டி...), தரமற்ற பல சாலைகளில் மிக்க சிரமத்துடன் ஓட்டி, அதற்கு நிற்க ஓர் இடம் கண்டுபிடித்து, நான் செல்லவேண்டிய கடையிலிருந்து பல கி.மீ. தூரத்தில் காரை நிறுத்தினீர்கள் என்று மனைவியின் சொல்லையும் கேட்டுக்கொண்டு அவதிப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அந்த வலி.
- இன்றைய போக்குவரத்தில் தினமும் கார் ஓட்டாதவர்கள், கார் ஓட்டவே சிரமப்படுவதைப் பார்க்கிறோம். எப்படிவேண்டுமானாலும் கார் ஓட்டலாம் என்னும் நிலைமை சாலைகளில் நீடிக்கும்போது, என்றாவதொரு நாள் கார் ஓட்டுவது கடினமான செயல் என்பதில் சந்தேகமில்லை. தினமும் கார் ஓட்டுபவர்களுக்கு அது பழகிவிடும்; பின்னர், அதுவே இயல்பாகிவிடும்.
- வெளிநாட்டில் வசிக்கும் இந்திய இளைஞர்கள், தங்களுடைய வயதான பெற்றோருக்குக் கார் வாங்கிக் கொடுக்கின்றனர். இதுவும் தேவையற்றதாகவே தோன்றுகிறது; மேலும், மருத்துவ உதவி தேவைப்படும் சிலரும் ஓட்டுநருடன் கார் வைத்திருப்பார்கள். ஓட்டுநர் எப்போதும் இருப்பதால், பல சமயங்களில் காரை தேவையற்ற பயணங்களில் ஈடுபடுத்துவர். இவர்களும் தனியார் வாடகை கார்களைப் பயன்படுத்தினால், சாலைகளில் இடம் கிடைக்கும்.
- பல பழைய குடியிருப்புகளில் கார் நிறுத்த இடம் இருப்பதில்லை. அவர்கள் தங்களுடைய கார்களை வீட்டுக்குவெளியே, சாலைகளில் நிறுத்தி விடுகின்றனர்; ஏனெனில், நகராட்சி வாடகை வசூலிப்பதுமில்லை, தெருவில் கார் ஏன் நிற்கிறது என்று கேட்பாருமில்லை.
சாலைகளில் ஏற்கெனவே பல கார்கள் அசையாமல் நின்றுகொண்டிருக்கின்றன.
- செல்லிடப்பேசியில் அழைத்தால் சில நிமிஷங்களிலேயே நமக்குச் செல்லவேண்டிய இடத்திற்கு வாடகை கார் வருகிறதென்றால், கார் விற்பனை குறையாமல் எப்படி அதிகரிக்கும்? தனியார் வாடகை கார்கள் இருக்கும் நிலையில், அதிக பணத்தை முதலீடு செய்து காருக்கு காப்பீடு செலுத்தி, அதற்கான பராமரிப்பும் செய்து, அந்தக் காரில் ஒரு கீறலும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமா என்ன? சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, வாடகைக் கார்களை அவசியத்துக்குப் பயன்படுத்துவதே நல்லது.
நன்றி: தினமணி (18-06-2019)