TNPSC Thervupettagam

குடிமைச் சமூகமும் தன்னாட்சியும்

March 13 , 2019 2094 days 1377 0
  • இந்தியாவில் தற்போது குடிமைச் சமூகங்கள் தன்னெழுச்சியாக அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி ஊழலுக்கு எதிராகவும், இயற்கை வளங்கள் சுரண்டலுக்கு எதிராகவும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் நடத்தும் போராட்டங்களை மேற்கத்திய சமூகவியல் அறிஞர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
  • இதனை முறையாகப் புரிந்து ஊடகங்களும், மத்தியதர வர்க்கமும், அறிவு ஜீவிகளும் குடிமைச் சமூகங்களுக்கு ஆதரவு அளித்தால் மகாத்மா காந்தி முயன்று உருவாக்கிய குடிமைச் சமூகம் விழிப்புணர்வு அடைந்து, பக்குவப்பட்டு, மக்களாட்சியை தூய்மைப்படுத்தி, புதிய திசைக்குச் செல்ல முயற்சிக்கும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். குடிமைச் சமூகங்கள் சுயாட்சியை நோக்கி தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன.
குடிமைச் சமூகம்
  • இந்திய சமூகச் சூழலில் குடியாட்சிக்கான குடிமைச் சமூகத்தை உருவாக்க பெருமுயற்சி செய்தவர் மகாத்மா காந்தி. சுதந்திரப் போராட்டத்தில் குடிமைச் சமூகம் உருவாக்கும் பணியில் அவர் ஈடு பட்டார்.
  • அதற்காகத்தான் பெருமளவில் ஏழைகளையும் பெண்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். தன் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும் ஏழை மக்களை உயர்நிலைச் சிந்தனைக்கு அழைத்துக் சென்றார். அதன் தொடர்ச்சிதான், ஏழை மக்கள் பங்கேற்கும் பங்கேற்பு ஆட்சிமுறையை கீழிருந்து கட்டமைக்க விரும்பி, ஒரு புது மக்களாட்சி முறையை முன்வைத்தார். அந்த முறை இன்றுள்ள மக்களாட்சி முறைக்கு முற்றிலும் மாறுபட்டது. அதற்கு அடிப்படையில் ஆட்சியாளர் தவறு செய்யும் நிலையில், தார்மிகமாக எதிர்க்கத் தேவையான துணிவை ஏழை மக்களிடம் உருவாக்கினார்.
  • மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அந்தச் செயல்பாடுகள் வேறு ஒரு தளத்துக்கு மாற்றப்பட்டு விட்டன. குடிமைச் சமூகத்திற்குப் பதில், கட்சிக்காரராக ஆளுவோரை கேள்வி கேட்கத் தயார்படுத்தப்பட்டனர். இதன் விளைவு, கட்சிக்கும் ஆட்சிக்கும் கட்டுப்பட்டவர்களாக குடிமைச் சமூகம் மாற்றப்பட்டு விட்டது. எனவே, சமூகப் பார்வையின்றி, குடிமைப் பொறுப்பு என்ற நிலையிலிருந்து கட்சிக்காரர் என்ற உணர்வுடன் பொதுப் பிரச்னைகளை அணுக வைத்து குடிமைச் சமூகத்தை புறந்தள்ளிவிட்டனர்.
இன்று....
  • இன்று அரசியல் கட்சிகளின் கோரப்பிடியில் மக்கள் சிக்குண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து வெளியேறத் துடிப்பதன் அறிகுறிதான் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள். கடந்த கால அரசியல் கட்சிகளின் அரசியல் செயல்பாடுகள், மக்கள் பிரச்னைகளை கையிலெடுக்கும்போது பிரச்னைகளின் உண்மைத் தன்மையில் செயல்படுவதற்குப் பதிலாக, கட்சி நலன் சார்ந்து கட்சிக்காரர்களை வைத்துச் செயல்பட்டதன் விளைவு, அரசியல் கட்சிகளின் மீது ஒரு பொது வெறுப்பு உருவாகியுள்ளதை அனைவரும் அறிவர்.
  • இதன் விளைவுதான், அரசியலுக்கு அப்பாற்பட்ட விவசாயிகளின் போராட்டங்கள், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதுகாப்புக்கான கிராம மக்களின் போராட்டங்கள், ஆதிவாசிகளின் வனப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் அரசுக்கு எதிராக எழுகின்றன.
  • அனைத்துப் போராட்டங்களும் வன்முறையின்றி நடந்து வருகின்றன. அந்தப் போராட்டங்களைக் கலைக்க, அரசுதான் அதன் ஆயுதமாக காவல் துறையை ஏவுகிறதேயொழிய மக்கள் வன்முறைக்குச் செல்வதில்லை.
  • இந்தப் போராட்டங்கள் ஒவ்வொரு குறிக்கோளை முன்னிறுத்தியதாக இருந்தாலும், அது பிரதிபலிக்கும் மகத்தான செய்தி ஒன்று இருக்கிறது; அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அதுதான், குடிமைச் சமூகம் சுயாட்சியை நோக்கி நகர நினைக்கிறது.
வளர்ச்சி
  • அத்துடன் வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு என்ற பெயரில் அரசுத் துறைகள் மூலம் தங்கள் மீது போடப்பட்டிருக்கும் சங்கிலியை உடைத்தெறிய முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
  • அடுத்த நிலையில் ஆட்சியாளர்களை மக்கள் கேள்வி கேட்டு, மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். எனவே, ஆட்சியாளர்களை மக்களுக்குக் கடமைப்படுத்த வேண்டும் என்றும் முனைகின்றனர். இந்த இலக்குகளை நோக்கி குடிமைச் சமூகம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டுச் செல்ல நினைத்துச் செயல்படும்போது தேவையான ஆதரவுக் கரங்கள் பலரிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
  • அதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது. அது இன்று, குடிமைச் சமூகத்தின் மீது பற்றுக் கொண்ட படித்த இளைஞர்களால் ஓரளவுக்கு கிடைக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
  • அதே போன்று ஊடகங்களாலும் கிடைக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் இது ஒரு தொடர் செயல்பாடாக மாற வேண்டும். அப்போதுதான் இந்தக் குடிமைச் சமூகச் செயல்பாடு வலுப்படும். அது மட்டுமல்ல, இந்தச் செயல்பாடுகளில் மக்களாட்சியில் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை குடிமக்கள் பயன்படுத்த குடிமக்களைத் தயார் செய்வது மிக முக்கியமான பணி. அந்தப் பணிதான் சரிவர இன்றுவரை நம் நாட்டில் பெருமளவில் நடைபெறவில்லை. இது ஒரு சிக்கலான பணியும் கிடையாது.
  • தங்களுக்கு அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்தி நாம் முன்னேறி மரியாதையுடைய வாழ்க்கையை வாழ முடியும் என்பதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிதான் மிக முக்கியமான பணி. தங்களுக்காக பணி செய்வதற்கு மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசு அலுவலகங்களை எப்படி மக்களுக்குப் பணி செய்ய கடமைப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுதான் அந்த மக்கள் தயாரிப்புப் பணி.
பயிற்சி
  • இந்தப் பணிக்கு தன்முனைப்போடு களப் பணியாற்ற வரும் இளைஞர்களுக்கு ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.
  • அந்தப் பயிற்சிதான், இந்த இளைஞர்களை திறம் மிக்கவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், மக்களுக்கு வழிகாட்டக்கூடியவர்களாகவும், ஒழுக்கத்தின் மேன்மை உணர்ந்தவர்களாகவும் உருவாக்கும்.
  • இன்று இந்தப் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்தேறி வருவதைப் பார்க்க முடிகிறது. இன்று தமிழகம் முழுவதும் ஒரு சடங்குபோல் நடத்தப்படும் கிராமசபையைப் பார்த்தவர்களுக்கு, கொட்டாம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கம்பூர் பஞ்சாயத்தில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி ஒரு கிராமப் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபைக் கூட்டம் ஓர் உதாரணம். அந்தக் கிராமத்திலுள்ள இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி இரண்டு ஆண்டுகள் முயற்சி செய்து அந்த கிராமசபைக்கு ஆயிரம் பேரைத் திரட்டி, அறிவுபூர்வமாக கிராமசபை அதிகாரங்களை முறையாகத் தெரிந்து, பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகள் பற்றி அதிகாரபூர்வ தகவல்களைப் பெற்று, ஆட்சியாளர்களை முறையாகக் கேள்விகள் கேட்டு பதில் சொல்ல வைத்துள்ளனர்.
கிராம சபை
  • கிராமசபைக்கு இந்த இளைஞர்களே விளம்பரம் செய்து மக்களைத் திரட்டியுள்ளனர். காலை 30 மணிக்கு ஆரம்பித்த கிராமசபைக் கூட்டம் மாலை 4 மணி வரை முறையாக நடந்துள்ளது என்பதை அறியும்போது, இந்த இளைஞர்களின் கடின உழைப்பு, கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, தளரா மனங்கொண்டு செயல்பட்ட விதம் மற்றவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளன. இதுபோன்ற செயல்பாடுகளைத்தான் 70 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்துக்கள் மூலம் எதிர்பார்த்தார்.
  • இந்தச் செயல்பாடுகளைச் செய்ய ஒவ்வொரு கிராமத்திற்கும் தன்னலமற்ற ஐவர் வேண்டுமென்றார் மகாத்மா காந்தி அன்று. அவர் அன்று எதிர்பார்த்த தன்னலமற்ற ஊழியர்கள் இவர்கள்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் செய்தது அனைத்தும் அதிகார வரம்புக்கு உட்பட்டுச் செயல்பட்டது. அடுத்து முதலில் தங்களை அறிவுபூர்வமாக தயார் செய்து கொண்டது. அடுத்து, அரசு தந்த சட்டங்களைப் பயன்படுத்தி, அரசு கொடுத்த புள்ளிவிவரங்களைக் கொண்டு கேள்விகள் கேட்டு அரசாங்கத்தை மக்களுக்குச் சேவை செய்யப் பணித்தது.
  • இதில் எந்த இடத்திலும் விதி மீறல் கிடையாது. ஆனால், அத்தனைப் பணிகளும் அவர்கள் எளிதில் சாதித்துவிடவில்லை. இவை அனைத்துக்கும் பின்னணியில், இரண்டு ஆண்டுகள் தன்னலமற்ற உழைப்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாட அனைத்து நிறுவனங்களும் அரசுகளும் திட்டம் போட்டுச் செயல்பட முனையும்போது, காந்தியின் கனவான கிராம சுயராஜ்யத்தை அடைய ஊருக்கு ஐந்து பேர் முயற்சி செய்தால், இந்த ஊர் இளைஞர்கள் பின்பற்றிய முறையைக் கையாண்டு மக்களை அதிகாரப்படுத்தி அரசாங்கத்தை மக்களுக்குப் பணி செய்ய வைத்துவிடலாம். ஊருக்கு ஐவர் என தமிழக கிராமப் பஞ்சாயத்தில் தன்னார்வமாக இருந்தால், கிராமங்கள் மீண்டும் மீண்டெழும். அப்படி தன்னார்வமாக எழுந்த இளைஞர்களையெல்லாம் ஒன்றிணைத்துவிட்டால், அதுதான் ஜே.சி.குமரப்பா எதிர்பார்த்த கிராமத்துக்கான மக்கள் இயக்கம். இந்த இயக்கம்தான் கிராம சுயராஜ்யத்துக்கான அடித்தளம். இன்றைக்குத் தேவை இப்படிப்பட்ட இளைஞர்களின் கூட்டணிதான், அரசியல் கூட்டணி அல்ல. இந்தக் கூட்டணிதான் குடிமைச் சமூகத்தை உருவாக்கும். அது மட்டுமல்ல, இன்றைய அரசியலுக்கே புதிய திசையைக் காட்டும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories