TNPSC Thervupettagam

கோடிகளை விழுங்கும் தேர்தல்!

May 6 , 2019 2076 days 1293 0
  • ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றால், அவர் ராஜிநாமா செய்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான செலவை தொடர்புடைய கட்சியே ஏற்கும் விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
பொதுத் தேர்தல்
  • சுமார் 130 கோடி மக்கள்தொகையை உள்ளடக்கிய இந்தியாவில், ஜனநாயக முறையில் பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பது என்பது ஒரு பெரும் சவாலான செயல்பாடு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
  • பல்லாயிரக்கணக்கான வேட்பாளர்களை களத்தில் இறக்கும் 2000-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள், சுயேச்சைகள், சுமார் 90 கோடி வாக்காளர்கள், தேர்தலை நடத்தும் பணியாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 543 தொகுதிகளில் பல கட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்கும் பெரும் பணி, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த மாதிரி செயல்பாடுகளுக்கு மனித உழைப்பும், பணச் செலவும் பெருமளவில் தேவை என்பதை மறுக்க முடியாது. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் சுமார் 40 லட்சம் மின்னணு இயந்திரங்கள் நிறுவப்பட்டு, தேர்தல் நாளில் அவை நிர்வகிக்கப்படவேண்டும்.
  • இந்த நிர்வாகத்துக்கான நேர்முக மற்றும் மறைமுகப் பணிகளுக்கு, சுமார் 1 கோடிக்கு மேல் அலுவலர்கள், பணியாளர்கள் தேவைப்படுவார்கள். பொதுத் தேர்தலை முன்னிட்டு செய்யப்படும் நிர்வாகச் செலவினங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்தச் செலவினங்களின் ஒரு பகுதியே வெளியில் தெரிகிறது. அரசு புள்ளிவிவரங்களின்படி, 2014-ஆம் ஆண்டில் நடந்த மக்களைவைத் தேர்தலுக்கான செலவு ரூ.4,000 கோடியாகும். ஆனால், இந்த கணக்கின் அளவு, மிதக்கும் பெரும் பனிமலையின் மேலாக வெளிப்படும் சிறுமுனை மட்டும்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. ஏனென்றால், இந்தப் புள்ளிவிவரங்களில் பல மறைமுகச் செலவுகள் சேர்க்கப்படுவதில்லை.
தேர்தல் பணியாளர்கள்
  • சுமார் ஒரு கோடி தேர்தல் பணியாளர்களின் தினசரி ஊதியம் மற்றும் போக்குவரத்துச் செலவு, 10 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைத்து அவற்றை நிர்வகிக்கும் செலவு, 40 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்களின் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள், பாதுகாப்புச் செலவுகள், தகவல் பரிமாற்றம், விளம்பரம் மற்றும் பயிற்சி செலவுகள் ஆகியவற்றின் குறைந்தபட்ச கூட்டுத் தொகையே சுமார் ரூ.35,000 கோடிக்கு மேல் வந்து விடும்.
  • தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நேரம், வங்கிகள் உள்பட மற்ற அரசுத் துறை அதிகாரிகளின் பணி இழப்பு நேரம் ஆகிய மறைமுக வாய்ப்பிழப்புச் செலவுகள் ("ஆப்பர்ச்சுனிட்டி காஸ்ட்ஸ்') இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
தொகை
  • தேர்தல் நாளன்று அறிவிக்கப்படும் கட்டாய பொது விடுமுறையால் நிறுவனங்கள் இழக்கும் தொகை, நாட்டின் ஒரு நாளைய மொத்த உற்பத்தி தொகைக்கு (ஜிடிபி) சமமானதாக இருக்கும். அதன் அளவு சுமார் ரூ.40,000 கோடியாகும். பண பலம் உள்ளவர்களால் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சித்தாந்தம் வேரூன்றி வளர்ந்து பல காலம் ஆகிவிட்டது எனலாம். பண பலத்துக்கு முன், படிப்பு, சமூக அக்கறை, பொது வாழ்க்கையில் ஒழுக்கம், நேர்மை ஆகிய அனைத்து முக்கிய அம்சங்களும் பலியாக்கப்படுகின்றன என்பதுதான் சோகமாகும்.
  • தேர்தலில் போட்டியிடத் தேவையான பெரும் பொருளாதார வசதிகளை நேர்மையான வழிகளில் ஈட்டியிருக்க வாய்ப்பில்லை. பெரும் பொருளைச் செலவிட்டு பெறப்படும் தேர்தல் வெற்றிகள், இழந்த பொருளை பல மடங்காக திரும்ப எடுக்கப் பயன்படும் களமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நம் கடந்தகால கசப்பான அனுபவங்கள் உணர்த்துகின்றன.
  • வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, வாக்குகளை விலைக்கு வாங்கும் தவறான பாரம்பரியம் வளர்க்கப்பட்டு விட்டதால், தேர்தல் திருவிழா ஒரு வியாபாரச் சந்தையாக உருவெடுத்து விட்டது.
  • 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை உணர்த்தும் சமூக நோக்கத்துடன் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காக சுமார் ரூ.5 கோடி வரை தேர்தல் ஆணையம் செலவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்த முயற்சிகள் தேவையான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
  • அதிக அளவில் படித்தவர்கள் உள்ள மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு வெறும் 57 சதவீதம் மட்டும்தான்; மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் வாக்குப்பதிவு 65 சதவீதத்தைத் தாண்டவில்லை. ரூ.40,000 கோடி அளவிலான அரசு செலவினங்கள் தவிர, பொதுத் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களால் செலவிடப்படும் பணப் புழக்கத்தின் அளவு சுமார் ரூ.50,000 கோடியைத் தாண்டி நிற்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச செலவுத் தொகையின் வரம்பு ரூ.70 லட்சம் வரைதான்.
வேட்பாளர்களின் செலவினங்கள்
  • வேட்பாளர்களின் பலதரப்பட்ட செலவினங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அந்த வரம்பு பெரும்பாலும் பல மடங்கு அளவில் மீறப்படுவதாகத்தான் தோன்றுகிறது. தேர்தல் காலங்களில் கட்சிகளாலும், வேட்பாளர்களாலும் செலவிடப்படும் பெருந்தொகையின் பிறப்பிடங்கள் பற்றி அறிய முற்படுவது என்பது இயலாத ஒன்றாகும். கடந்த ஆண்டு பண பரிமாற்ற மசோதா ("மணி பில்') மூலம் திருத்தி அமைக்கப்பட்ட தேர்தல் நிதி பத்திர வழிமுறைகள் மூலம் வெளிநாட்டினர் உள்பட எவரிடமும் பெயரை வெளியிடாமல் அரசியல் கட்சிகள் நன்கொடைகள் வசூலித்துக் கொள்ளலாம்.
  • சில ஆயிரம் ரூபாய் பண பரிமாற்றத்துக்குக்கூட, சம்பந்தப்பட்டவர்களின் கேஒய்சி (வாடிக்கையாளர் குறித்த முழு விவரம்) பதிவு செய்யப்படும் இந்தக் காலகட்டத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பண பரிமாற்றங்களுக்கு வெளிப்படைத்தன்மையை இழக்க வைக்கும் இந்த வழிமுறை உச்சநீதிமன்ற கவனத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்பது சற்று ஆறுதலான செய்தியாகும்.
  • மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தில், தேர்தல் நேரங்களில் மதம் மற்றும் ஜாதி உணர்வுகள் முன்னிறுத்தப்படுவது, வேட்பாளர்களின் தேர்வுகள் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது எனலாம். குறிப்பிட்ட ஜாதியினர் நிறைந்திருக்கும் தொகுதியில், வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்த அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக தேர்ந்தெடுப்பதைத்தான் கட்சிகள் விரும்புகின்றன. தேர்தல் என்பது பலவித குறுக்கு வழியிலான வியூகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்கான விளையாட்டுக் களமாக பயன்படுத்தப்படுவதற்கு இது ஓர் உதாரணமாகும்.
  • ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளிலிருந்து போட்டியிடுவது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழி முறையாகும். அந்த வேட்பாளர் இரு தொகுதிகளிலும் வென்று விட்டால், ஒரு தொகுதியில் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்பது நியதியாகும். இந்த வழிமுறை அந்தத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு வித்திட்டு, மக்களின் வரிப் பணத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். இந்த மாதிரியான கூடுதல் செலவினங்களைத் தவிர்க்க, தொடர்புடைய கட்சியே அந்தச் செலவுகளை ஏற்கும்படியான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். இந்த மாதிரி பெருமளவிலான தேர்தல் செலவுகளைக் குறைக்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் தேவையான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தும் நேரம் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. அதில் ஒரு வழிதான் "இ-வோட்டிங்' முறையாகும்.
இந்திய கம்பெனி சட்டம்
  • இந்திய கம்பெனி சட்டத்துக்குட்பட்ட நிறுவனங்களில், இந்த "இ-வோட்டிங்' முறை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்து விட்டது. செல்லிடப்பேசியின் பிரத்யேக செயலி மூலம் வாக்குப்பதிவுகளை நிர்வகிப்பது "இ-வோட்டிங்' முறையில் ஒன்றாகும்.
  • பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி மூலம், ஒவ்வொரு வாக்காளரும் விரல் ரேகை அடையாளத்தின் அடிப்படையில் ("பயோமெட்ரிக் பிராசஸ்'), தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
  • இந்த முறையில் வாக்குச்சாவடிகள் அமைப்பது, அதற்கான பணியாளர்கள், வாக்கு இயந்திரம் போன்றவற்றுக்கான செலவுகள் குறைக்கப்பட்டு, வாக்கு சதவீதமும் அதிகரிக்கும். பொது விடுமுறையால் விளையும் உற்பத்தி இழப்புகளையும் குறைக்கலாம்.
  • இந்த மாற்று முறையின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து, சோதனை அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல்களில் புதிய முறையை அமல்படுத்திப் பார்க்கலாம். இந்தச் சோதனை அவசியம் முயற்சிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எந்தவித ஒரு செலவினத்துக்கும் அதற்குரிய முழுப் பலன் கிடைக்காவிட்டால், அது வீண் செலவாகத்தான் கருதப்படும்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories