TNPSC Thervupettagam

சிக்கனம், சேமிப்பு...வாழ்வின் ஆதாரங்கள்!

July 19 , 2019 1999 days 6242 0
  • சிக்கனம்  என்ற  சொல்  மிகவும்  அருமையானது.  பொருள்  சிக்கனம், வார்த்தை  சிக்கனம், உடை சிக்கனம், உணவுச் சிக்கனம், இடம் சிக்கனம் என்று சிக்கனம் பலவகைப்படும். உலகமே பொருளை விரும்பி நடைபெறுகிறது.
  • "பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை'என்பது மறைமொழி.  தங்கள் வாரிசுகள் சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், அவர்களின் இளம்பருவம் முதலே அவர்களுக்குச் சிக்கனத்தன்மையுடன் வாழவேண்டிய வழியையும் பொருளைச் சேமிக்கும் வழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். நாம் செய்யும் தொழில், நாம் இருக்கும் இடம், நாம் வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிக்கன வாழ்வைக் கடைப்பிடிப்பவர்கள் என்றும் துன்பம் அடைவதில்லை. வருவாய்க்கு மேல் செலவு செய்வதால் எத்தனை குடும்பங்கள் பாழ்படுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • அறம், பொருள்,  இன்பம் ஆகிய மூன்றையும் அடைதல் மக்கள் கடமையாம். அவற்றின் நடுவில் உள்ளதாகிய பொருளை ஒருவர் அடைந்துவிட்டால்  மற்ற இரண்டும் அவரைத் தாமே வந்தடையும்.
சிக்கனம் 
  • மற்றவருக்குத் தீங்கு நேராதவாறு பொருளை  எதிர்காலத்தில் முதுமைக்கும் சேர்த்துவைத்து சிக்கனமாய் வாழ்ந்து வருதல் தலையாய அறமாகும். சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் மிக எளிய முறை. பொருள் நுகர்வு, சமூக நிலை, தொழில், நேரம் எனப் பல முறைகளில் சிக்கன வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கலாம்.
  • சிக்கனம் என்பது வீட்டைக் காக்கும். சேமிப்பு என்பது நாட்டைக் காக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக உணவு உண்ணாமல்,  நல்ல உடைகளை உடுக்காமல் இருப்பது என்பது பொருள் அல்ல.  நமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் பணத்தைச் சேமித்து வைப்பதில் பயன் இல்லை.  அடிப்படைத் தேவைகளுக்கு செலவழித்து,  மீதியைச் சேமித்து வைத்தலே சிக்கனம்.
  • சிக்கனமும் சேமிப்பும் சேர்ந்தால்தான் மூலதனம் பெருகும். பணத்தை மட்டும் சேமிப்பது சேமிப்பு அன்று;  அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம், நேரம், பெட்ரோல், தானியங்கள் ஆகியவையும் சேமிப்பில் அடங்கும். "வாழு, வாழவிடு' என்பதுதான் சிக்கனத்தின் தாரக மந்திரம்.
  • தாம் சிறுவயதில் நுகராத இன்பங்களை வாரிசுகள் நுகர வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதில் தவறில்லை. ஆனால், அவ்வெண்ணம் வரம்பு மீறிப் போனால் மீளாத் துயரங்கள் சேரும். கணினி, தொலைக்காட்சி,  சமூக ஊடகங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான எளிய சூழல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. இன்றோ அவை பல விதங்களில் வாரிசுகளின் மனத்தைக் குலைய வைக்கின்றன.
காரணிகள்
  • பெற்றோர் அதற்கு முக்கியக் காரணி. நடுத்தர குடும்பத்தினர் கடன் வாங்கியாவது உயர்ரக செல்லிடப்பேசியை  வாரிசுகளுக்கு வாங்கித் தருகின்றனர். மாலை முழுவதும் விளையாட்டு என்றார் மகாகவி பாரதியார். உடற்பயிற்சி, தூய காற்று பெறவும் நல்ல நண்பர்கள் தொடர்பு கிடைக்கவும் வழி சொன்னார் கவிஞர். ஆனால், இன்றோ மாலை, இரவு உறங்கும் வரை செல்லிடப்பேசியுடன் விளையாடி காலந்தள்ளும் குழந்தைகள், பிள்ளைகள் மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வளர் இளம் சிறுவர்களுக்கும் மாணவர்களுக்கும் செல்லிடப்பேசிகள் முக்கியமல்ல.
  • மேலும், இந்தக் கால திருமணங்களில்,  முயன்று ஈட்டிய பொருளைக் கொண்டு எளிய முறையில் தன் வாரிசுகள் திருமணத்தை பெற்றோர் நடத்தாமல் தன் பெருமையை ஊருக்குக் காட்ட, பகட்டாகச் செலவு செய்து இறுதியில் கடன்பட்டு சிரமப்படுகின்றனர். தேர்ந்து செய்து, திட்டமிட்டு, சீர்தூக்கி, ஆய்ந்து செலவு செய்யும் நிலையைக் கொண்டுவர ஒவ்வொரு தனிமனிதனும் பாடுபட்டால் நாட்டில் ஏழ்மை, வறுமை போன்ற நிலைகள் இல்லாமல் போகும். உழைப்பும், சிக்கனமும் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. உழைப்பு இல்லையேல் பொருள் இல்லை. வந்த பொருளைச் சேர்த்துப் பிடிக்கச் சிக்கனத் தன்மை வேண்டும். செல்வத்தை வளர்க்கும் தாய் சிக்கனம். பள்ளிகளில் படிக்கும் போதே மாணவச் செல்வங்களிடம் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிக்கும் பழக்கத்தை ஊட்டுதலில் பெற்றோருக்கு, ஆசிரியர்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உண்டு. பள்ளிகளில் வாரம் ஒருமுறையாவது சிறுசேமிப்பு என்ற பாடத்திட்டத்தை ஏற்படுத்தி, சேமிப்பவர்களுக்கு சிறந்த பரிசோ, கூடுதல் மதிப்பெண்ணோ தரப்படும் என்று அறிவித்தால் பயன் கூடும். மாணவர்களுக்கான அஞ்சலக சேமிப்புத் திட்டங்களைப் பற்றி எடுத்துரைக்கலாம். எளிமையாக இருந்து உழைப்பில் உயர்ந்த பெரியோர்களின் வரலாற்றைக் கூறி மாணவர்களை நல்வழிப்படுத்தலாம்.
பிரச்சினைகள்
  • பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள சேமிக்கப்பட்ட சொத்து உதவுகிறது. இன்றைய உலகில் உடல நலனைப் பாதுகாக்கப் பொருள் வளம் தேவைப்படுகிறது. தன்னிறைவு உடையவர்களாக இருக்கவும், முதலீடு செய்யவும், தேவையானவற்றை மட்டும் வாங்கவும், தேவைக்கும் பேராசைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணரவும், செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொடங்கவும் பணத்தை நாம் சேமிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் செல்லிடப்பேசிகள், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ் அப்') உள்ளிட்டவை மதிப்பற்ற நேரத்தை வீணாக்குகின்றன; நூல்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றை படிப்பதற்குத் தடையாகவும் உள்ளன. எனவே, இவற்றின் பயன்பாட்டைக் குறைத்தாலே வாழ்வில் ஒளி வீசும். காலச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முடியும்.
  • லாபம்-நஷ்டம் என்ற வகையில் அனைவரது வாழ்க்கையிலும் பொருளாதாரம் இணைந்துள்ளது. அதன் அடிப்படை உண்மைகளை நன்குணர்ந்து, தேவையறிந்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நம் வயிறு அறிந்து அளவாகச் சாப்பிட்டால், நோய்கள் ஏற்படாது; அதே போன்று அளவறிந்து வாழ்வு நடத்துபவரை எவ்வித துன்பங்களும் நெருங்காது. எனவே, சிக்கனம், சேமிப்பை தொடர்ந்து கடைப்பிடித்தால் சீரான, தரமான வாழ்வு நிச்சயம்.

நன்றி: தினமணி (19-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories