TNPSC Thervupettagam

செம்மொழி வளர மும்மொழி!

June 27 , 2019 1830 days 1246 0
  • வலுவான கூக்குரல் எழும் முன்பே ஹிந்தி இல்லாதவாறு மும்மொழிக் கொள்கையை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அறிவித்துவிட்டார்.
  • பிரிட்டிஷ் ஆட்சியில்தான் இந்தியா என்ற தேசமே  உருவானது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பிருந்த இந்தியா, 543 சமஸ்தானங்களாகவே இருந்தது. பூகோள ஆசிரியர்கள் இந்தியாவை உபகண்டம் என்றே கூறியுள்ளனர். இவற்றை இணைத்துத்தான் இந்தியா ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது.
மொழி
  • இந்தியாவை தேசமாக ஒப்புக் கொள்வோமானால், இந்தியா என்பது ஜப்பான் போல ஒரு மொழி பேசுகிற தேசம் அல்ல. ஒரு தேசம், ஒரு மொழி என்பதும், ஒரு தேசம் பல மொழிகள் என்பதும் சம எடையுள்ளதுதான். பல மொழிகளைப் பேசினாலும் தேசம் ஒன்றே என்கிற புரிதல் அவசியம்.
  • அரசியல் சாசனத்திலேயே முடிந்த அளவுக்கு 22 மொழிகளை இனங்கண்டு, அவற்றைத் தேசிய மொழிகளாகப்  பதிவும் செய்துள்ளோம்.
  • இந்நிலையில், ஓர் இந்தியன் 22 மொழிகளையும் படிக்கக் கடமைப்பட்டவன் என்றாலும் அது சாத்தியமில்லை என்பதால்தான், குறைந்தபட்சம் மூன்று மொழிகளையாவது கற்பது தர்க்க ரீதியானது. கட்டாயம் தாய்மொழி; உலகத் தொடர்பிற்கு ஆங்கிலம்; இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஓர் இந்திய மொழி.
  • ஆங்கில மொழி உலக மொழி என்பதிலேயே விமர்சனம் உண்டு.  ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய மொழிகளையும் மகாகவி பாரதி, மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்; என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ? சென்றி டுவீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று கூறினார்.
காரணங்கள்
  • காரணம், தாய்மொழிகள்தான் சுய சிந்தனைகளை வளர்க்கக் கூடியவை. விஞ்ஞானம் அப்படித்தான் வளர்ந்தது  என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்துக்குள் மூன்றாம் மொழி என்ற முக்காடு போட்டு ஹிந்தி மொழி ரகசியமாகப் புகுத்தப்படுகிறது என்பவர்கள், இந்தியா ஒரு தேசமாக உருவாகி விடுமானால், தமிழுக்கு ஆபத்து எனப் பீதி அடைகிறார்கள். 1965-இல் தமிழகத்தில் மொழிக் கலவரம் ஏற்பட்டது. அதற்கான அரசியல் ஆதாயத்தை 1967 தேர்தலில் தி.மு.க. அறுவடை செய்தது; அதாவது காங்கிரஸ் ஆட்சி கைமாறியது. 1967 தேர்தலுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணா, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை உருவாக்கினார்.
தமிழகம்
  • 1967-இல் தமிழகத்தில் கடுமையான அரிசிப் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார்கள் என்ற உண்மை, வரலாற்றுப் பக்கங்களில் ஒளிந்துகொண்டுள்ளது. அப்போது தேர்தல் பிரசாரம் செய்த அண்ணா, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், 1 ரூபாய்க்கு 3 படி லட்சியம், 1 படி நிச்சயம் என்று பாமர மக்களைக் கவரும் வகையில் பேசினார். மேலும், இதனை நிறைவேற்றவில்லை என்றால் முச்சந்தியில் வைத்துச் சவுக்கால் அடிக்கலாம் எனவும் பேசினார்.
  • அது மட்டுமல்ல. அன்றைக்கு வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒரு தொழிலாளி பற்றிய  சுவரொட்டியில் கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடிபட்டுச் செத்தான் என்ற விளம்பரம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்குகளைத் திசை மாற்றியது. 1965-இல்  ஹிந்தியை எதிர்த்து களத்தில் தி.மு.க. போராடவில்லை. தூண்டிவிடப்பட்டு மாணவர்கள்தான் போராடினர். ஹிந்தி பிரச்னையால்தான் தி.மு.க. 1967-இல் ஆட்சிக்கு வந்தது எனக் கூறுவது வரலாற்றுத் திரிபாகும். மாறாக, தி.மு.க. ஆட்சிக்கு வர அரிசிப் பஞ்சம் உதவியது.
  • ஹிந்தியைத் தவிர்த்த அண்ணாவின் இரு மொழிக் கொள்கை தமிழுக்கு முக்கியத்துவம் தராமல், ஆங்கிலத்துக்கு ஆதரவாக அமைந்துவிட்டது. அப்போதே, இரு மொழிக் கொள்கையில் ஆங்கிலத்தைப் போல தமிழ்மொழி கட்டாயம் இல்லையே என்று அண்ணாவிடம் ம.பொ.சி. சுட்டிக்காட்டியதை மறந்துவிட முடியாது. ம.பொ.சி.க்கு அண்ணா கூறிய சமாதானம், இப்போதுதான் ஆட்சி அமைந்திருக்கிறது. உரிய நேரத்தில் இதனைச் சரிசெய்து விடலாம் என்பதுதான்.
  • இந்தியா என்கிற தேசத்தில் தமிழ்நாடு ஒரு மாநிலமாக இருப்பதால்தான் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரியில் நமது உரிமை நிலைநாட்டப்பட்டது. மத்திய அரசின் உத்தரவின்படி நமது பங்குக்கான பாசன நீரைக் கேட்க முடிகிறது. இதேபோன்று முல்லைப்பெரியாறு அணையிலும், பாலாற்றில் தடுப்பணை கட்டுவதைத் தடுக்கவும் மத்திய அரசை அணுக முடிகிறது. இந்தியா என்ற இந்தக் கட்டமைப்பில் தமிழ்நாடு மாநிலமும் உள்ளதால், நமக்குப் பல ஆதாயங்கள் உண்டு.
  • உ.பி., ம.பி., தில்லி, ராஜஸ்தான், பிகார் முதலிய மாநில மக்களுக்கு ஹிந்தி புதிதல்ல. இந்த மாநில மக்களின் தாய்மொழிகளுக்கும், ஹிந்திக்கும் அதிக வேறுபாடு இல்லை. உருதுக்கும், ஹிந்திக்கும்கூட அப்படித்தான் எனலாம். இப்படிப் பார்த்தால், இந்திய மக்கள்தொகை 130 கோடியில், பெரும்பான்மையினருக்கு ஹிந்தி மொழி ஏற்கெனவே தெரியும். ஆங்கிலம்தான் அநேகருக்குத் தெரியாது.
  • 50 ஆண்டுகளுக்கு முன்பு 1965-களிலேயே தென்னிந்தியாவின் 3 மாநிலங்களிலும்  மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. அதனால் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் முதலிய தென் மாநிலங்களிலும், மேலும், ஹிந்தி பேசாத ஒடிஸா, வங்காளம்  முதலிய வட மாநிலங்களிலும் அமல்படுத்தியதால் ஹிந்தி தெரிந்தவர்கள் அதிகரித்தனர்.
  • ஆனால், தமிழ்நாட்டின் வரலாறு சற்று வித்தியாசமானது. இங்கே இருந்த நீதிக் கட்சி இந்தியாவின் விடுதலைக்குப் போராடி வந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிரியாக இருந்த கட்சி; ஆனால்,  ஆங்கிலேய ஆட்சிக்கும், மெக்காலேயின் ஆங்கிலக் கல்விக்கும் ஆதரவாக இருந்தது.
50 ஆண்டுகளுக்கு முன்பு 
  • தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலாக்கப்பட்ட ஹிந்தி எதிர்ப்பை இன்னும் தொடர வேண்டுமா என்பதை மறு பரிசீலனை செய்வது அவசியம்.  நமது மாநில இரு மொழிக் கொள்கையை ஒரு நிபந்தனையுடன் மும்மொழிக் கொள்கையாக்கி உள்ளதை வரவேற்கலாம், வழிமொழியலாம். ஹிந்தி மொழியைக் கட்டாயமாகப் படிக்காமல், விரும்பினால் படிக்கலாம். விரும்பாவிட்டால், ஏதேனும் ஓர் இந்திய மொழியைப் படிக்கலாம். ஆனால், மூன்று மொழிகளைப் படிப்பது அவசியம்.
  • மும்மொழித் திட்டம் வேண்டாமென்றால், ஆங்கிலத்தின் மீதுதான் அதிகம் கவனம் செலுத்தப்படும். தாய்மொழியான தமிழ் தவிர்க்கப்படுவது தொடரும்.  மும்மொழிகளைக் கற்பிக்கும் கர்நாடகம், கேரளம், ஆந்திரத்தில் கன்னடத்தையோ, மலையாளத்தையோ, தெலுங்கையோ அந்த மாநில மாணவர்கள் படிப்பதைத் தவிர்க்கவே முடியாதுஇன்னும் சொல்ல வேண்டுமானால், கன்னடத்தைக் கட்டாயமாகப் படிக்காதவர்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேறலாம் என்கிறது மாநில அரசு. மேலும், கன்னடத்தைக் கற்பிக்காத பள்ளிகளை அரசு மூடிவிடும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது. இதே நிலைதான் கேரளத்திலும் உள்ளது. மூளையின் ஆரோக்கியத்துக்கு ஓயாது சிந்திப்பது அவசியம்.  குழந்தைகளுக்கு அவர்களது பருவத்தில் எத்தனை மொழிகளைக் கற்பித்தாலும் மூளை அவற்றை உரம்போல உறிஞ்சிக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கும்.
  • பாரதி சொன்னதுபோல, ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என விளையாட்டுப் பள்ளிகள்தான் பாப்பாக்களுக்கு இப்போது தேவை. அங்கே நடக்கும் கற்றல் ஒருவித மகிழ்ச்சியான அனுபவமாக அமையும் என்கிறார் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன். பின்லாந்தில் 7 வயதில்தான் வகுப்பறைக் கல்வியே தொடங்குகிறது. இந்தியாவில் கல்வியாளர்களைவிட, பகுத்தறிவுவாதிகள், இடதுசாரிகள், மதச்சார்பற்றவர்கள், தமிழர் வாழ்வுரிமைவாதிகள்தான் மும்மொழிக் கொள்கை குறித்துப் பேசுகின்றனர்.
  • கற்பித்தலைத் திணிப்பு என்கிறார்கள். அண்ணாவின் இரு மொழிக் கொள்கை அகில இந்தியாவிற்கும் விரிவாக்கப்படுவதற்குரிய தொலைநோக்குடையது  என்கிறார்கள். தமிழகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து துண்டிப்பதற்குத்தான் இது பயன்படுகிறது. மும்மொழியில் ஹிந்தி இருப்பது ஹிந்தி பேசுகிறவர்களுக்கு எளிதாகவும், ஹிந்தி பேசாதவர்களுக்குக் கஷ்டமாகவும் இருக்கும் என்றார் அண்ணா. எல்லோருக்கும் சமமான கஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ஹிந்தி பேசுபவர்களுக்கு ஆங்கிலத்தைக் கட்டாயமாக்க யோசனை சொன்னவர் அண்ணா. ஏற்கெனவே, பெரும்பான்மையினருக்கு ஹிந்தி தெரியும்.
  • மீதமுள்ள மிகச் சொற்பமானவர்கள் ஹிந்தியைக் கற்றுக் கொள்வது தீராத பாவமாகிவிடாது.கஷ்டங்களை எல்லோருக்கும் சமமாக்குவதைவிட, ஹிந்தி தெரிந்த குழந்தைகளைக் கஷ்டத்திலிருந்து விடுவிப்பதும், ஹிந்தி தெரியாத பள்ளிக் குழந்தைகள் விளையாட்டாகவே அதனைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுவதும்தானே நல்ல சிந்தனை.

நன்றி: தினமணி (27-06-2019)  

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories