சித்தரஞ்சன் தாஸ்
அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்
- - - - - - - - - -
தேச பந்து
சி. ஆர் தாஸ் என்று அன்போடு அழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ் 1869 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி செல்வமிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் முன்னணி அரசியல்வாதி மட்டுமல்லாமல் புகழ்பெற்ற வழக்கறிஞரும் ஆவார். இந்திய தேசிய இயக்கத்திலும் பங்கு பெற்றிருக்கின்றார். மேலும், பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது சுயராஜ்ய கட்சியைத் துவங்கினார்.
சித்தரஞ்சன் தாஸ் பொதுவாக தேசபந்து என்று அழைக்கப்படுகின்றார். தேசபந்து என்றால் நாட்டின் நண்பன் என பொருள்படும். தன்னுடைய கல்லூரிப் படிப்பினை கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் படிக்கின்ற காலம் தொட்டே மாணவர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.
சுரேந்திரநாத் பானர்ஜி போன்றோரின் உரை அவரை மிகவும் கவர்ந்தது. 1883ல் லண்டனுக்குச் சட்டம் படிக்கச் சென்றார். மேலும், பல்கலைக்கழகங்களில் வங்காள மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்ற அவருடைய கருத்து சிறப்புக்குரியது அல்லவா!
.
இலக்கியத்தின் மீதான ஆர்வம்
வங்காள இலக்கியத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் எழுத்துக்கள் மீதுத் தீவிரக் காதல் வயப்பட்டார். அது மட்டுமல்லாமல் எண்ணற்றக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும் இலக்கியக் கழகங்களோடு இணைந்து சிறந்த பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
சி.ஆர். தாஸ் என்றாலே தேசியவாதி என்பதுதான் பலருடைய நினைவுக்கு வரும். ஆனால் , அவர் அற்புதமான கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்பதினை நம்மில் எத்தனை பேர் அறிவர்? தன்னுடைய கவிதை தொகுப்பினை மலன்சா, மாலா என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். மேலும், 1913 ஆம் ஆண்டு சகர் சங்கீத் எனப்படும் கடல்களின் பாடல்கள் என்னும் நூலினை இயற்றினார்.
அவருடைய மனைவியின் பெயர் பசந்தி தேவி. சுதந்திரப் போராட்டத்தில் அவரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றமைக்காக நீதிமன்ற உத்தரவின்படி கைதான முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. தம்பதிகள் இருவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்பது எத்துணை பெருமைக்குரிய விஷயம்!
.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பு
பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால், நம் சி.ஆர். தாசோ 1894 ஆம் ஆண்டில் பணத்தினை அள்ளித் தந்த தன் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
வரலாற்றில் குறிப்பிடத்தக்க அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்த கோஷினை தன் வாதத்திறமையினால் காப்பாற்றினார். கல்கத்தா மாகாணத்தின் தலைமை நீதிபதி கிங்ஸ்ஃபோர்டினை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டமைக்காக அரவிந்த கோஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டாம் முயற்சியில் இரண்டு ஆங்கிலப் பெண்மணிகள் இறந்தனர். எந்த ஒரு வழக்கறிஞரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால், நம் சி.ஆர். தாஸ் அதனைச் சவாலாக ஏற்றுக்கொண்டார். அதற்காக அரவிந்தரிடம் ஒரு பைசா கூட வாங்க வில்லை சி.ஆர். தாஸ். மாறாக தன் கைப்பணமான ரூ. 15000 ஐச் செலவழித்தார். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அந்தப்பணம் மிகப்பெரிய தொகை அல்லவா! மேலும் சி. ஆர். தாஸ் தன் உடல்நலத்தினை வருத்தித் தன்னைக் காப்பாற்றியதாக அரவிந்த கோஷ் நன்றியுடன் குறிப்பிட்டார் என்றால் சி. ஆர். தாஸ் அவர்களின் பெருமையை என்னவென்று சொல்வது?
.
நேதாஜியின் குரு
அனுசிலன் சமிதி (Anushilan Samiti) என்ற அமைப்பில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார் சித்தரஞ்சன் தாஸ். அது என்ன அனுசிலன் சமிதி என்கின்றீர்களா? பிரமதா மிட்டர் என்பவரால் துவங்கப்பட்ட இந்த அமைப்பானது நாட்டுக்காக தியாகம் செய்யக்கூடிய நூற்றுக்கணக்கான இளைஞர்களை தன்னுள் உள்ளடக்கியது. அந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் வங்காளத்தில் முன்னணி நபராக விளங்கினார். தன்னுடைய ஐரோப்பிய ஆடைகளை எரித்துக் காதித் துணிகளை அணிந்து கொண்டார். இந்திய தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னுடைய பணக்கார வாழ்வினைத் தியாகம் செய்தார். அது மட்டுமல்லாமல் சித்தரஞ்சன் தாசினை குருவாக கொண்டிருந்தார் நம் சுபாஷ் சந்திர போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
.
சி.ஆர்.தாஸின் சிந்தனைகள்
உள்ளாட்சி அரசாங்கம் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கிராமப்புறங்களின் உட் கட்டமைப்பைப் புதுப்பிக்கும் கருத்தினை அப்பொழுதே முன் வைத்தார். அவருடைய கனவு இன்று நிறைவேறி இருக்கின்றது. மேலும், குடிசைத் தொழிலுக்கு புது வடிவம் கொடுக்க எண்ணினார்.
சித்தரஞ்சன் தாஸ் Forward என்னும் செய்தித்தாளை துவங்கிப் பின்னாட்களில் அதன் பெயரை Liberty என மாற்றினார். கல்கத்தா மாநகராட்சி துவங்கப்பட்ட பொழுது அவரே முதல் மேயர் ஆவார். அகிம்சையில் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும், இந்து முஸ்லீம் ஒற்றுமையினை வலியுறுத்தினார். மோதிலால் நேருவுடன் இணைந்து 1923ல் சுயராஜ்ய கட்சியினை ஆரம்பித்தார்.
அவருடைய இறப்பிற்குச் சில மாதங்களுக்கு முன் தன்னுடைய வீடு உள்பட அனைத்து நிலங்களையும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். இன்றைய தலைமுறை இதனை அறிய வேண்டியது இன்றியமையாதது அல்லவா! மேலும், நாட்டில் கண்டிப்பாய் கடைபிடிக்க வேண்டியது கல்வியே என்று உறுதியாக கூறியுள்ளார். விதவை மறுமணத்திற்காக ஈஸ்வர சந்திர வித்யா சாகரின் இயக்கத்திற்கு நிதியுதவி அளித்தார்.
.
முடிசூடா மன்னர்
சித்தரஞ்சன் தாஸின் பெயரினாலாயே 1950 ஆம் ஆண்டு சித்தரஞ்சன் தேசிய காசநோய் நிறுவனம் உருவாக்கப்பட்டது. சித்தரஞ்சன் தாசின் மனைவி பசந்தி தேவியின் தேசபக்தியினைப் போற்றும் வகையில் பெண்களுக்கான பசந்தி தேவி கல்லூரி கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டது
மாபெரும் விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் பின் ஜூன் 16 ஆம் தேதி 1925 ஆம் ஆண்டு இறந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பொழுது அவர்களில் பெரும்பாலோர் சித்தரஞ்சன் தாசை வங்காளத்தின் முடிசூடா மன்னர் என்று வருணித்தனர். உண்மையில் வங்காளத்தின் முடிசூடா மன்னர் மட்டுமல்ல, அவர் இந்தியாவிற்கே முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் ஆவார்.
.
- - - - - - - - - - - - -