TNPSC Thervupettagam

சிபிஐ அதிகாரத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த முடியுமா?

February 4 , 2019 2131 days 1806 0
மாநிலங்கள் தங்களுடைய எல்லைக்குள் சிபிஐ இயங்குவதைத் தடுத்து தங்களது பலத்தைக் காட்ட ஏதேனும் சட்டப் பிரிவு அனுமதிக்கிறதா?
  • ஆமாம். சிபிஐ என்பது காவல் துறையின் அதிகாரங்களைக் கொண்ட தேசிய அளவிலான அமைப்பு. அதன் முதன்மை அதிகார எல்லை டெல்லி மற்றும் யூனியன் பிரதேசங்களோடு முடிந்துவிடுகிறது. காவல் துறை என்பது (குற்றங்களைக் கண்டறிதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல்) மாநிலப் பட்டியலில் உள்ளது.
  • மேற்கண்ட காவல் துறையின் பணிகளுக்கு வெளியே சிபிஐ இயங்குவதற்கு, அதுவும் மாநிலங்களின் ஒப்புதலோடு இயங்குவதற்கு மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது. ஆந்திரப் பிரதேசமும் வங்கமும் அந்த மாநில எல்லைக்குள் சிபிஐ இயங்குவதற்கான பொதுவான ஒப்புதலைத் திரும்பப்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதற்கு முன்னாலும் இப்படி நடந்திருக்கிறதா? ஏன்?
  • மாநில அரசுகள் தங்களது ஒப்புதலைத் திரும்பப்பெற்ற நிகழ்வுகள் நிறைய உண்டு. சிக்கிமில், முன்னாள் முதல்வர் நர்பகதூர் பண்டாரியின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தநிலையில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னால் மாநில அரசு ஒப்புதலை திரும்பப்பெற்றது. மத்திய-மாநில அரசுகளின் நல்லுறவு மோசமடைவதுதான், மாநில அரசுகள் தங்களது எல்லைக்குள் சிபிஐ இயங்குவதற்கான ஒப்புதலை திரும்பப் பெறுவதற்கு மிக முக்கியமான காரணம்.
  • எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ தவறாக உபயோகப்படுத்திப்படுகிறது என்று மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டப்படுகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநரகம், வருமான வரித் துறை போன்றவை தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்புகளின் காரணமாக ஆந்திரப் பிரதேசமும் வங்கமும் இந்த முடிவை எடுத்திருக்கின்றன.
எந்தச் சட்டத்தின் கீழ் இவ்வாறு செய்யப்பட்டது?
  • டெல்லி சிறப்பு காவல் துறை நிறுவகச் சட்டத்திலிருந்தே சிபிஐ தமக்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. உள்துறை அமைச்சகம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஏப்ரல் 1963ல் சிபிஐ தொடங்கப்பட்டது.
  • அச்சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் மத்திய அரசு குறிப்பிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சிபிஐ அமைப்பின் அதிகார வரம்பெல்லையை மாநிலங்களுக்கு நீட்டிக்க முடியும்.
  • எனினும், சிபிஐ அமைப்பின் அதிகாரங்களையும் அதிகார எல்லையையும் எந்தவொரு மாநிலத்துக்கும் அந்த மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நீட்டிக்க முடியாது என்று இந்த அதிகாரத்துக்கு பிரிவு 6 சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
மாநிலங்கள் தங்களது ஒப்புதலை திரும்பப்பெறுவதன் விளைவு என்னவாக இருக்கும்?
  • பொதுவான ஒப்புதலைத் திரும்பப் பெறுவது, அந்த மாநிலத்தில் சிபிஐ புதிய வழக்குகளைத் தொடங்குவதைக் கட்டுப்படுத்தும். எனினும், ‘காஸி எல் ஹென்ட்டப் தோர்ஜி’ (1994) வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒப்புதலை திரும்பப் பெறுவது வருங்காலத்தில் உருவாகும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்;
  • ஏற்கெனவே நடைபெற்றுவரும் வழக்குகள் அவற்றுக்கான தீர்ப்பை எட்டுவதற்கு அனுமதிக்கப்படும். சிபிஐ சில குறிப்பிட்ட வழக்குகளுக்காக மாநில அரசிடமிருந்து சிறப்பு அனுமதியைப் பெறவும் செய்யலாம்.
மாநில அரசின் ஒப்புதல் எந்தளவுக்குப் பலளிக்கும்?
  • பெரும்பாலான சமயங்களில், மத்திய அரசின் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு மட்டுமே மாநிலங்கள் ஒப்புதல் அளித்திருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சிபிஐ விசாரிக்க முடியும்.
  • மிசோரம், வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் நீங்கலாக நாடு முழுவதும் விசாரணைகளை நடத்துவதற்கு சிபிஐ ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.
சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுகின்ற வழக்குகள் என்னாகும்
  • உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஒரு குறிப்பிட்ட வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டால், அங்கு டெல்லி சிறப்பு காவல் நிறுவகச் சட்டத்தின் கீழாக மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் அதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
  • 2001ல் வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கொலைசெய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக 2010ல் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு இந்தவகையில் ஒரு முன்னோடி தீர்ப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories