TNPSC Thervupettagam

சூரிய மின்உற்பத்திக் கூட்டுறவு: வேளாண் சிக்கலுக்கு முக்கியத் தீர்வு!

February 26 , 2019 2145 days 1599 0
  • இந்திய வேளாண் பொருளாதாரத்தில் மிகப் பெரும் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த ஆண்டு முதல் முறையாக, இந்தியப் பால் உற்பத்தி மதிப்பு, உணவு உற்பத்தி மதிப்பை விட அதிகமானது இந்த ஆண்டில்தான்.
  • 1970-களில், வெண்மைப் புரட்சிக்கான திட்டம் தீட்டப்பட்டபோது, அது விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் தரும் ஒரு திட்டமாகத்தான் உருவாக்கப்பட்டது.
வணிகத்தில் குறுகிய பார்வை
  • இன்றைக்கு அது விவசாயிகளின் மிக முக்கிய வருமானமாக மாறியிருக்கிறது.
  • 1975-ல், புகழ்பெற்ற மேலாண் சிந்தனையாளரான தியடோர் லெவி முக்கியமான கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
  • ‘மார்க்கெட்டிங் மையோபியா’ (‘வணிகத்தில் குறுகிய பார்வை’ என்று பொருள் கொள்ளலாம்) எனும் தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், பெரும் வணிக நிறுவனங்கள் தங்கள் குறுகிய பார்வையின் காரணமாக, மாற்றங்கள் வருவதை உணராமல் வீழ்ச்சியைச் சந்தித்தது எப்படி என்பதை அக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தார்.
  • அதில் ஹாலிவுட் வணிகத் திரைப்பட நிறுவனங்களை உதாரணமாகக் காட்டியிருந்தார். அவை, வணிகத் திரைப்படங்கள் எடுப்பதுதான் தங்கள் குறிக்கோள் என்று குறுகிய பார்வையுடன் இயங்கிவந்தன.
  • மாறாக, அந்நிறுவனங்கள் தாங்கள் ‘கேளிக்கை வணிகத்தில்’ இயங்கிவருகிறோம் என்று தங்கள் நோக்கத்தை விரிவடையச் செய்திருந்தால், தொலைக்காட்சி உள்ளே நுழையும்போது அதைப் பின்பற்றித் தொலைக்காட்சி வணிகத்தில் நுழைந்திருக்க முடியும்; வீழ்ச்சியைத் தடுத்திருக்க முடியும் என்பது அவர் வாதம்.
  • இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
உணவுத் தற்சார்பின் முக்கியத்துவம்
  • இன்று இந்திய வேளாண்மை ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. 1970-களில், 2.5 ஹெக்டேராக இருந்த சராசரி நில அலகு, இப்போது ஒரு ஹெக்டேருக்கும் கீழே வந்துவிட்டது.
  • இடுபொருள் விலை உயர்வு, வேளாண் கூலி உயர்வு, அருகும் நீராதாரங்கள், விளைவித்த பொருளுக்கு நிச்சயமற்ற விலை என்பன போன்றவை விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்றன. பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
  • மிகச் சிறிய அலகுப் பண்ணையை வைத்து புத்திசாலித்தனமாகத் திட்டமிடுதல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றை விவசாயிகளால் தனிப்பட்ட முறையில் செய்துவிட முடியாது.
  • இன்றும் இந்திய வேளாண்மைக்கான தீர்வாக, உற்பத்திப் பெருக்கம்தான் அரசால் முன்வைக்கப்படுகிறதே தவிர, பண்ணை லாபம் என்னும் கருதுகோள் முன்வைக்கப்படுவதில்லை.
  • பெரும் பொருளாதார அறிஞர்களின் பார்வையும், திட்டக் குழுவின் எண்ணங்களைத்தான் பிரதிபலிக்கின்றன.
  • இந்தியாவில்தான் வேளாண்மைக்கு அதிகமான மானியங்கள் கொடுக்கப்படுகின்றன என்பது இங்கு நிலவும் பொதுப்புத்தி.
  • உண்மையில், பல்வேறு நாடுகளில் இந்தியாவைவிட மிக அதிகமாக வேளாண்மைக்கு மானியங்கள் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் நாட்டில் விளையும் பொருட்களின் விலை மிகக் குறைவாக இருக்கிறது.
  • எந்த நிலையிலும், எந்த நாடும் தன் உணவுத் தற்சார்பை விட்டுக் கொடுக்காது – அது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்பதால்.
பிரச்சினைகளின் உச்சம்
  • பிரச்சினைகள் உச்சமடைந்து, முட்டுச் சந்தில் நிற்கும் தருணங்களை வரலாறு நமக்குத் தரும் அரிய வாய்ப்புகள் என்றே சொல்ல வேண்டும்.
  • அப்படியான தருணங்களில்தான் பிரச்சினைகளுக்கான புதிய தீர்வுகளைப் பற்றிப் பேச முடியும், மக்களும் அரசும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் இருக்கும்.
  • 1991-ல் இந்தியாவில் நிகழ்ந்த அந்நியச் செலாவணிச் சிக்கல்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொணர வழிவகுத்தன என்பது நம் கண் முன்னே நிகழ்ந்த வரலாறு.
உழவர் சூரியஒளிக் கூட்டுறவுத் திட்டம்
  • தியடோர் லெவியின் பார்வையில், விவசாயிகளின் வணிகத்தைப் பார்க்கும்போது இரண்டு முக்கியக் கேள்விகள் எழுகின்றன.
  • விவசாயிகள் வேளாண்மை மட்டும்தான் செய்ய வேண்டுமா அல்லது லாபகரமான ஒரு தொழிலை நடத்த வேண்டுமா?
  • இப்படியான கேள்விகளை முன்வைக்கும்போது, நமக்குத் தெளிவான விடை கிடைக்கும். உழவர்களுக்கு இன்று கிடைக்கும் வருமானத்தைவிட அதிக வருமானம் கிடைக்க வழிகள் திறக்கும்.
  • அப்படி ஒரு வழிதான், ‘உழவர் சூரியஒளிக் கூட்டுறவுத் திட்டம்’.
  • பால் புரட்சி தொடங்கிய குஜராத்தின் கேடா மாவட்டத்தின் டுண்டி கிராமத்தில் அப்படி ஒரு முயற்சி தொடங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது.
  • ஒன்பது விவசாயிகள் இணைந்து, தங்கள் பண்ணைகளில் சூரிய ஒளித்தகடுகளை நிறுவி மின்உற்பத்தி செய்கிறார்கள்.
  • அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சக்தியில், தங்களது பண்ணை உபயோகம் போக மீதியை, மின் ‘க்ரிட்’டுக்கு அளிக்கிறார்கள். அரசு தங்களுக்கு அளிக்கும் இலவச மின்சார மானியத்தை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். தங்கள் தேவை போக அதிக மின்உற்பத்தி செய்து ஆண்டுக்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை கூடுதல் வருமானமும் பெறுகிறார்கள்.
சூரிய மின் ஆற்றலின் நன்மைகள்
  • விவசாயிகளுக்குப் பகலில் மின்சாரம் கிடைக்கிறது. கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
  • வேளாண்மைக்குத் தேவைப்படும் மின்சாரம், தொலைவிலிருந்து கொண்டு வரப்படும்போது 23% வீணாகிறது. பண்ணையிலேயே மின்உற்பத்தி செய்யப்படுவதன் மூலம், மின்சாரம் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது.
  • உற்பத்தி பரவலாகும்போது, நுகர்வும் அருகிலேயே இருப்பதால், மற்ற துறைகள் உபயோகிக்கும் மின்சாரமும் அதிகம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
  • சூரியஒளி சக்தி என்பதால், சூழல் கேடுகள் தவிர்க்கப்படுகின்றன.
  • விளை பயிர்களில் ஒரு வருமானம், பாலில் ஒரு வருமானம், மின்உற்பத்தியில் ஒரு வருமானம் என மூன்று வழிகளில் விவசாயிக்கு வருமானம் வரும்போது, மொத்த வேளாண் வருமானம் உயரும்.
  • வேளாண்மையைப் பொறுத்தவரை, மழை, விளைபொருட்களுக்கு நல்ல விலை, இடுபொருள் விலை உயர்வு என்பன போன்ற முக்கிய விஷயங்கள் வருமானத்தைத் தீர்மானிக்கின்றன.
  • சூரியஒளி மின்உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபடும்போது இதுபோன்ற காரணிகள் இல்லாமலேயே சீரான வருமானத்துக்கு வழிவகுக்கப்படும்.
  • பெரும் சூரிய ஒளித்திட்டங்களுக்காக, விளைநிலங்களை உழவர்கள் இழக்கும் நிலை இருக்காது.
  • இது அதிக உற்பத்தி எனும் தொழில் முறையில் இருந்து, அதிக மக்கள் செய்யும் உற்பத்தி என மாறும் காந்திய வழியாகும்.
  • இந்தத் துறையை விவசாயிகள் வசம் கொடுத்தால், இந்தியாவின் வேளாண்மை பெரும் சிக்கலிலிருந்து மீளும்.
 

நன்றி

பாலசுப்ரமணியம் முத்துசாமி,

இந்து தமிழ் திசை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories