TNPSC Thervupettagam

சி.சு.செல்லப்பா: காந்தி யுக அர்ப்பணிப்பு

April 3 , 2019 2063 days 3261 0
  • சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, விமர்சனம் என எழுத்தின் பல்வேறு தளங்களிலும் சி.சு.செல்லப்பா தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தபோதிலும் இவரது உயர்ந்த பங்களிப்பானது, 11 ஆண்டு காலம் கடும் தவமென அவர் நடத்திய ‘எழுத்து’ இதழில்தான் தங்கியிருக்கிறது.
  • நவீனத் தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சியையும் செல்லப்பாவின் இலக்கிய வாழ்வில் புத்தெழுச்சியையும் உருவாக்கிய ‘எழுத்து’ முதல் இதழ் 1959 ஜனவரியில் வெளிவந்தது. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் சகாப்தமாகவும் ஒரு மகத்தான இயக்க சக்தியாகவும் அமைந்தது.
செல்லப்பா
  • க.நா.சு.வின் ஆசிரியப் பொறுப்பில் இரண்டாண்டுகள் (1945-47) வெளிவந்த ‘சந்திரோதயம்’ இதழில் இணைந்து செல்லப்பா பணியாற்றியபோது, க.நா.சு.வின் பாதிப்பில் செல்லப்பாவுக்கு விமர்சன ஈடுபாடு ஏற்பட்டது. நாளடைவில் அது வளர்ந்து, தமிழ்ச் சூழலில் விமர்சனத்தின் தேவையை வெகுவாக உணர்ந்ததில், விமர்சனத்துக்கென்றே செல்லப்பா உருவாக்கிய இதழ்தான் ‘எழுத்து’. க.நா.சு.விடமிருந்து விமர்சன ஆர்வத்தை அவர் பெற்றிருந்தபோதும்
  • க.நா.சு.வின் ரசனைவழி தர நிர்ணய விமர்சன முறையை அவர் நிராகரித்தார். ஆங்கில விமர்சன நூல்களைத் தீவிரமாக வாசித்த இவர், படைப்பின் மேன்மையை எடுத்துரைக்க அலசல் விமர்சனமே உகந்தது என்று கருதினார். ‘எழுத்து’வில் செல்லப்பா அதிகமும் விமர்சனக் கட்டுரைகளே எழுதினார்.
  • ‘எழுத்து’ இதழை மனைவியின் நகைகளை அடகுவைத்தே தொடங்கினார் செல்லப்பா. விமர்சனத்துக்கென்று ‘எழுத்து’ தொடங்கப்பட்டபோதிலும், தற்செயல் நிகழ்வாகப் புதுக்கவிதை எனும் புதிய ஊடகத்துக்கான களமாகவும் அது அமைந்தது. புதுக்கவிதைகளும் புதுக்கவிதையின் இன்றியமையா முக்கியத்துவம் மற்றும் கால அவசியம் பற்றிய கட்டுரைகளும் இடம்பெறலாயின. காலத்தின் புனைவுக் குரலாகவும் விமர்சனக் குரலாகவும் ‘எழுத்து’ அமைந்தது. தமிழ் இலக்கியப் பரப்பில் புதுக்கவிதை அலை எழுந்தது. “இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துகளுக்குக் களமாக ‘எழுத்து’ அமைவதுபோலவே இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனைகளுக்கும் ‘எழுத்து’ இடம் தரும்” என்று அதன் முதல் இதழ் பிரகடனத்தில் செல்லப்பா குறிப்பிட்டிருக்கிறார். புது சோதனைகளுக்கு இடம் தர முன்வரும் சி.சு.செல்லப்பாவின் இந்தச் சிற்றிதழ் மனோபாவம்தான் ‘எழுத்து’ புதுக்கவிதை நீரோட்டத்துக்கான நதிமூலம்.
எளிய மனிதர்களின் வாழ்வியல்
  • ‘எழுத்து’ முதல் இதழில் சி.சு.செல்லப்பா தன் இலக்கிய ஆசானான ந.பிச்சமூர்த்தியின் எழுத்து இடம்பெற வேண்டுமென விரும்பினார். பிச்சமூர்த்தி புதிதாக எதுவும் எழுதித் தராத நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த அவரது ‘பெட்டிக்கடை நாரணன்’ என்ற புதுக்கவிதையையும், க.நா.சு.வின் இரண்டு கவிதைகளையும் வெளியிட்டார். ‘பெட்டிக்கடை நாரணன்’ கவிதையில் வெளிப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்வியல் ஒரு புதிய பரிணாமமாக அன்று அமைந்தது. அது அளித்த உத்வேகமும் புதிய கவிதை வெளியும் புதிய கவித்துவப் பாய்ச்சலுக்கு முகாந்திரமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த இதழ்களில் தி.சோ.வேணுகோபாலன்,
  • டி.கே.துரைஸ்வாமி (நகுலன்), பசுவய்யா (சுந்தர ராமசாமி) ஆகியோரின் கவிதைகள் புதிய பொருளம்சங்களோடும் கவித்துவப் பாதைகளோடும் வெளியாகின. அடுத்து தொடர்ந்த இதழ்களில் தருமு சிவராம் (பிரமிள்), சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன் எனப் புதுக்கவிதை இயக்கம் வலுவான தடம் பதித்தது.
  • விமர்சனக் களத்தில் வெங்கட் சாமிநாதனின் தார்மீக ஆவேசக் குரலும், பிரமிளின் இலக்கியக் கோட்பாட்டுக் குரலும் புதுக் குரல்களாக ‘எழுத்து’ இதழில் உரத்து ஒலித்து சூழலில் அதிர்வலைகளை எழுப்பின. ந.முத்துசாமி சிறந்த சிறுகதைப் படைப்பாளியாக வெளிப்பட்டார்.
  • ‘எழுத்து’ மாத இதழாகத் தொடர்ந்து 111 இதழ்கள் வெளிவந்து, 1968-ல் காலாண்டிதழாக மாறியது.
எளிய மனிதர்களின் வாழ்வியல்
  • 1970-ல் தன் நெடும் பயணத்தை முடித்துக்கொண்டது. 11 ஆண்டுகள் லட்சிய முனைப்போடு இதழை நடத்திய சி.சு.செல்லப்பாவுக்கு அதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு கட்டுக்கடங்காதது. அர்ப்பண உணர்வும் இலக்கிய தாகமுமே அவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க வைத்திருக்கிறது. “என் வாழ்க்கைப் பாதையில் முன்பாதியில் தேசத்துக்காக, பின்பாதியில் இலக்கியத்துக்காக” என்று அவர் மனம் இதை எளிதாக ஏற்றுக்கொள்கிறது.
  • சி.சு.செல்லப்பாவின் இலக்கியப் பாதையில் அடுத்த முக்கிய நிகழ்வாக அமைந்தது, ‘எழுத்து பிரசுரம்’. ‘எழுத்து’ இதழின் நான்காம் ஆண்டின்போது 1962-ல், சி.சு.செல்லப்பா ‘எழுத்து பிரசுரம்’ என்ற பதிப்பகம் தொடங்கி புத்தக வெளியீட்டிலும் ஈடுபட்டார். 1970-ல் ‘எழுத்து’ இதழ் நின்ற பிறகும் 1977 வரை பிரசுரம் நீடித்தது. இதன்மூலம் 50 புத்தகங்கள் வெளிவந்தன. இச்சமயத்தில் 60 வயதைக் கடந்த மெலிந்த தேகத்தோடு, இரண்டு கெட்டித் துணிப் பைகள் நிறைய தன் வெளியீடுகளோடு, கைக்கு ஒன்றாகச் சுமந்துகொண்டு கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்றார். தமிழ்த் துறை வளாகங்களில் இவருடைய லட்சியக் குரல் எதிரொலிக்கத் தொடங்கியது. கல்லூரிப் பாடத்திட்டங்களில் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் செறிவான பகுதிகளும் இடம்பெறத் தொடங்கின.
  • அவருடைய இலக்கிய வாழ்வின் இடைக்காலமாக அமைந்த 18 ஆண்டுகள் (1959-77) மிகுந்த உத்வேகமும் எழுச்சியும் கொண்டது. கடும் உழைப்பும் அசுர வேகமும் கூடியது. இதன் விளைவாக, இலக்கியச் சூழல் வளம் பெற்றது. அதேசமயம், இக்காலகட்டத்தில் இவருடைய படைப்பு வேகம் மட்டுப்பட்டது. “என் இலக்கியப் படைப்புப் பாதையில் விமர்சனமும் புதுக்கவிதையும் குறுக்கிட்டு என் படைப்புப் போக்கைப் பின்தள்ளிவிட்டாலும் இலக்கியப் பாதை விரிவானதுதான் எனக்குக் கிடைத்த புது லாபம்” என்று அதிலும் மகிழ்ச்சிகொள்கிறார் சி.சு.செல்லப்பா.
  • எனினும், ‘எழுத்து’ இதழ் தொடங்கப்படுவதற்கு முன்பாக சிறுகதை எழுத்தாளராக அடையாளம் பெற்றிருந்த சி.சு.செல்லப்பாவை ‘எழுத்து’ ஒரு விமர்சகராக அடையாளப்படுத்தியது. இவ்வளவுக்கும் ‘எழுத்து’ காலகட்டத்தில் அவர் ஒரு படைப்பாளியாகத் தன்னை வெளிப்படுத்தியபடிதான் இருந்தார். சிறுகதைகள் எழுதினார். கவிதைகள் எழுதினார். ‘நீ இன்று இருந்தால்’ என காந்தி பற்றிய குறுங்காப்பியம் எழுதினார். ‘வாடிவாசல்’ என்ற சிறு நாவலைக் கொண்டுவந்து அதை ‘எழுத்து’ வாசகர்களுக்கு இலவசமாக அனுப்பிவைத்தார். ‘ஜீவனாம்சம்’ என்ற நாவலை அதில் தொடராக எழுதினார். ‘முறைப் பெண்’ என்ற நாடகப் பிரதியை உருவாக்கினார். இவற்றையெல்லாம் ‘எழுத்து பிரசுரம்’மூலம் புத்தகங்களாகக் கொண்டுவந்தார். அவருடைய அதுவரையான 109 சிறுகதைகளை ஏழு தொகுதிகளாக வெளியிட்டார். தன் காலத்தில் தன் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற மனோவேகத்துடன் செயல்பட்டார். தன் கால இலக்கியப் பாதையை விரிவாக்கிய சி.சு.செல்லப்பாவின் இலக்கிய இயக்கம் ஓர் ஒப்பற்ற நிகழ்வு!

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories