TNPSC Thervupettagam

கொழுப்புணவு பற்றிய விழிப்புணர்வு

March 7 , 2019 2090 days 1445 0
  • உலகம் முழுவதிலும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் தவறான உணவுப் பழக்கங்களால் இதயநோய்கள் வந்து அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது என்று எச்சரித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், 'ஊடுகொழுப்பு’ (Trans fat) என்னும் கொழுப்பு கொண்ட உணவைச் சாப்பிடுவதால் மட்டும் ஒவ்வொரு வருடமும் சுமார் 5 லட்சம் பேர் மாரடைப்பால் மரணமடைகின்றனர் என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.
  • இந்த மரணங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் - ‘2023-ல் ஊடுகொழுப்பு இல்லாத உலகம் வேண்டும்’ எனும் கருதுகோளின் அடிப்படையில் – ‘ரீப்ளேஸ்’ (‘REPLACE’) என்னும் பெயரில் ஒரு மாற்றுச் செயல் திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் இதைக் கடைப்பிடிக்க முன்வந்துள்ள வேளையில், இந்தியாவில் கேரள அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ஊடுகொழுப்புஎன்றால் என்ன?
  • நவீனத் தொழில்நுட்பம் நமக்குக் கொடுத்திருக்கும் ஒரு மோசமான கொழுப்பு அமிலம் ஊடுகொழுப்பு. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கு ஏற்படும் கேடுகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இது.
  • திரவநிலையில் இருக்கும் தாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் அணுக்களைச் சேர்த்துத் திட எண்ணெயாக மாற்றும் தொழில்நுட்பத்தில் பிறக்கும் ரசாயன வஸ்து இது. இதன் களேபரத்தில் நலம் காக்கும் தாவர எண்ணெயின் இயற்கைத் தன்மை குலைந்து ஆரோக்கியத்தைச் சிதைக்கும் செயற்கைத் தன்மைக்கு மாறிவிடுகிறது;
  • வசீகரிக்கும் நிறம், மணம், அதிக சூட்டைத் தாங்கும் திறன் என அதன் உண்மைத் தன்மை உருமாறுகிறது. பெரும்பாலான துரித உணவுகளைத் தயாரிக்கவும், நீண்ட காலம் உணவு கெட்டுப்போகாமல் இருக்கவும், குறைந்த செலவில் அதிக ருசி கிடைக்கவும் இந்தத் திட எண்ணெய்களையே உணவு வணிகர்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். உதாரணம் - வனஸ்பதி.
  • பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊடுகொழுப்பு அதிகமாக இருக்கிறது. ‘அப்படியே சாப்பிடலாம்’ என்று விளம்பரம் செய்யப்படும் 'துரித உணவுகளில்' இது ஏராளமாக இருக்கிறது. வயது வித்தியாசமின்றி அனைவரும் சாப்பிடும் பிஸ்கட்டுகள், கிரீம் கேக்குகள், நூடுல்ஸ், பீசா, பர்கர், பாப்கார்ன், குக்கீஸ், வேஃபர்ஸ், சிப்ஸ், ஃபிரைடு சில்லி, ஃபிரஞ் ஃபிரை, ஸ்வீட் ரோல், பேஸ்ட்ரி போன்றவற்றில் இந்த ஆபத்தான வஸ்து குடிபுகுந்துள்ளது. எந்தவொரு சமையல் எண்ணெயையும் மறுபடி மறுபடி சூடாக்கி, அதிக நேரம் கொதிக்க வைத்து, உணவுப்பொருட்களைத் தயாரித்தால், அவற்றிலும் ஊடுகொழுப்பு தாராளமாகப் புகுந்துவிடுகிறது. வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, சிப்ஸ், மைசூர் பாகு, மைதா கேக், முறுக்கு, சேவு, சீவல், ஓமப்பொடி, அல்வா போன்ற நொறுக்குத் தீனிகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
ஊடுகொழுப்பால் என்ன பிரச்சினை?
  • இந்தக் கொழுப்பு அமிலம் நம் ரத்தத்தில் எல்.டி.எல். எனும் கெட்ட கொலஸ்டிராலை அதிகப்படுத்தி, ஹெச்.டி.எல். எனும் நல்ல கொலஸ்டிராலைக் குறைத்துவிடுகிறது. டிரைகிளிசரைடு எனும் கொழுப்பையும் அதிகப்படுத்துகிறது. இதனால் மாரடைப்பும் பக்கவாதமும் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. இளம் வயது மாரடைப்புக்கு இது ஒரு முக்கியக் காரணமாகிறது.
  • ஊடுகொழுப்பால் ஏற்படும் நேரடிப் பிரச்சினை இவை என்றால், உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மார்பகப் புற்றுநோய், கருப்பைப் பிரச்சினைகள், மலட்டுத்தன்மை, மறதிநோய் போன்றவை இதனால் ஏற்படும் மறைமுகப் பிரச்சினைகள். இப்படி மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கெடுத்து, ஒரு தேசத்தையே நோயாளி தேசமாக மாற்றுவதில் மற்ற கொழுப்புகளைவிட ஊடுகொழுப்புதான் இப்போது முன்னணியில் நிற்கிறது. இதற்கு ஒரு கடிவாளம் போட வந்ததுதான் ‘ரீப்ளேஸ்’ செயல் திட்டம்.
உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள்
  • உலகில் டென்மார்க் நாடுதான் முதன் முதலில் ஊடுகொழுப்புக்கு எதிராகச் செயலில் இறங்கியது; உலக சுகாதார நிறுவனம் சொல்வதற்கு முன்பே, அதாவது 2003-லேயே ஊடுகொழுப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குப் பலதரப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தது; முக்கியமாக, அவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் ஊடுகொழுப்பின் அளவு 2%-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டது.
  • ஊடுகொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கும் விற்பவர்களுக்கும் அதிக வரி போட்டது; இன்னும் ஒரு படி மேலே சென்று மக்கள் அதிகம் விரும்பும் பல துரித உணவுகளுக்குத் தைரியமாகத் தடைவிதித்தது.
  • இதையடுத்து, அந்த நாட்டில் மாரடைப்பு மரணங்கள் குறைந்து வருவதைக் கண்கூடாகக் கண்ட நார்வே, சுவீடன், சிங்கப்பூர், சிலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின.
கேரளா காட்டும் பாதை!
  • இந்தியாவிலும் இந்த மாதிரியான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுகிறது; அதற்கான செயல் திட்டத்தைத் தயாரித்து, அதைப் பல கட்டங்களாகப் பிரித்து மத்திய சுகாதாரத் துறையிடம் கொடுத்துள்ளது. நாட்டிலேயே முதன்முதலாக கேரள அரசு இதைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கேரளாவில் மட்டும்தான் 45% மக்களிடம் டிரைகிளிசரைடு எனும் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. ஊடுகொழுப்புணவால் வந்த விளைவு இது. ஆகையால், கேரள அரசு இந்தச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த தானாகவே முன்வந்துள்ளது; இதற்கெனத் தனிக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (ஐசிஎம்ஆர்) உதவியுடன் தொழிலதிபர்கள், உணவு விடுதி நிர்வாகிகள், மேலாளர்கள், அடுமனை, இனிப்புக் கடை உரிமையாளர்கள்/ விநியோகஸ்தர்கள் போன்றோரை அழைத்து கூட்டம் போட்டு, அவர்கள் தயாரிக்கும் / விற்பனை செய்யும் / உணவில் பயன்படுத்தும் வனஸ்பதி, செயற்கை வெண்ணெய் சமையல் எண்ணெய் மற்றும் பிற உணவுகளிலும் 2%க்குக் குறைவாக ஊடுகொழுப்பு இருப்பதற்கும், ஊறுகாய், அப்பளம், வடகம் போன்றவற்றில் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் அறிவியல்பூர்வமான மாற்று வழிகளைத் தெரிவிப்பதும், அந்த வழிமுறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அவ்வப்போது உணவு மாதிரிகளை எடுத்துப் பரிசோதிப்பதும், அதற்குத் தேவையான உணவுப் பாதுகாப்பு ஆய்வகங்களைக் கூடுதலாக அமைப்பதும், பாக்கெட் உணவுகளில் உள்ள ஊடுகொழுப்பின் அளவைப் பயனாளிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்னும் விதிமுறையைக் கொண்டுவருவதும் இந்தக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள்.
  • இவற்றைப் பின்பற்றாதவர்கள் மீது என்ன மாதிரியான நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கவும், அதற்கான சட்ட முன்வரைவுகளைத் தயாரிக்கவும், தனிக்கொள்கை கோட்பாடுகளைக் கொண்டுவரவும் கேரள அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்தச் செயல் திட்டத்துக்குத் தேவையான நிதி உதவியை உலக வங்கியிடமும் உலக சுகாதார நிறுவனத்திடமும் பெற்றுள்ளது. எய்ட்ஸ் ஒழிப்பில் தேசம் முழுவதும் ஒருங்கிணைந்து செயல்பட்டதுபோல் ஊடுகொழுப்பு ஒழிப்பிலும் மக்களின் பூரண ஒத்துழைப்பும் அரசு இயந்திரங்களின் ஒருங்கிணைப்பும் கிடைத்து, மாநிலம் முழுவதிலும் இது முழுமையாக நடைமுறைக்கு வந்துவிடும் என்றால், மற்ற மாநிலங்களும் கேரளத்தைப் பின்பற்றத் தொடங்கிவிடும். அப்போது இந்தியா ஆரோக்கியமிக்க நாடாக மாறிவிடும்!

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories