TNPSC Thervupettagam

காற்றில் கரையும் தேர்தல் சீர்திருத்த முயற்சிகள்!

April 5 , 2019 2059 days 1318 0
  • விடுதலை பெற்ற உடனேயே ‘ஒரு நபர் - ஒரு வாக்கு’, ‘ஒரு வாக்கு - ஒரு மதிப்பு’ என்று பாலின பேதமற்ற அரசியல் சமத்துவம் இந்தியாவில் நிலைநிறுத்தப்பட்டது.
  • அமெரிக்காவில் ஆப்ரிக்க-அமெரிக்க இன மக்களுக்கு 1962-ல்தான் வாக்குரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனில் பெண்களுக்கு வாக்குரிமை 1928-ல்தான் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்தது. உலகின் மிகப் பெரிய, வளர்ச்சியடைந்த நாடுகளும்கூட அதுவரையில் சிந்தித்திராத வகையில் இந்தியாவின் அரசியல் சமத்துவம் செயல்பட்டிருக்கிறது என்பது குறித்து நாம் மகிழ்ச்சியடையலாம்.
  • அதேவேளையில், தேர்தல் நடைமுறைகளின் குறைபாடுகள் சரிசெய்யப்படவில்லை என்றால், ஜனநாயகக் கட்டமைப்பே உருக்குலைந்துபோய்விடும் அபாயம் இருக்கிறது.
  • வி.எம்.தார்குண்டே கமிட்டி(1974), தினேஷ் கோஸ்வாமி கமிஷன்(1990), இந்திரஜித் குப்தா கமிஷன்(1998) ஆகியவை தேர்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைத்தன. ‘வணிக நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று அரசியல் கட்சிகள் செயலாற்றுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று தினேஷ் கோஸ்வாமி கமிஷன் கூறியதற்கு நேர்மாறாக நன்கொடை கொடுப்பவர்களின் அடையாளத்தையே மறைத்துவிடும் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்
  • 1952 முதல் 2014 வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்ச வாக்குகள் கிடைத்தது 1984-ல்தான். இந்திரா படுகொலையை அடுத்து நடந்த அந்தத் தேர்தலில்தான் 10% வாக்குகள் கிடைத்தன. பாஜகவுக்கு 2014-ல் கிடைத்த 31.34% வாக்குகள்தான் அதிகபட்சம். ஆக, எதிர்ப்பைக் காட்டிலும் ஆதரவு குறைவாக இருந்தாலே ஆட்சி அமைக்க முடியும் சூழல் இங்கே உள்ளது. இது ஆளுங்கட்சிகளுக்கு எதிராக மக்கள் பதிவுசெய்திருந்த எதிர்ப்பு வாக்குகள் மதிப்பிழப்பதையே காட்டுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பலைகள் இருந்தாலும்கூட, பெரும்பான்மை மக்களின் எண்ணங்கள் மதிப்பிழக்கின்றன என்பதையே இந்தத் தேர்தல் முறை பிரதிபலிக்கிறது.
  • இந்தப் பின்னணியில்தான், ‘விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை’ முக்கியத்துவம் பெறுகிறது. வேட்பாளர்களையும் கட்சிகளையும் வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் பட்டியல் முறை அமலில் உள்ள ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளிலும்கூட இரண்டு அல்லது மூன்று கட்சிகளின் கூட்டணிகள் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டு ஆட்சியில் அமர்வதைக் காண்கிறோம். இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையையே பின்பற்றிவருகின்றன என்பதும், மனித வளர்ச்சிக் குறியீடுகளில் இந்த நாடுகளில் பெரும்பாலானவை முன்னணியில் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது.
இடதுசாரிகளின் கோரிக்கை
  • மார்ச் 22, 2017 அன்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இது குறித்து விரிவான உரையாற்றியிருந்தார். “இன்றைய நிலைமை சரிசெய்யப்பட வேண்டுமானால் பகுதியளவிலாவது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைக்கு நாம் மாற வேண்டும். பல்வேறு மொழி, கலாச்சார வேறுபாடுகள் கொண்ட இந்தியாவில் அனைவருமே நாடாளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். இது நியாயமானதும்கூட.
  • இதை மனதில் கொண்டு இப்போதுள்ள மக்களவைக்கான 542 இடங்களை சரிபாதியாக அதாவது 271-ஆகக் குறைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் வாக்காளர்கள் இரண்டு வாக்குகளை அளிக்க வேண்டும். ஒரு வாக்கு அவர் விரும்பும் அரசியல் கட்சிக்கும், மற்றொன்று அத்தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் ஒருவருக்கும் அளிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் தங்கள் சார்பில் யாரை மக்களவைக்குப் பரிந்துரைக்கிறது என்ற பட்டியலைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட வேண்டும். ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் சதவீத அடிப்படையில் அந்தப் பட்டியலிலிருந்து வரிசைப்படி நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.
  • இந்தப் பிரதிநிதித்துவ முறையில் இரண்டு வகையான பயன்கள் உண்டு. சுமார் 20 ஆண்டு காலமாகக் கிடப்பில் இருந்துவரும் பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது வேட்பாளர் பட்டியலில் பின்பற்ற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க முடியும்.
  • இரண்டாவதாக பணபலம், ஆள்பலம், சாதி, மதரீதியான ஆதிக்கம் வழியாக வாக்குகளைப் பெற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கட்டுப்படுத்த முடியும். மக்களும் தங்கள் சரிபாதி வாக்குகளைப் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் கொள்கைத் திட்டங்களுக்காகத்தான் அளிக்கப்போகிறார்கள். இந்த முறையில் தனிநபர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு அதிகரிக்கும்.
நம்பகமான தேர்தல் நன்கொடை
  • மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதுபோலவே அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகள் குறித்த வெளிப்படைத் தன்மையும் வேண்டும்.
  • இந்திரஜித் குப்தா ஆணையம் பரிந்துரைத்ததைப் போல தனியார்ப் பெருநிறுவனங்கள், மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக நிதி அளிக்காமல் அரசிடம் அளிக்க வேண்டும். அதைத் தேர்தல் ஆணையத்தின் வாயிலாகவோ அல்லது வேறெந்த முகமை மூலமாகவோ அரசியல் கட்சிகளுக்கு வாகனங்கள், ஓட்டுநர்கள், எரிபொருள் போன்றவற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேற்கத்திய நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று தள்ளிப்போடுவது ஜனநாயகத்தில் பின்னடைவு உண்டாக்கவே செய்யும்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories