TNPSC Thervupettagam

குற்ற வலைப்பின்னலில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்

March 12 , 2025 3 days 72 0

குற்ற வலைப்பின்னலில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்

  • சிதம்பரத்தில் அரசு ஐடிஐ மாணவர்களைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்த முயன்றதுடன், அவர்களைச் சரமாரியாகத் தாக்கி அதைக் காணொளியாக வெளியிட்ட சமூக விரோதிகளின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. படிக்கும் வயதில், மாணவர்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபட நேர்வதும் தாக்கப்படுவதும் வேதனைக்குரியவை.
  • ‘போதைப் பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று’ எனத் தமிழ்நாடு காவல் துறை பெருமிதத்துடன் கூறிக்கொண்டாலும் கஞ்சா, போதை மாத்திரைகள், போதைக் காளான்கள் எனப் பல்வேறு வகையிலான போதைப் பொருள்கள் விற்பனை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்பதை அன்றாடம் வெளியாகும் செய்திகள் உணர்த்துகின்றன.
  • இதற்கிடையே, இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சமூக விரோதிகள், கல்வி கற்க வேண்டிய மாணவர்களைப் போதைப் பொருள் விநியோகிப்பவர்களாக மாற்றிவருகின்றனர். சிதம்பரம் சம்பவம் அதைத்தான் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறது. கஞ்சா விற்பனையில் வலுக்கட்டாயமாக அரசு ஐடிஐ மாணவர்களை ஈடுபடுத்திய சமூக விரோதிகள், அதை அவர்கள் சரிவரச் செய்யவில்லை எனத் திட்டி, கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.
  • சீருடை அணிந்த அந்தப் பதின்ம வயது மாணவர்கள் அதைத் தடுக்க வழி தெரியாமல் கதறும் காட்சி, தமிழ்நாட்டின் அனைத்துப் பெற்றோரையும் அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த நடவடிக்கைகள் போதாது. இத்தகைய குற்றங்களின் ஆணிவேரைக் கண்டறிந்துக் களையெடுக்காவிட்டால், வேறு வடிவங்களில் குற்றங்கள் தொடரும்.
  • கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள், வெளிமாநிலங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருக்கும் இளைஞர்கள், ஐடி துறையில் பணிபுரிபவர்கள் போன்றோர் மத்தியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் பணத்தாசை காட்டி அவர்களையும் இந்தத் தொழிலில் ஈடுபடுத்திவிடுகின்றனர்.
  • ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்தத் தொழிலில் ஈடுபட முன்வருபவர்கள் ஒருகட்டத்தில் இதன் ஆபத்தை உணர்ந்துகொண்டாலும், அதிலிருந்து மீண்டுவர முடியாமல் தவிக்கிறார்கள். கல்வி நிறுவனங்களில் இத்தகைய குற்றங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்ட மூத்த மாணவர்கள், இளைய மாணவர்களைத் தவறாக வழிநடத்துவதன் மூலம் இந்த விஷ வலையை விஸ்தரிக்கிறார்கள்.
  • இந்தச் சூழலில், பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்கள் தவறான வழிக்குச் செல்லாமல் தடுப்பது அவசியம். மாணவப் பருவத்தில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாகத் தடம் மாறும் மாணவர்களை அரவணைத்து அவர்களிடம் விஷயத்தை எடுத்துச்சொல்லி நல்வழிப்படுத்த வேண்டியதும் பெற்றோர், ஆசிரியர்களின் கடமைதான்.
  • அதேவேளையில், இப்படியான செயல்பாடுகளின் சூத்திரதாரிகளாக இருக்கும் முக்கியக் குற்றவாளிகளின் வலையிலிருந்து மாணவர்களை மீட்கக் காவல் துறையின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் இப்படி போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக அவ்வப்போது வெளியாகும் செய்திகள் பதிவுசெய்கின்றன. செல்வாக்கான நபர்கள் இப்படியான செயல்களில் ஈடுபடும்போது, பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல் துறை தயங்கக் கூடாது.
  • தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு 0.1%தான் என்றும், தேசிய சராசரியான 1.2% உடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான் என்றும் தமிழகக் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) சங்கர் ஜிவால் 2024 அக்டோபரில் தெரிவித்திருந்தார். பிற போதைப் பொருள்களின் பயன்பாடும் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த நிலை தொடர்வதை உறுதிசெய்ய வேண்டும் என்றால், மாணவர்களைப் போதைப் பொருள் விற்பனையாளர்களாக மாற்றும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top