TNPSC Thervupettagam

சகிப்புத்தன்மை

February 12 , 2019 2145 days 2253 0
  • வரலாற்றில் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் பொறுமையின் பெருமைக்கு உரியவர்கள்.
  • மன்னன் மகேந்திர பல்லவன் கி.பி.610-640-இல் கட்டிய வேதகிரீஸ்வரர் கோயில் கொண்ட திருக்கழுகுன்றம், சங்கு தீர்த்தம், பட்சி தீர்த்தம் என்று 10 தீர்த்தங்கள் கொண்ட புண்ணிய பூமி.
  • நால்வர் பெருமக்களால் பாடல் பெற்றது. அருகில் உள்ள கருங்குழி சாலையில்  காலப் பழைமையும், சாலப் பெருமையும் வாய்க்கப் பெற்ற கால கண்டேஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது. 1,000  ஆண்டுகள் பழைமையானது. பல காலமாக கோயில் பாழடைந்து வருவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் நிதி திரட்டி 2007-ஆம் ஆண்டு திருப்பணியைத் தொடங்கினர்.
  • இந்திய நாட்டில் கோயில்களை இடிப்பதும், தெய்வத் திருமேனிகளைச் சிதைப்பதும் முன் நாளைய வரலாற்றில் வடுக்களாக, ரத்தம் தோய்ந்த ஏடுகளாக இருப்பதை  அறிவோம்.
சோமநாதபுரம் சோமநாதர் கோயில்
  • கி.பி.722-இல் சிந்து மாகாணத்தைச் சார்ந்த சுபேதார் சூனா மேடு என்பவன் மேலைக் கடற்கரையில் உள்ள சோமநாதபுரம் சோமநாதர் கோயிலை சூறையாடி அளவற்ற செல்வங்களைக் கொள்ளையடித்தான். இன்றைய தெற்கு காபூலுக்கு அன்றைக்கு கஜனி என்று பெயர்.
  • தனது தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த முகமதுவுக்கு வயது இவன் இந்திய நாட்டின் செல்வச் செழிப்பைக் கேள்வியுற்று இந்தியாவின் மீது 17 முறை படை எடுத்தான். கஜனி  முகமது கி.பி.1000 முதல் கி.பி.1027 வரை உள்ள காலத்தில் இந்தியாவின் மீது படை எடுத்து தில்லி, கனோஜ், மதுரா, காங்கரா, தானேஸ்ரம், காஷ்மீர், குவாலியர், மால்வா, புந்தேல் கண்ட், பஞ்சாப் முதலான இடங்களைக் கைப்பற்றினான். அந்தந்த நாட்டு அரசர்களைக் கொன்றான்.
  • பல நூறு கோயில்களை இடித்துத் தீக்கிரையாக்கினான். இதில் சோமநாதபுரம் கோயிலை இடித்ததுதான் கொடூரத்தின் உச்சம். கோயிலை இடித்து அளப்பற்கரிய செல்வங்களை வாரிச் சுருட்டினான்.
  • கோயிலின் கருவறையில் இருந்த லிங்கத்தை உடைக்க முற்பட்டபோது பொது மக்கள் வேண்டாம் என்று வேண்டினர். ஆனாலும், அதனைப் பெயர்த்து எடுத்துச் சென்றான். தான் நிர்மாணித்த கஜனியில் உள்ள மசூதிக்கு முன்பாக உடைத்து படிக்கல்லாக அமைத்தான். தங்கம், வெள்ளி, நவரத்தினக் கற்கள் என்று 2 கோடி தினார்கள் பெறுமானமான செல்வத்தைக் கொள்ளையடித்தான். 17 முறை நடத்திய படை எடுப்பில் 50,000 மக்களைக் கொன்றான்.
ஹாசன் நிஷாமி
  • இதை 12-13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெர்ஷிய கவிஞனும், வரலாற்று ஆசிரியருமான ஹாசன் நிஷாமி தனது தாஜ்-உல்-மாசர் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். குஜராத் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்கு போகும் முன் சோமநாதர் கோயிலில் வழிபாடு செய்து விட்டு யாத்திரையைத் தொடர்வார்கள் என்று  அமீர் குஸ்ரு என்ற வரலாற்று அறிஞர் எழுதியுள்ளார்.
  • இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கத் திருத்தலங்களில் சோமநாதபுரம் தலையாயது. இதனால் 1143-72-இல் குமாரபாலா என்ற அரசன் கோயிலை மீண்டும் கட்டினான்.
  • இதை 1169-ஆம் ஆண்டு கல்வெட்டு செய்தி உறுதி செய்துள்ளது. 1297-ல் அலாவுதீன் கில்ஜியின் ராணுவத் தலைவன் உலுக் கான், வகேலா மன்னன் காமாவைத் தோற்கடித்து கோயிலை தகர்த்துச் சூறையாடினான்.
  • கானஹட் தேவ் என்ற அரசன் கோயில் எழுப்பினான். 1449-இல் முகமது பேகடா என்ற சுல்தான் கோயிலிலிருந்து விலையுயர்ந்த பொருள்களைக் கவர்ந்து சென்றான். எதிர்த்த அனைவரையும் படுகொலை செய்தான். பின்பு, அப்போது கோவாவைக் கைப்பற்றியிருந்த போர்த்துகீசியர் படையுடன் வந்து சோமநாதபுரம் கோயிலை இடித்தார்கள். அங்கிருந்த மசூதிகளையும் இடித்தார்கள்.
ஒளரங்கசீப்
  • கொடுங்கோலன் ஒளரங்கசீப் 1701-இல் கோயிலை தரை மட்டமாக இடித்தான். சோமநாதபுரம் கோயில் மட்டுமின்றி தனது எல்லைக்குட்பட்ட இடத்தில் உள்ள எல்லா இந்துக் கோயில்களையும் இடிக்க ஆணையிட்டான்.
  • பிற சமய வழிபாட்டுத் தலங்களை மதிக்காத அவனது மத வெறியே இதற்குக் காரணம். ஏறக்குறைய சில நூறு ஆண்டுகள் கடந்த பின்னர் இந்தியா விடுதலை அடைந்தது. சுதந்திர இந்தியாவில் சோமநாதபுரம் ஆலயத்தை மீண்டும் கட்டி வழிபாடு செய்ய விரும்பிய பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று சர்தார் வல்லபபாய் படேலும் கே.எம்.முன்ஷியும் இது குறித்து காந்தியடிகளின் கருத்தைக் கேட்டார்கள்.
  • அவர் மனமுவந்து இசைவளித்து இக்கோயில் அரசு நிதியில் இருந்து கட்டக் கூடாது. மக்களின் நிதியைக் கொண்டே கட்டப்படவேண்டும் என்றார். அப்படியே பணிகள் தொடர்ந்தன.
  • கட்டி முடிக்கப்படும் முன்பாக காந்தியும் படேலும் காலமானதால் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் புதிய கோயிலை திறந்துவைத்துப் பேசும்போது, இந்தியா என்ற மாளிகையின் வெற்றிப் பொலிவு மிக்க, வளமையின் சின்னம் இந்தக் கோயில்.
வழிபாடு
  • புராதனமான சோமநாதபுரம் கோயில் மீண்டும் கட்டப்பட்டிருப்பது அழிவின் சக்தியைவிட ஆக்க சக்தி எப்போதும் மேலானது என்பதைக் காட்டுகிறது என்றார். ஆம். உண்மைதான். கோயிலை இடிக்க இடிக்க மீண்டும் மீண்டும் கட்டப்பட்டே வந்தது.
  • மக்கள் தங்களின் நம்பிக்கையை இழக்காமல் காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். பல்லாயிரம் பேர் கொலையுண்டாலும், சுற்றத்தாரை அயலானிடம் பலி கொடுத்தாலும், எஞ்சியவர்கள் இறைவனை இன்றும் ஆராதிக்கத் தவறுவது இல்லை.
  • இது, இவர்களின் அளவு கடந்த சகிப்புத் தன்மையின் வெளிப்பாடு. இடித்தவர் மீது வன்மம்  கொள்ளவோ, பழிக்குப் பழி வாங்கவோ எண்ணுவதில்லை. சுதந்திர இந்தியாவில் காஷ்மீரில் ஹஸரத்பல் என்ற புனிதத் தலத்தில் இருந்துவந்த நபிகள் நாயகத்தின் திருமுடி காணாமல் போய்விட்டதாக 1963 டிசம்பரில் ஒரு வதந்தி பரவியதுதான் தாமதம், அங்குள்ள சிறுபான்மையினரின் வணிக வளாகங்கள், வீடுகள், ஏனைய சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.
கலகம்
  • அப்பாவிகள் கொலையுண்டனர். நல்ல வேளையாக திருமுடி கிடைத்துவிட்டது என்று அரசு தொடர் அறிவிப்பு செய்யவே கலகம் மேலும் பரவாமல் அடங்கியது. இதே போன்றுதான் இலங்கையில் கண்டி நகரில் உள்ள பௌத்த விகாரத்தில் புத்தரின் புனிதப் பல் இருந்த பெட்டி தவறுதலாக சற்று நேரம் இடம் மாறியது. புனிதப் பல் காணவில்லை என்ற செய்தி பரவவே அங்குள்ள சிறுபான்மையோர் தாக்கப்பட்டனர்.
  • காஷ்மீரோ இலங்கையோ பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். உலகில் தாய்நாட்டிலோ, பாகிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ, இலங்கையிலோ இந்து கோயில்கள் தாக்கப்பட்டாலும், இந்துக்களை அழிக்கும் வகையில் மத மாற்றம் செய்யப்பட்டாலும் கேட்க, தடுக்க யாரும் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. நாடு பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானில் நடைபெற்ற இனப்படு கொலையைக் கண்டித்து 1.1948 அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பேசினார்: கராச்சியில்சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நிரபராதியான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டு சூறையாடப்பட்டனர். மற்றவர்கள் ஓட நேர்ந்தது.
  • குஜராத்தில் அகதி ரயில் தாக்கப்பட்டிருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இந்த ரயிலில் முஸ்லிம் அல்லாத அகதிகள் வந்து கொண்டிருந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான அகதிகள் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எனக்கு பெரும் துயரம் அளிக்கிறது. இந்திய யூனியன் எவ்வளவு காலம் சகித்துக் கொண்டிருக்க முடியும்? என் உபவாசத்தை மீறி இந்து, சீக்கியரின் பொறுமையை நான் எவ்வளவு காலம் நம்பியிருக்க முடியும்? இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் காந்தியடிகள்.
  • அண்ணல் காந்தியடிகளின் மனநிலைதான் இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களின் மனநிலையாக இருக்கிறது. சகிப்புத்தன்மை என்பது ஒருவழிப் பாதை அல்ல என்று உரக்கக் கூவத் தோன்றுகிறது.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories